திங்கள், 7 டிசம்பர், 2020

இறைவனது விருப்பம் நம் விருப்பம் ஆகட்டும். (8.12.2020)

இறைவனது விருப்பம் நம் விருப்பம் ஆகட்டும் 


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளைப் உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நாம் திருஅவையோடு இணைந்து அன்னையின் அமல உற்பவ பெருவிழாவினை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்நாளில் அன்னையை பாதுகாவலியாக கொண்டு இருக்கக் கூடிய மறைமாவட்டங்களுக்கு திருவிழா வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்கிறேன்.


இறைவனின் ஆசைகள் பொய்யாக போகும்போது... 
மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா?

என்ற பாடல் வரிகள் இன்றைய வாசகத்தின் அடிப்படையில் நாம் சிந்திக்க  நமக்கு உதவியாக உள்ளது.

இறைவனது விருப்பம் நம் விருப்பமாக மாறும் போது நாம் மகிழ்வாக இவ்வுலகில் வாழ்ந்து விட முடியும். அன்புக்குரியவர்களே இன்றைய முதல் வாசகம் வழியாக தொடக்கத்தில் இறைவன் விரும்பியதையும், மனிதன் விரும்பியதையும் பற்றி முதல் வாசகத்தின் வழியாக நாம் அனைவரும் அறியலாம். தொடக்கத்தில் ஆண்டவரின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து மனிதன் வாழ வேண்டுமென இறைவன் விரும்பினார். ஆனால் மனிதன் கடவுளாக மாற வேண்டும் என விரும்பினான். இறைவனது விருப்பம் மனிதனின் விருப்பமாக மாறாத போது அங்கு பாவம் நுழைந்தது. மனிதன் இறைவனாக மாறிட எண்ணி அதன் விளைவாக இன்று இவ்வுலகத்தில் தீமை தலைவிரித்தாடுகிறது. இந்த தீமையை அகற்ற கூடியதாகத்தான் அன்னை மரியாளை திருஅவை நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

இறைவன் எப்போதும் நம்மை அவரது பிள்ளைகளாக சொந்தமாக்கிக் கொள்ள விரும்புகிறார். இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் எபேசியர் நூலில் நாம் வாசிக்கின்றோம். நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளாக மாற வேண்டும் என்பதுதான் இறைவனின் திருவுளம். எனவே நம்மை அன்பால் முன் குறித்து வைத்தார் என்ற செய்தியினை இவ்வாசகம் இன்றைய நாளில் நமக்கு வழங்குகிறது. இறைவனின் விருப்பம் அவரது பிள்ளைகளாக நாம் இருக்க வேண்டுமென்பது ஆனால் நமது விருப்பம் இறைவனை தந்தையாக ஏற்றுக் கொள்வதா? அல்லது இறைவனாகவே மாற வேண்டுமென தொடக்கத்தில் மனிதன் எண்ணியது போல எண்ணுவதா? என சிந்திப்போம்.

இன்றைய நற்செய்தி வாசகமானது மேலே காணப்பட்ட இரண்டு வாசகங்களுக்கும் பதில் தரக்கூடிய வகையில் அமைகிறது. அன்னை மரியாவிடம் இயேசுவின் பிறப்பு அறிவிக்கப்படுகிறது. இறைவனின் விருப்பம் இயேசுவை மனிதனாக பிறக்கச் செய்ய  இந்த கண்ணி பெண்ணாகிய அன்னை மரியாள் இணங்க வேண்டும் என்பதாகும். ஆனால் அச்செய்தியை தாங்கி கபிரியேல் தூதர் அன்னையிடம் வரும் போது ஆண்டவரின் விருப்பத்தை தன் விருப்பமாக மனதில்கொண்டு அகிலத்தின் நன்மைக்காக இறைவனின் விருப்பத்தை இன்முகத்தோடு ஆகட்டும் என கூறி ஏற்றுக்கொண்டார். அன்னையின் வழியாகத்தான் இந்த உலகிலே இயேசு அவதரித்தார். அந்த இயேசு பலரின் மீட்புக்காக, நமக்காக தனது இன்னுயிரை இழந்த அன்னை மரியா சமூகத்தில் நிலவிய அவலங்களுக்கு மத்தியில், எதிர்ப்புகளுக்கு மத்தியில் இயேசுவின் விருப்பத்தை தன் விருப்பமாக மாற்றிக் கொண்டாரோ அதுபோல தந்தையாம் இறைவனின் விருப்பத்தை தனது விருப்பமாக கொண்டு பலருக்கு தன் இன்னுயிரை கையளித்ததார். 
இந்த இயேசுவும் அன்னை மரியாவும் இன்றைய நாளில் நமக்கு தரக்கூடிய செய்தி இறை விருப்பம் நம் விருப்பமாக மாற வேண்டும் என்பதாகும். இறை விருப்பத்தை நமது விருப்பமாக மாற்றிக் கொள்ளக்கூடிய உரிமையும் சுதந்திரமும் நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. இறை விருப்பத்தை நமது விருப்பமாக மாற்றுவது நமது செயல்களால் தீர்மானிக்கப்படுகிறது. நாம் இறை விருப்பத்தை நம் விருப்பமாக மாற்றி அன்னை மரியாவை போல இச்சமூகத்தில் அகிலத்தின் நன்மைக்காக ஆண்டவரின் விருப்பத்தை நமது விருப்பமாக ஏற்றுக்கொள்ள, இன்றைய நாளில் இறை விருப்பத்தை நமது விருப்பமாக கொண்டு இயேசுவைப் போல மரியாவைப் போல தியாகத் சீடர்களாக தியாகத்தின் உருவமாக இயேசுவின் உண்மைச் சீடராக இச்சமூகத்தில் உரு மாறுவோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...