ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு. இது நம் அன்னை அமல உற்பவிக்கு புகழ்பாடும் காலம். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூற இதுவே தகுந்த காலம்.
ஜென்ம பாவம் ஒரு வினாடிகூட அணுகாத பாக்கியம் பெற்ற அன்னை நம் அமல அன்னை. இவரது ஆன்மாவின் அழகைக் கண்டு கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு நாளன்று கபிரியேல் தூதர் "அருள்மிக பெற்றவரே வாழ்க!" என்று வாழ்த்தினார். பாவமற்ற வாழ்வு வாழ்வதற்கான கொடை இறைவனால் நம் அன்னைக்கு கொடுக்கப்பட்டாலும் அதை தன் விசுவாச முயற்சியால் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டார். கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு வாழ்ந்ததன் காரணமாக, "தான் கடவுளுக்குச் சொந்தம்" என்ற உணர்வோடு கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் மிகவும் கருத்தாய் இருந்த காரணத்தினாலும் மரியாள் இன்னும் அமல அன்னையாக காட்சி தருகின்றார். கடவுளால் நிரப்பப்பட்ட நம் அன்னையை வாழ்வின் இறுதிவரை பாவம் அணுகவில்லை. மாறாக ஒளி நிறைந்த கடவுளை அனுபவித்து வாழ்ந்தார். "நாமே அமல உற்பவம்" என்று அன்னை, பலமுறை சிறுவர் சிறுமிகளுக்கு தன்னை வெளிப்படுத்தியுள்ளார். இதனை வேத சத்தியமாக 1854 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 8ஆம் நாள் திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் அவர்கள் "கன்னி மரியா அமல உற்பவி" என்று பிரகடனம் செய்தார்.
அமலியாய் உதித்து அலகையை மிதித்து, ஆன்மீகத்தில் நாளும் வளர்ந்திட நம்மை அழைக்கும் அன்னையின் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட அன்னையாம் திருஅவை இன்று நம்மை அழைக்கின்றது. இறைவன் தனக்கு கொடுத்த அமல உற்பவம் இன்னும் கொடையை தனது வாழ்வின் இறுதி வரை போற்றி வாழ்ந்த நம் அன்னையை போல, நாமும் இறைவன் நமக்கு அளித்திருக்கும் நல் வரங்களையும் அருட்கொடைகளையும் அவரின் இறைப்பணிக்காக அர்ப்பணித்து அவரைப் போற்றி வாழ அன்னையின் அருளை நாடுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக