கடவுள் நம்மோடு! நாம் யாரோடு?
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகத்தில் எரேமியா இறைவாக்கினர் இறைவாக்கு உரைக்க கூடிய பகுதிகளை நாம் வாசிக்க கேட்கிறோம். இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் இருந்து விடுதலை பெற்று தங்களுடைய சொந்த நாடுகளுக்கு திரும்பிய பிறகு, தங்களிடையே பலவிதமான மூடப் பழக்க வழக்கங்களாலும், தங்களுடைய கடவுளின் கட்டளைக்கு மாறாக, வேற்று தெய்வ வழிபாடுகளை பின்பற்றியதாலும், பலவிதமான இன்னல்களை சந்தித்தார்கள். பலமுறை, பலரால் தாக்கப்பட்டார்கள். மீண்டும் அடிமைகளாக மாறினார்கள். அப்போதெல்லாம் அந்த மக்களின் தங்கள் செய்த பாவத்தின் விளைவு, கடவுளோடு செய்து கொண்ட உடன்படிக்கையை மீறியதன் விளைவு இது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் பல நேரங்களில் பல இறைவாக்கினர்கள் இறைவாக்குரைத்தார்கள். இறைவாக்கினர்களின் வாக்கைக் கேட்டு தங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். அப்படி ஏற்படுத்திக் கொண்டிருந்தபோது அந்த மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக, எரேமியா இறைவாக்கினரும், தாவீதின் குலத்திலிருந்து நீதியுள்ள தளிர் ஒன்று தோன்றும். அந்த தளிர் ஆட்சி செய்யும். அப்போது நாம் அடிமைகளாக இருக்க மாட்டோம். உரிமை குடிமக்களாக இருப்போம். அடிமைத்தனத்தால் பல இடங்களுக்குப் பிரிந்து போன நம்முடைய மூதாதையர்கள், அனைவரும் ஒன்று சேர்க்கப்படுவார்கள். அனைவரும் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையூட்டும் செய்தியினை, எரேமியா இறைவாக்கினர் உரைப்பதை இன்றைய முதல் வாசகத்தில் இருந்து நாம் கேட்கின்றோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் பிறப்பானது, யோசேப்புக்கு முன்னறிவிக்கப்படுகிறது. திருமணத்திற்கு முன்பாகவே மரியா கருவுற்று இருக்கக்கூடிய செய்தியறிந்த யோசேப்பு, மனைவியை விலக்கி விட உள்ளத்தில் திட்டமிட்டார்.
அன்று நிலவிய யூத சட்டப்படி ஒரு பெண் கணவனோடு கூடி வாழ்வதற்கு முன்பாக கருவுற்று இருந்தால், அவளை அச்சமூகத்தினர் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்ற மோசேயின் சட்டமும் இருந்தது. அத்தகைய சூழ்நிலையில் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல், நேர்மையாளரான யோசேப்பு மறைமுகமாக விலக்கிவிட திட்டமிட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அவர் கனவில் வானதூதர் தோன்றி, மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால் என்ற இறைச் செய்தியை அறிவித்தார். இறைச் செய்தியை கேட்ட உடனே யோசேப்பு மரியாவை தன் மனைவியாக ஏற்றுக்கொண்டார். தன் வாழ்நாள் முழுவதும் நேர்மையாளராக இருந்த யோசேப்பு, மரியாவுக்கும் இயேசுவுக்கும் நல்ல பாதுகாவலராக இருந்து வந்தார் என்பது, திருஅவை நமக்கு கற்பிக்கும் செய்தியாகும். இன்றைய நற்செய்தி வாசகத்தில், பிறக்கவிருக்கும் குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவீர்கள். இம்மானுவேல் என்றால், "கடவுள் நம்மோடு" என்ற அர்த்தம் என்று வானதூதர் யோசேப்புக்கு விளக்குகிறார்.
ஒருவன் தனியாக கடற்கரை மணலில் நடந்து சென்று கொண்டிருந்தான். கடவுளே! எனது சுமைகளை பகிர்ந்து கொள்ள, எனக்கு ஆதரவு கொடுக்க, என்னோடு நடந்து வர, யாருமே இல்லை. நீயாவது வா! என்றான். உடனே ஒரு குரல் ஒலி அவனுக்கு கேட்டது. உன்னுடன் தான் நடந்து வந்து கொண்டு இருக்கிறேன்! என்ற குரல் ஒலியை அவன் கேட்டான். சுற்றிலும் பார்த்தான், யாரும் இல்லை. ஆனால் தனது காலடிச் சுவடுகளுக்குப் பக்கத்தில் இன்னொரு காலடிச் சுவடுகள் பதிந்து கொண்டே வந்தது. இறைவனை பார்க்காவிட்டாலும் அந்த காலடி சுவடுகளைப் பார்த்து பேசிக் கொண்டே நடந்தான். திடீரென காற்று வீச கடல் கொந்தளிப்பு உண்டாக்கி புயல் வீசியது. அவன் பயந்து போய் வேகமாக ஓடி, மேட்டு பகுதியில் நின்றான். கடவுளின் காலடிச் சுவடுகள் தன்னை தொடர்ந்து வருகிறதா என்று பார்த்தான். ஒருவரின் காலடிச் சுவடுகள் மட்டுமே இருந்தது. தன்னோடு கடவுளின் காலடிச் சுவடுகள் இல்லையே என்ற கோபத்தில், என்னை துன்பத்தில் விட்டுவிட்டுப் போய்விட்டாயே! என்று கோபமாக திட்டினான். அப்போது கடவுளின் குரல் மீண்டும் அவனுக்குக் கேட்டது. நண்பா! உனக்கு மரண பயம் வந்தபோது நீ ஏறி குதித்து என் முதுகின் மேல் தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறாய். கீழே பதிந்திருப்பது என்னுடைய காலடிச்சுவடுகள் மட்டும் தான். முதலில் முதுகில் இருந்து கொஞ்சம் கீழே இறங்குகிறாயா! என அந்த குரலொலி கேட்டது. அன்று அவன் கடவுளின் உடனிருப்பை தன் உள்ளத்தில் உணர்ந்து கொண்டான்.
ஒருமுறை ஆபிரகாம் லிங்கன் அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் மிகவும் பெரிய பெரிய நிலைகளை அடைந்து கொண்டிருப்பதை கண்டு, அவரது நண்பர் அவரிடம் கூறினாராம், உங்களோடு கடவுள் இருக்கின்றார்! அதனால்தான் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நீங்கள் உயர்ந்துகொண்டே போகிறீர்கள்! என்றாராம். உடனே ஆபிரகாம் லிங்கன் கூறினாராம், கடவுள் என்னோடு இருக்கிறார் என்பதில் துளியளவும் எனக்கு ஐயமில்லை. ஆனால் நான் கடவுளோடு இருக்கின்றேனா? என்பதுதான் இன்று எனக்குள் அவ்வப்போது எழக்கூடிய கேள்வியாக இருக்கிறது,
என்று கூறினாராம்.
கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதில் எந்த ஐயமும் யாருக்கும் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நாம் கடவுளோடு இருக்கின்றோமா? என சிந்தித்து பார்க்க இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. எப்படி இஸ்ரயேல் மக்கள், தங்களை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்த இறைவனை விட்டு விட்டு விலகிச் சென்றார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் பலவிதமான இன்னல்களை அடைந்தார்கள். எப்போதெல்லாம் அவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்தார்களோ, அப்போதெல்லாம் மீண்டும் இறைவனிடம் வந்தார்கள். இறைவன் அவர்களை மன்னித்து, அவர்களை ஏற்றுக் கொண்டு, அவர்களை வழிநடத்தினார். ஆண்டவரோடு அவர்கள் இருந்த போது, அவர்கள் ஒருபோதும் தோற்றதில்லை. ஆண்டவரை விட்டு விலகியபோதே, அவர்கள் வாழ்க்கையில் பலவிதமான இன்னல்களை அடைந்தார்கள் என்பதை நாம் அறிவோம்.
இன்றைய வாசகங்களும் நமக்கு இத்தகைய பாடத்தையே உணர்த்துகின்றன. கடவுளோடு இருக்கும்போது நாம் நிறைவுள்ளவர்களாக இருப்போம். கடவுள் நம்மோடு இல்லாதபோது தான் நாம் தடுமாறுகிறோம். ஆனால் கடவுள் எப்போதும் நம்மை விட்டு விட்டுச் செல்பவர் அல்ல. மாறாக, கடவுள் எப்போதும் நம்மோடு இருக்கின்றார். நாம் தான் பல நேரங்களில், பல சூழல்களில், இஸ்ரயேல் மக்களைப் போல, அவரை விட்டு விட்டுச் செல்கின்றோம். இன்றைய நாளில் நாம் கடவுளோடு இருக்கின்றோமா? என்ற கேள்வியை நமக்குளாக எழுப்பிப் பார்ப்போம். எப்போதும் நம்மோடு இருக்கக்கூடிய இறைவனோடு, நாமும் இணைந்து இருக்கக் கூடியவர்களாக மாறிட இன்றைய நாள் முதல் நமது வாழ்வு என்னும் பயணத்தில் ஆண்டவரோடு பயணிக்க முயல்வோம்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஅருமை சகோ.. 👌
பதிலளிநீக்குகடற்கரையில் மனிதன் கடவுளோடு உரையாடும் நிகழ்வு மிகச்சிறப்பு.. 👍👏
தினமும் பாராட்ட வார்த்தைகளின்றி உங்கள் பணிக்காக செபிக்கின்றேன்.. 🙏
கடவுள் என்றும் உ(ந)ம்மோடு.. 🙏