உங்களுள் யார் முன்வருவது?
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகத்தில் எலியா செய்த வல்ல செயல்கள் குறித்து பேசப்படுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகத்தில்எலியா முதலில் வந்து அனைத்தையும் சரி செய்வார் என்று சொல்லக்கூடியவர்களிடம் இயேசு! எலியா ஏற்கனவே வந்து விட்டார். அவரை நீங்கள் கண்டு கொள்ளவில்லை என்று சொல்கிறார். இன்று நாம் வாழக்கூடிய இந்த சமூகத்தில் கூட பலரும் பல நேரங்களில் யார் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்குவது? யார் நல்லது செய்வது? யார் அனைத்தையும் சரி செய்வார்? தற்போது தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்ற சூழலில் கூட யார் நல்லாட்சியை தருவார்? யார் வந்தால் விவசாயிகள் பிரச்சினை முடிவுக்கு வரும்? யார் வந்தால் அனைவருடைய வாழ்விலும் விடிவுகாலம் கிடைக்கும்? என்றவாறு பலவிதமான கேள்விகளில், யார் முன்வருவது? யார் வருகிறார்? என்ற எண்ணமானது நிலவிக் கொண்டிருக்கிறது. நாமும் கூட இயேசுவின் பிறப்புக்காக காத்திருக்கிறோம். எப்போது இயேசு பிறக்கவிருக்கிறார்? எங்கு பிறக்கவிருக்கிறார்? என்று தொடக்க காலத்தில் மக்கள் தேடிக் கொண்டிருந்தது போலவே, இன்று நாமும் இயேசு எங்கு? எப்போது? யாரிடம்? யார் மூலமாக இவ்வுலகில் ஜெனிக்கவிருக்கிறார், என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். மனித வாழ்வு என்பதே தேடல் மிகுந்த ஒரு வாழ்க்கைதான். தேடக் கூடிய ஒவ்வொருவரும் தேடியதைக் கண்டு கொள்வார்கள் என விவிலியம் கூறுகிறது. நாமும் பல நேரங்களில் பலவற்றை தேடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் தேடுவது முக்கியமல்ல. தேடக் கூடியவர்களாகிய நாம் நாமே பொருளாகவும் மாற வேண்டும். உதாரணமாக! யார் முன்வருவது என்ற கேள்விக்கு, நாம்தான் முன்வர வேண்டும் என்ற பதிலை கொடுக்கலாம். சமூகத்தில் ஒருவர் மாற்றத்தை விதைக்க விரும்பினால், தான் விரும்பும் அந்த மாற்றமாக நீயே இரு எனக் கூறுகிறார் காந்தியடிகள். மாற்றமானது நம்மிடையே இருக்க வேண்டும். மாற்றமானது நம்மில் இருந்து துவங்க வேண்டும். நாம் விரும்பக்கூடிய மாற்றத்தினை நாம் தாம் இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டும். நான் செய்வதை பார்க்கின்ற பொழுது பலர் தங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கிக் கொள்வார்கள். அடுத்தவர்கள் வருவார்கள்! அவர் வருவார்! இவர் சரி செய்வார்! விவிலியம் சொல்கிறது எலியா தான் வரவேண்டும்! என்றெல்லாம் நாம் மற்றவர்களின் வருகையை எதிர் பார்ப்பதை விட, நல்ல செயல்கள் செய்வதிலும் இறையாட்சியின் மதிப்பீடுகளை செயல்படுத்துவதிலும், நாம் முன்வரக் கூடியவர்களாக இருக்க இன்றைய வாசகங்கள் வழியாக அழைக்கப்படுகிறோம். நாம் முன் வரும் பொழுது, முதல் வாசகத்தில் நாம் வாசிக்கக் கேட்ட எலியாவை போல, அவர் ஆற்றிய வல்ல செயல்களைப் போல, நல்ல செயல்களை நாமும் செய்ய அழைக்கப்படுகிறோம். நல்ல செயல்களை, சமூகத்திற்கு நலமான செயல்களை, நல்ல விதமான மாற்றத்தை உருவாக்க கூடிய செயல்களை, நம்மால் செய்ய முடியும். எனவே, அடுத்தவர் வருவார், அடுத்தவர் மாற்றத்தை உருவாக்குவார், என எண்ணுவதை விட, நாம் மாற்றத்தை உருவாக்க கூடியவர்களாக, நாம் நல்லதை செய்ய கூடியவர்களாக இருக்க, நல்லதொரு மாற்றத்தை உருவாக்க இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நம்மை அழைக்கிறார். அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய், வாருங்கள் அவர் பின் பயணிப்போம்.
நற்செயல்கள் செய்ய நாமும் முன்வருவோம் என அன்போடு அழைக்கும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களும் செபங்களும்!
பதிலளிநீக்கு