திருப்பலி முன்னுரை:
“தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது
யூத நிலத்தினிலே!
சத்திய வேதம் நின்று நிலைத்தது
தாரணி மீதினிலே
எத்துனை உண்மை வந்து பிறந்தது
இயேசு பிறந்ததிலே!
அன்பிற்குறிய இறைமக்களே மார்கழி மலராய், மங்கள நிலவாய், மாமரி மடியினில பிறக்கப் போகும் நம் பாலன் இயேசுவின் பிறப்பு விழாவை இன்னும் சிறிது நேரத்தில் கொண்டாட இருக்கிறோம். ஓளி கண்டு இருள் விலகுவது போல, இன்;று நாம் இருளின் ஆட்சிக்குறிய செயல்களிலிருந்து ஒளியின் ஆட்சிக்குறிய செயல்களில் வாழ அழைக்கப்படுகிறோம். அதாவது இருளாகிய பாவத்தில் இருந்து ஒளியாகிய பாவமில்லாத வாழ்வு வாழ அழைப்பு விடுக்கிறது இவ்விழா.
“காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்;” என்று எசாயா இறைவாக்கினர் முதல் வாசகத்தின் மூலம் நமக்கு கூறுகிறார். ஆதாமை முன்னிட்டு இந்த உலகிற்கு பாவம் வந்தது போல கிறிஸ்துவை முன்னிட்டு அந்த பாவம் என்னும் கடன்சீட்டு கழிந்தது. அதேபோன்று இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு விடுவிக்கும் செய்தி “அஞ்சாதீர்கள்! இதோ எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அளிக்கிறேன்.” என்று ஆண்டவரின் தூதர் கூறுகிறார். இந்த நற்செய்திதான் கிறிஸ்து பிறப்பு விழா செய்தி. விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறதென்ற இறைவாத்தையின் உண்மையை உலகிற்கு பறைசாற்றும் நாள் இன்றைய நாள், இன்று பெருமகிழ்சியின் நாள், அன்பு அரங்கேறும் நாள், பணிவு பவனி வரும் நாள். ஏழைக் உருவெடுத்து மாடுகளின் மத்தியில் தன்னையே தாழ்த்தினவராய் பலநூறு ஆண்டுகளுக்கு முன் உரைத்த இறைவாக்கு நிறைவேற இவ்வுலகில் வந்து நம் பாலகன் இயேசுவாக பிறந்துள்ளார். அவரின் பிறப்பால் அச்சம் கலைந்து, ஆண்டவர் இயேசுவை இதயத்தில் பிறக்க இடம் தரக்கூடிய மனித நேயம் கொண்ட மனிதர்களாக மாறி ஒருவர் மற்றவருடன் இணைந்து மகிழ்ந்து வாழ இறையருளை வேண்டி பக்தியோடு இணைவோம் இந்த மகிழ்வின் பலியிலே…
முதல் வாசக முன்னுரை: (எசாயா 9:2-4, 6-7)
திரும்பும் திசை எங்கும் கண்ணால் காண இயலாத வைரஸ் தாக்குதலால் அச்சமும், விவாசாயிகளின் வாழ்வுக்கான தொடர் போராட்டமும் தொடரும் இச்சூழலில் “காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டனர்” என்று இறைவாக்கினர் எசாயா இன்றைய முதல் வாசகத்தின் வழியாக மகிழ்வூட்டும் செய்தியை நமக்கு தருகிறார். அறுவடை நாளில் நாம் மகிழ்ச்சியாய் இருப்பது போன்று இன்று கிறிஸ்து பிறப்பு விழாவில் அச்சங்கள் தவீர்த்து நம்பிக்கையோடு நம் மீட்பின் பெருவிழாவில் மகிழ்ச்சியாய் இருக்க அழைக்கும் இறைவாக்கினர் எசாயா அவர்களின் இறைவாக்கிற்கு செவிமெடுப்போம்.
இரண்டாம் வாசகம்: (தீத்து 2: 11-14)
கிறிஸ்து பிறப்பு விழாவில் இணைந்து ஒருவர் மற்றவரை வாழ்திதி மகிழ நம்பிக்கையோடு வந்துள்ள நாமுக்கு திருத்தூதர் பவுல் தரக்கூடிய வாழ்வுக்கான வழிமுறைகளை நாம் இன்றைய இரண்டாம் வாசகத்தின் வழியாக கேட்க உள்ளோம். மீட்பு நம்மை தேடி வர நாம் எல்லா நெறி கேடுகளிலிருந்தும், உலக நாட்டங்களிலிருந்தும் விடுபட்டு கடவுளிடம் திரும்பி வருவோமாக என்று கூறும் பவுலடியாரின் அழைப்புக்குக்கு கவனத்தோடு செவிமெடுப்போம்.
மன்றாட்டுகள்:
1. அன்பின் இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரும் இயேசுவின் அன்புச் சீடர்களாய் வாழ்ந்து பாலகன் இயேசு கொண்டு வந்த அன்பென்னும் கொடையை எத்திக்கம் பறைசாற்ற அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. நீதியின் ஊற்றே எம் இறைவா! இந்தியத் திருநாட்டை ஆட்சி செய்யும் தலைவர்களை உம் பாதம் அர்பணிக்கின்றோம். அவர்கள் அனைவரும் தன்னலத்தோடு வாழாமல் உம்மைப் போன்று மகிழ்வை வழங்குகின்ற, மக்களின் தேவைகளை உணர்ந்து செயலாற்றிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! பிறந்திருக்கின்ற பாலன் இயேசுவின் சாயலில் இவ்வுலகில் பிறந்திருக்கின்ற ஒவ்வொரு குழந்தைகளையும் நீரே தொட்டு ஆசீர்வதித்து, இறைவல்லமையாலும், ஞானத்தாலும் நிரப்பிட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. இரக்கத்தின் இருப்பிடமே எம் இறைவா! இன்றை நாள் இத்திருவிருந்தில் பங்குபெற இயலாமல் நோயாலும், பல்வேறு உடல் வேதனையாலும் துன்பப்படுகின்ற ஒவ்வொரு உள்ளங்களுக்கும் நீரே ஆறுதலாகவும், அரவனைக்கும் கரமாகவும் இருந்து பாலன் இயேசு கொண்டுவந்த மகிழ்ச்சி அவர்களில் தங்கிட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. உழைப்பவன் கூலிக்கு உரியவன் என்ற அன்பு தெய்வமே… கடுமையான சட்டங்களாலும், வளர்ச்சி என்ற மாய வார்த்தையாலும் அனுதினமும் உழைக்கும் மக்கள் இன்று அடையக்கூடிய அவலநிலைகள் யாவும் விரைவில் அவர்கள் வாழ்வில் இருந்து விலகிட உமது அருளை தந்து அவர்களை உம் ஆசிகளால் நிரப்ப இறiவா உம்மை மன்றாடுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக