செவ்வாய், 15 டிசம்பர், 2020

தயக்கமின்றி ஏற்றுக் கொண்டு, பேறுபெற்றவர்களாக மாறுவோம்! (16.12.2020)

தயக்கமின்றி ஏற்றுக் கொண்டு, பேறுபெற்றவர்களாக மாறுவோம்!

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் யோவானின் சீடர்கள் இயேசுவிடம் வந்து வர விருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். இயேசு அவர்களிடத்தில் நீங்கள் கண்டதையும் கேட்டதையும் யோவானிடம் சென்று அறிவியுங்கள் என்று கூறுகிறார். இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் தான் மெய்யான இறைவன் என்பதை ஆழமாகவும் அழுத்தமாகவும் எடுத்துரைக்கக் கூடிய வகையில் முதல் வாசகமானது அமைந்திருக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகங்களின் அடிப்படையில் இயேசுவின் பணி என்ன? என்ற கண்ணோட்டத்தில் ஆராயும்போது, பார்வையற்றோர் பார்வை பெறக்கூடிய நிகழ்வும், கால் ஊனமுற்றோர் நடக்கின்றநிகழ்வும்,தொழுநோயாளர் நலம் அடையக்கூடிய நிகழ்வும் காது கேளாதோர் கேட்கின்ற நிகழ்வும்,  இறந்தோர் உயிருடன் எழுப்பப்படக் கூடிய ஏழைகளுக்கான நற்செய்தி அறிவிப்பு பணியைத்தான் இயேசுவின் பணியின் மையமாக நாம் உணர்ந்து கொள்ள முடியும். ஏழைகளின் சார்பாக இருப்பதும், ஒடுக்கப்பட்ட, நசுக்கப்படக் கூடிய மக்களுக்கு துணையாக நிற்பது தான் இயேசுவின் பணியின் நோக்கமாகும். இந்த இயேசுவினுடைய பணியைச் செய்யத் தான் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் அழைக்கப்படுகிறோம். ஆனால் நாம் அந்தப் பணியினை சிறப்பாக செய்கிறோமா? என்ற கேள்வியை இன்றைய நாளில் நாம் எழுப்பி பார்க்க கடமைப்பட்டுள்ளோம். நாம் வாழக்கூடிய இந்த சூழ்நிலையில் அனுதினமும் அதிகமான போராட்டங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. உண்மையை உடனுக்குடன் உங்களுக்கு வெளிப்படுத்துவோம் எனக் கூறக்கூடிய ஊடகங்கள் கூட பல உண்மைகளை மறைத்து தேவையற்ற மக்களை திசை திருப்பக் கூடிய செயல்களை மட்டுமே தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. வெகுநாட்களாக விரைவுச் செய்தி என்பதுதான் தலைப்புச் செய்தியாகவே இருந்து கொண்டிருக்கிறது, நமது நாட்டில்.
 இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆங்காங்கே அதிகமான ஏழைகள் நசுக்கப்படுகின்றனர். ஒரு நாட்டில் மிகவும் எளிமையாக இருப்பவர்கள் யார் என்றால் "விவசாயிகள்" என பிரதமர் தொடங்கி, நாட்டின் மூத்த குடிமகன் தொடங்கி அனைவரும் கூறக்கூடிய பதிலாக இருப்பது "விவசாயிகள்" என்பதாகும். இந்த விவசாயிகளின் நலனுக்காக என்று கூறி அவர்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக அழிக்கும் நோக்குடன் அரசின் திட்டங்கள் இன்றைய நாளில் அரங்கேறி இருப்பதை, அரசின் சட்டங்கள் இன்றைய நாளில் அரங்கேறியிருப்பதை நாம் அனுதினமும்  பல வழிகளில் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அந்த ஏழைகளுக்கு, அந்த சட்டங்களால் ஒடுக்கப்படக்கூடிய ஏழை எளிய விவசாய மக்களுக்கு நாம் துணை நிற்கின்றோமா? என்ற கேள்விதான் இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு கொடுக்க கூடிய செய்தியாக இருக்கிறது. ஆம்! இயேசு பார்வையற்றவருக்கு பார்வை கொடுத்தார். காது கேட்காதவர்  காது கேட்கும்படி செய்தார். கால் ஊனமுற்றவர் எழுந்து நடக்கச் செய்தார். சமூகத்தால் இவர்கள் எல்லாருமே கடவுளால் தண்டிக்கப்பட்டவர்கள். எனவே இவர்களோடு நாம் இணைந்து இருத்தல் கூடாது. இவர்கள் அனைவரும் பாவிகள் என்ற அடிப்படையில் இந்த மண்ணில் வாழ்ந்த போது ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள்.  இந்த ஒதுக்கி  வைக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கக்கூடிய நபர்கள் அன்று யாரும் இல்லை. அது போல் தான் இன்றும் விவசாயிகள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டுக் கொண்டே வருகிறார்கள். சட்டங்களாலும் பல முதலாளிகளாலும் அவர்களின் வாழ்வானது நசுக்கப்படுகிறது. அவர்களுக்கு இயேசுவைப் போல நாமும் பக்கபலமாக துணைநிற்க என்று அழைக்கப்படுகிறோம். அவர்களை நாம் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏழை எளியவரை, நசுக்கப்படக்கூடிய விவசாயிகளை, நமது சமூகத்தில் வாழக்கூடிய வறியவரை நாம் எந்தவித தயக்கமும் இன்றி ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டும். அவர்களின் வாழ்வாதாரம் செழிக்கவும், அவர்களின் வாழ்க்கை முறை வளம் அடையவும், அவர்கள் சட்டங்களால் நசுக்கப்படாதவாறு, பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் நம் அனைவருக்கும் இருக்கிறது. இத்தகைய பொறுப்புகளை உணர்ந்தவர்களாக, எந்தவித தயக்கமுமின்றி அவர்களை ஏற்றுக் கொண்டு அவர்களோடு தொடர்ந்து பயணிக்க, அவர்களுக்கு துணை நிற்க, இன்றைய வாசகங்கள் வழியாக நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். அழைக்கும் இறைவனின் குரலுக்கு  கொடுத்தவர்களாய் நமது செயல்பாடுகளில் நமது உள்ளார்ந்த மாற்றத்தை வெளிக்காட்டிட, இன்றைய நாளில் இயேசுவின் பாதையில் உண்மை சீடர்களாக பயணம் செய்வோம்.

1 கருத்து:

  1. இறைவனின் உண்மை சீடர்களாக வாழ அழைக்கும் இன்றைய கருத்துகள் மிகவும் அருமை! அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களும்! செபங்களும்! 🤱🤱🤱🤱✳️✳️✳️✳️

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...