செவ்வாய், 8 டிசம்பர், 2020

உங்களுக்கு நிகரானவர் யார்? (9.12.2020)

உங்களுக்கு நிகரானவர் யார்?

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் நம்மை எப்போதும் காக்கின்றார். அவர் எப்போதும் நம்மை காப்பதிலேயே கருத்தாய் இருக்கின்றார்.  அவர் பலரை காத்திருக்கின்றார். அவர் வலிமையானவர். அவர் ஆற்றல் மிக்கவர். அவரை விட வலிமை வாய்ந்தவர் எவருமில்லை. வறியவருக்கும் வலிமை தருபவர் அவர் என்ற எண்ணங்களின் அடிப்படையில் இறைவனுடைய வல்லமையைப் பற்றி எசாயா இறைவாக்கினர் எடுத்துரைப்பதை இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம். ஏன் எசாயா இறைவாக்கினர் இத்தகைய வார்த்தைகளை கூறுகிறார் என்றால்,  இஸ்ரயேல் மக்கள் அனைவரும் பாலஸ்தீன அடிமைத்தனத்தில் இருந்த தருணங்களில் அங்கிருந்த மக்கள் தங்களுடைய நம்பிக்கையை இழந்து கொண்டிருந்தார்கள். அந்த மக்களுக்கு நம்மை அடக்கி ஆளக்கூடிய நம்மை ஆட்சி செய்யக்கூடிய அடிமைப்படுத்தியுள்ள இந்த பாலஸ்தீனியரை விட இறைவன் மேலானவர். அவர் வலிமை உள்ளவர். வல்லமை மிக்கவர். அவர் நம்மை வெற்றி பெறச் செய்வார். அடிமை நிலையிலிருந்து மீட்டெடுப்பார். விடுதலையை தருவார். உரிமையை நமக்கு வழங்குவார். நமது சொந்த நாட்டிற்கு திரும்ப செய்வார், என்ற எண்ணங்களின் அடிப்படையில் சோர்வுற்ற மனங்களுக்கு ஆறுதல் தரக்கூடிய, ஊக்கம் ஊட்டக்கூடிய வார்த்தைகளை, இறைவார்த்தைகளை எசாயா இறைவாக்கினர் உரைப்பதைத் தான் இன்றைய முதல் வாசகமாக நாம் பார்க்கின்றோம்.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட பெரும் சுமை சுமந்து சோர்ந்திருப்போரே! எல்லோரும் என்னிடம் வாருங்கள்! நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்! என இயேசு கிறிஸ்து அழைக்கக்கூடிய செய்திகளை நாம் வாசிக்கின்றோம். இந்த உலகத்தில் நமக்கு நிகரானவர் யார்? என்ற கேள்வியை எழுப்பினால், நமக்கு நிகரானவர் நாம் மட்டும்தான். இந்த உலகத்தில் பல நேரங்களில் நாம் துன்பங்களைக் கண்டு துவண்டு போகிறோம். வாழ்க்கையில் இனிமேல் எந்த விதமான முயற்சிகளிலும் ஈடுபட முடியாது. எடுக்கக்கூடிய எல்லா முயற்சிகளிலும் நாம் தோல்வியையே சந்திக்கின்றோம், என்றெல்லாம் எண்ணி, பல நேரங்களில் நாம் முடங்கிப் போக கூடியவர்களாக இருக்கிறோம். ஆனால் முடங்கி விடாதீர்கள். உங்களால் முடியும் என்ற செய்தியினை இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு உணர்த்துகிறார். சுமைகள் என்பது எப்போதும் சுமைகளாகவே இருப்பதில்லை. சுமைகளுக்குப் பின்னால் சுகங்கள் ஒளிந்திருக்கின்றன. சுமைகள் நம்மை விட்டு மறையும் பொழுது சுகங்களை நம்மால் கண்டுகொள்ள முடியும். சபை உரையாளர் புத்தகத்தில் சபை உரையாளர் கூறுகிறார், ஒரு மனிதனுடைய வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகிறது. எது எப்போது வரும் என்பதை அறியாத வண்ணம் இறைவன் அதனை வழங்குகிறார் எனக் குறிப்பிடுகிறார்கள். சுமைகளை கடக்கும்போது சுகங்களை நாம் கண்டுகொள்ள முடியும். ஆனால் பெரும்பாலும் இன்று யாரும் சுமைகளை ஏற்றுக் கொள்வதில்லை. எப்போதும் துன்பத்தை யாரும் விரும்புவதில்லை. வாழ்க்கையில் எல்லாம் எளிதாக இருக்கவேண்டும். சுமைகளே இருக்கக் கூடாது என எண்ணக் கூடியவர்களாக நாம் இருக்கிறோம். ஆனால் சுமைகளைச் சுமப்பவர்கள் தான் மற்றவர்களுக்கு சுமைகளை தரக்கூடாது என்ற எண்ணத்தோடு செயல்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

கருவை சுமக்கும் தாய்க்கு என்றும் குழந்தை சுமை இல்லை.
கரு விழி சுமக்கும் இரு விழி அதற்கு இமைகள் சுமை இல்லை.
உலகின் பாவம் சுமக்கும் தோள்களில் நான் ஒரு சுமை இல்லை.
உயிரை ஈயும் உன் சிறகின் நிழலில் இதயம் சுமை இல்லை.‌ 
              என்ற பாடல் வரிகள் சுகமான சுமைகளை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
 பெற்றோர்கள் தங்களுடைய சுமைகளை தங்கள் பிள்ளைகள் சுமக்கக் கூடாது என்பதற்காக, அவர்களுக்காக இவர்கள் சுமைகளை ஏற்றுக்கொள்கிறார்கள். மிகச் சில பள்ளிகளில் ஆசிரியர்கள் கூட பெற்றோரின்  பொறுப்பு ஏற்று மாணவர்களின் பொருளாதாரச் சுமைகளை ஏற்றுக்கொண்டு மாணவர்களின் இயல்பான கல்விக்கு வழி வகுக்கிறார்கள். பெற்றோர் பிள்ளைகளிடம் காட்டக்கூடிய இந்த அன்பைத் தான் இறைவன் இன்று நம்மிடம் காட்டுகிறார். நாம் சுமைகளைக் கண்டு துவண்டுவிடாமல், சுமைகளை சுகங்களாக ஏற்கப் பழக வேண்டும். சுமைகளுக்குப் பின்னால் இருக்கக்கூடிய சுகங்களை கண்டு கொள்ளக் கூடியவர்களாக நாம் இருக்க இன்றைய நாளில் இறைவன் நம்மை அழைக்கின்றார். 

 இந்நாளில் சுமைகளைக் கண்டு துவண்டு போகாமல், துணிவோடு எழுந்து நின்று தொடர் முயற்சியின் மூலமாக, சுமைகளை எல்லாம் சுகங்களாக மாற்றிக் கொள்ள இறைவன் இன்றைய நாளில் இறைவன் நமக்கு அழைப்பு விடுக்கின்றார். அழைக்கக்கூடிய ஆண்டவர் இயேசுவின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாக, சுமைகளை கடந்து சுகங்களை கண்டு கொள்ளக் கூடியவர்களாக, இன்றைய நாளில் நாம் நமது சுமைகளை சுமக்கின்றவர்களாக, சுமைகளுக்குப் பின்னால் மறைந்துள்ள சுகங்களை கண்டுகொள்ள இயேசுவின் பாதையில் பயணத்தைத் தொடர்வோம்.

1 கருத்து:


  1. இந்த உலகத்தில் நமக்கு நிகரானவர் நாம் மட்டும்தான் என்ற கருத்து மிகவும் அருமை! தன் நிலையை உணர்ந்து வளர்ச்சிப்பாதையில் ஒவ்வொருவரும் தன்னை வழிநடத்த உற்சாகமூட்டும் கருத்துக்கள்! தங்களின் பணிகள் சிறக்க ஜெபிக்கிறோம்!👏👏👏👏👏

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...