விவசாயத்தை பற்றிய முகவரி....
வார்த்தையான இறைவனுக்கு என் முதல் வணக்கத்தையும் உங்கள் அனைவருக்கும் என் மறு வணக்கத்தையும் தெரிவித்து என் உரையைத் தொடங்குகிறேன். உரையை துவங்கும் முன் ஒரு உண்மையை நினைவுபடுத்த விரும்புகிறேன். நம் முன்னோர்கள் அனைவரும் கண்டிப்பாக விவசாயிகளாக தான் இருந்திருப்பீர்கள். விவசாயம் ஏன் தொழில் என கூற கூச்சப்படும் இச்சமுதாயத்தின்முன் என் முன்னோர் ஒரு விவசாயிதான் என்று கூறி என் உரையைத் தொடங்குகிறேன்.
ஆண்டவனால் ஆறறிவோடு அலைந்து திரிந்த மனிதன் சிக்கி முக்கிக் கற்களில் நெருப்பை கண்டுபிடித்தான். உருண்டோடிய கற்களில் இருந்து சக்கரம் கண்டுபிடித்தான். சக்கரத்தின் மீது சவாரி சென்றான். மாடுபூட்டி உழவு தொழில் செய்தான். ஆற்றுப்படுக்கைகளை பசுமைப் பிரதேசங்களாக்கினான். மனிதஇன வரலாற்றில் முயற்சிகள் தான் கண்டுபிடிப்புகளாகின. அதன் விளைவே இன்று உலகம் நம் கையில் வசப்பட்டிருக்கிறது. இரவைப் பகலாக்கி உலகை உள்ளங்கையில் கொண்டுவந்துவிட்டோம் நாம். அதன் விளைவே செயற்கைகோள். மின் அணுச்சாதனங்கள், கணிப்பொறி, இண்டர்நெட், அணு ஆற்றல் என வளர்ந்து கொண்டே செல்லும் அறிவியல் முன்னேற்றங்கள் இருந்தாலும் பசி எனும் இரு எழுத்துக்கு முன் அனைத்தும் மண்டியிடும். ஒரு மனிதனின் பசியை நீக்குபவன் தான் விவசாயி. ஆனால் இன்று அவனது பசியை நீக்க யாருமில்லை.
ஆதிகாலத்தில் மனிதன் அதிகாலையில் எழுந்து நீராறம் குடித்துவிட்டு களப்பையை தோளில் சுமந்தவனாய் வயல்வெளி நோக்கி செல்வான் உழைப்பதற்காக. உழைக்க சென்ற கணவனுக்கு உணவு சமைத்து எடுத்துக்கொண்டு தன் மகனையும் மகளையும் உடன் அழைத்துக் கொண்டு தலையில் சோற்று சட்டியை (தூக்கு சட்டியை) சுமந்தவளாய் வயல்வெளி நோக்கி சென்று தனிமையில் உழைக்கும் தன் கணவனுக்கு துணைக்குச் செல்வாள் மனைவி. உழைத்து களைத்தவர்கள் ஒன்றாய் அமர்ந்து உணவு உண்பர். பிறகு மீண்டும் இணைந்து உழைப்பார்கள். சூரியன் மறையும் வேளையில் வீட்டிற்கு வந்து உணவருந்தி ஓய்வு எடுப்பார்கள். இதுதான் முன்பு நம் நாட்டில் உள்ள கிராம மக்களின் வாழ்க்கை நிகழ்வு. ஆனால் இன்று இதுபோன்ற நிகழ்வுகளை நம்மால் திரையில் மட்டுமே காண முடியும்.
அன்று விவசாயத்தின் விளைச்சலை கொண்டுதான் பணக்காரன் உருவாயினான். ஆனால் இன்று ஒரு விவசாயி பல மடங்கு விளைச்சலை விளைவித்தாலும் அவன் ஏழையாகத்தான் இருக்கிறான்.
ஏன் இத்தகைய மாற்றம்? என்ன ஆனது இந்த விவசாயம்? என சிந்திக்கும்போது புலப்பட்ட உண்மைகள்...
பசுமைப் புரட்சி
பசுமை புரட்சி என்ற பெயரில் விவசாயத்தை உயர்த்த போகிறோம் என்றது மக்களை ஆளும் அரசு. மக்களை ஆளும் அரசு மக்களுக்கு நன்மைதான் செய்யும் என்று நம்பி ஏமாந்தவர்கள்தான் நம் விவசாயிகள். பசுமை புரட்சி என்பதன்மூலம் 10,000ஆம் ஆண்டுகால இந்திய விவசாய பரிமாண வளர்ச்சியை அழிக்க ஆரம்பித்தது இந்த அரசு. இதன் விளைவே பூச்சிகளுடன் பல பன்னாட்டு விதைகள் இங்கு இறக்குமதி செய்யப்பட்டன. அதன் விளைவே நாம் பயன்படுத்திய கிச்சடி, சம்பா போன்ற நெல் வகைகள் அழிந்து போயின. நம் நாட்டு விதைகள் ஆய்வு என்ற பெயரைக் கொண்ட பன்னாட்டு நிறுவனங்களின் சொந்த விதைகளாக மாறின. இன்றும் நாம் விதைக்கான உரிமை இல்லாதவர்களாகதான் இருக்கிறோம்.
பசுமை புரட்சியினால் உணவு பொருட்கள் தேவைக்காக உற்பத்தி செய்த நிலை மாறி வாணிபம் செய்வதற்காக உற்பத்தி செய்யப்பட்டன. இதன் விளைவால ;நிலத்தடி நீர்மட்டம் குறையத் துவங்கியது. இதன் விளைவுதான் ஆழமான ஆழ்துளை கிணறுகள் உருவாகின.
பசுமை புரட்சியினால் செயற்கை உரங்கள் மறைந்து யூரியா, அமோனியா, பாஸ்பேட், பொட்டாஷ் எனும் ஆங்கில பெயருடன் கூடிய உரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆரம்பத்தில் அதனால் உருவான விளைச்சலை கண்டு வியந்த நம் விவசாயிகள் இன்று விளைச்சலை காண முடியாமல் திண்டாடுகின்றனர். இத்தகைய உர பயன்பாட்டால் மண்ணிற்கே உரித்தான ஈரப்பதமும், காற்றோட்டமும் மறைந்து மண் இறுக்கமாக மாறிவிட்ட நிலை நிலவுகிறது.
பசுமை புரட்சியால் உருவான் இழப்புகளை ஏற்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள் உலகமயமாக்கலால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1980-ஆம் ஆண்டுகளில் 2.85 சதவீதமாக இருந்த விவசாய உற்பத்தி பொருள்களின் வளர்ச்சி 1990ஆம் ஆண்டுகளில் 1.66 சதவீதமாக குறைந்தது. இதன் விளைவு 1991-ஆம் ஆண்டுவரை 7.46 கோடியாக இருந்து வந்த விவசாய தொழிலாளர்களின் எண்ணிக்கை 1998-ஆம் ஆண்டுகளில் 5.27 கோடியாக குறைந்துவிட்டது. பணக்கார நாடுகளில் விவசாய துறையை நம்பி உள்ளவர்கள் 7 சதவீதம் முதல் 27 சதவீதத்தினர் மட்டுமே. ஆனால் இந்திய விவசாயத் துறையை நம்பி 67 சதவீத மக்கள் வாழ்கின்றனர்.
ஆனால் உலகமயமாக்களால் இந்த அரசு விவசாய துறைக்கு என தரப்பட்டு வந்த மானியங்களை எல்லாம் குறைத்துவிட்டது. நம் நாட்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத்தின் அளவு வெறும் 3 சதவீதம் மட்டுமே. ஆனால் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் 29 முதல் 73 சதவீதம் வரை மானியம் வழங்குகின்றன.
உலகமயமாக்கல் மூலம் வெளிநாடுகளில் இருந்து விவசாய பொருள்கள் அதிகமாக இறக்குமதி செய்யப்படுவதால் இந்திய விவசாயம் பெரிதும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலை இருந்து வருகிறது. மேலும் விவசாய துறையில் பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் அதிகமாக உள்ளன.
நீர்ப்பாசனம், மின் உற்பத்தி முதலியவை தனியார் கையில் இருப்பதால் விவசாய செலவுகள் அதிகமாக உள்ளன. அன்று விவசாய துறையில் அனைத்து வேலையும் மனிதனால் செய்யப்பட்டன. ஆனால் இன்று உலகமயமாக்களால் அனைத்தும் இயந்திரமயமாக்கப்பட்டன. எனவே பலர் வேலை இன்றி தவிக்க கூடிய நிலை உருவாகி உள்ளது.
மேலும் உலகமயமாக்கலின் விளைவால் தனியார் நிலை நிர்ணயிக்கும் விதை, பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள் என நிதியமைச்சர் கூறினாலும் வங்கிகளில் கடன்பெற முடியாமல் விவசாயிகள் கந்து வட்டிக்காரர்களிடம் சிக்கித் தவிப்பதும் இதனால் உயிரை மாய்த்துக் கொள்வதும் நாள்தோறும் நடக்கும் நிகழ்வாகிவிட்டது.
சராசரியாக கடன்தொல்லை காரணமாக ஒரு நாளைக்கு 46 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக கூறப்படுகிறது. எரிந்து கொண்டு இருக்கும் மெழுகுதிரியை பார்த்து யாரும் இறந்து கொண்டு இருக்கிறது என கூறுவுதில்லை. அதுபோலதான் தினம் தினம் அழிந்து கொண்டு இருக்கும் விவசாயிகளின் இறப்புகூட பலருக்கு தெரிவதில்லை.
இத்தகை நிலையை தடுக்க என்ன செய்ய முடியும் என என் நண்பனின் தந்தையிடம் கேட்டபோது அவரிடம் இருந்து நான் தெரிந்து கொண்டதும் அவற்றை சாத்தியமாகுமா என சிந்தித்தபோதும் உதயமான ஒரு சில வழிகளை உங்களோடு பகிர ஆசைப்படுகிறேன்.
1. வருடா வருடம் இலவச மின்சாரத்தால் ரூ.1400 கோடி செலவாகிறது. இதை பெரும்பாலும் பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதை அரசு முறைப்படுத்த வேண்டும்.
2. விவசாயின் வருமானத்தில் 40 சதவீதமும் ஏற்றுமதியில் 60 சதவீதமும் பங்களிப்பு பெற்றுள்ள விவசாய துறையை முன்னுரிமை துறையாக உயர்த்துதல்.
3. வறட்சியைத் தடுக்க நாட்டின் முக்கிய நதிகளை இணைத்தல்.
4. நிலமற்ற விவசாயிகளுக்கு நிலங்களைப் பகிர்ந்திடல்.
5. உணவு பாதுகாப்பு, நீடித்த வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றை சீரமைத்தல்.
6. தரிசு நிலங்களை மக்களின் செயல்பாடுகளுக்கு ஆதாரமாக்கிவிட வேண்டும்.
7. விலையேற்றத்திற்கு ஏற்ப கூலியை அரசு உயர்த்துதல். அதனை நில முதலாளியும், தொழில் முதலாளியும் பின்பற்றுகின்றனரா என அடிக்கடி ஆய்வு செய்தல்.
இதுபோன்ற வழிகளில் விவசாய துறையை முன்னேற்ற முயற்சிக்கலாம். அல்லது இதைவிட சிறந்த வழிகளை கண்டடைந்து முன்னேற்ற முயலலாம். ஆனால் மீண்டும் முன்னேற்ற என்று கூறி விவசாயத்தை அழிக்க நேர்ந்தால் விவசாயம் என்றால் என்ன? இதை யார் செய்வார்கள்? என்பதை பற்றி பள்ளியில் பாடபுத்தகங்களில் படிக்கக்கூடிய நிலைதான் உருவாகும்.
கிராமங்களே இந்தியாவின் முதுகெலும்பு என்றார் காந்தியடிகள். ஆனால் கிராமங்களின் முதுகெலும்பு விவசாயம் என்பதை யாரும் மறந்திட வேண்டாம். முடிந்தவரை விவசாயிகள் நலன் காக்கவும் விவசாயிகளுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளை தட்டிக் கேட்கவும் முயற்சி எடுப்போம்.
“முகவரி இல்லாத கடிதம் ஊர்போய் சேராது” என்பார்கள். விவசாயத்தை பற்றிய முகவரி கொடுத்திருக்கிறேன். ஊருக்கும், உலகுக்கும் இப்பிரச்சனையின் உண்மை நிலையை வெளிகாட்டுவது உங்கள் கையிலும் என் கையிலும்தான் இருக்கிறது... என்று கூறி நிறைவு செய்கிறேன்.
நன்றி
விவசாயத்திற்கு முகவரி தந்த அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது நன்றிகள்🙏🙏🙏🙏🙏. இதனை வாசிக்கும் பொழுது கண்கள் கலங்குகின்றன. விவசாயிகள் கார்ப்பரேட் கம்பெனிகளால் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. விவசாயம் மீட்டெடுக்கப்பட விவசாயிகள் காக்கப்பட விவசாயத்தின் முகவரியில் ஒன்றிணைவோம்!
பதிலளிநீக்கு