"யார் வெச்சது?
யார் வெச்சது?
உன் சட்டமடா!
இங்கு வாழ்வென்பதும் சாவென்பதும்
நிலம் மட்டுமடா!"...
என்ற பாடல் வரிகள் இன்றையச் சூழலில் திரும்பும் திசை எங்கும் ஒலிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது. ஆம்! திரும்பும் திசை எங்கும் பலவிதமான போராட்டங்கள் சூழ்ந்திருக்கின்றன. மக்களின் மனங்களில் அச்ச உணர்வானது குடிகொண்டிருக்கிறது. ஆனால் இத்தகைய சூழ்நிலையில் நாம் கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாட இங்கு கூடியிருக்கிறோம்
ஒவ்வொரு வருடமும் கொண்டாடி விட்டுச் செல்வதற்கு கிறிஸ்து பிறப்பு விழா என்பது ஒரு வாடிக்கையான நிகழ்வு மட்டுமல்ல. இது பல அர்த்தங்கள் கொண்ட ஒரு விழாவாகும். கிறிஸ்துவின் பிறப்பு ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு விதமான பாடங்களை நமக்குக் கற்பிக்கிறது. இயேசு இந்த மண்ணகத்தில் பிறந்த நேரத்தை நாம் நினைவு கூறும்போது இன்று நிலவக்கூடிய அதே நிகழ்வுகள் தான் அன்றும் அரங்கேறிக் கொண்டிருந்தன. இயேசு இந்த மண்ணில் பிறந்த போது சட்டங்களால் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். மக்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்களே மக்களை நெரிக்கக்கூடிய சட்டங்களாக மாறின. மனிதர்களிடையே ஒரு அச்ச உணர்வு ஆழமாக குடிகொண்டிருந்தது. பாவத்தில் பலரும் உழன்று கொண்டிருந்தனர். இத்தகைய சூழலில் அவர்களை அச்சூழலில் இருந்து மீட்டெடுக்கவே இறைமகன் இயேசு இம்மண்ணில் அன்று அவதரித்தார். இன்று அதே இறைமகன் இயேசு இம்மண்ணில் அவதரிக்க இருக்கிறார். இன்றும் நாம் திரும்பும் திசை எங்கும் போராட்டங்கள். சட்டங்களால் மக்கள் தங்கள் உரிமைகளைக் கூட பெற முடியாத அளவிற்கு ஒடுக்கப்பட கூடிய சூழ்நிலை. கொடிய நோய் தொற்று காரணமாக, அருகில் உள்ளவர்களை கூட அரவணைக்க முடியாத ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அன்பு, பிறரன்பு, பொதுசேவை, என்பதெல்லாம் அச்ச உணர்வால் இன்று மழுங்கடிக்கப்பட்டு இருக்கக் கூடிய சூழ்நிலை. இந்தச் சூழ்நிலையில் இறைவன் இயேசு கிறிஸ்து அஞ்சாதீர்கள்! நான் உங்களுக்கு துணையாக இருக்கிறேன் என்ற வார்த்தைகளின் வடிவில் நம் உள்ளங்களில் பிறக்க வரவிருக்கிறார். பிறக்கவிருக்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நாம் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு நம்மிடையே இருக்கக்கூடிய அச்ச உணர்வுகளை எல்லாம் கடந்து, இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது நமக்கு கற்பித்த இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி நாம் நமது வாழ்வை அமைத்துக்கொள்ள இன்றைய நாளில் நாம் அனைவருமே அழைக்கப்படுகிறோம்.
இன்று நிகழக் கூடிய கொடிய நோய்த் தொற்றிலிருந்து மக்கள் மீள வழி தெரியாது தவித்துக் கொண்டிருக்கையில், ஒரு புறம் இயற்கை பேரிடர்களால் பல இடங்களில் மக்களின் வாழ்வாதாரம் முடங்கிப் போகிறது. அடுத்தவருக்கு உணவளிக்க வேண்டும் என விவசாயத்தில் ஈடுபட கூடிய விவசாய ஏழைகள் இன்று அரசின் கடுமையான சட்டங்களால் நெருக்கப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய இந்தச் சூழலில், அனைவருடைய மனங்களிலும் நம்பிக்கை என்பது அடியோடு அழிந்து கொண்டு வருகிறது. நம்பிக்கை இருக்க வேண்டிய இடத்தில் அச்ச உணர்வு ஆழமாக அதிகரிக்கிறது. இந்நேரத்தில் ஆண்டவர் இயேசுவின் பிறப்பு நமக்கு அச்சத்திலிருந்து நம்பிக்கையை கொடுக்கக் கூடியதாக அமைகிறது. நம்மோடு இருப்பதற்காக நம்முள் இருந்து செயலாற்றுவதற்காக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவை நாம் ஆவலோடு எதிர்நோக்கி இருக்கிறோம். இன்று நாம் அன்பியங்களாகச் சேர்ந்து கொண்டாடக் கூடிய இந்த கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சியில் இறைவன் நம்முடைய உள்ளங்களில் பிறக்க வேண்டும். நம் உள்ளங்களில் பிறக்கும் இறைவன், நமக்குள் இருக்கக்கூடிய அச்சங்களை அகற்றி நமக்கு ஒரு தக்க துணையாகவும், உறுதுணையாகவும் இருந்து, நல்ல செயல்கள் செய்யவும், பிறர் நலப்பணியை நாடவும், சமூக சேவையை செய்யவும், அஞ்சாது அடுத்தவருக்காக இன்னுயிரையே கையளித்த ஆண்டவர் இயேசுவைப் போல நாமும் வாழ்ந்திட, இன்றைய நாளில் இறை அருளை வேண்டியவர்களாக இத்திருப்பலில் இணைவோம்.
இன்று இயேசு கிறிஸ்துவின் பிறப்பு என்பது நமக்கு ஒரு நம்பிக்கையின் ஒளிச் சுடராக இருக்கிறது.
இயேசுவின் பிறப்பை நமது உள்ளங்களில் நம்பிக்கையின் தீபமாகப் பிறக்க வைக்க அனைவரும் ஒன்றிணைந்து இந்த திருப்பலியில் அச்சம் தவிர்த்து,
கலக்கம் தவிர்த்து, உறுதியான, அசைக்க முடியாத ஆண்டவர் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் இயேசுவை நமது உள்ளங்களில் பிறக்கச் செய்ய அனைவரும் இணைந்து இறைவனின் திருப்பலியில் பங்கேற்போம்.இறை ஆசீர் பெறுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக