உங்களுக்காவது தெரியுமா?
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகத்தில் பிலயாமின் மீது தூய ஆவியானவர் இறங்கி வருகிறார். அவரும் தூய ஆவியின் வல்லமையால் அங்கு கூடியிருந்த அனைவருக்கும் இறைவாக்கு உரைக்கிறார் என்பதை நாம் காண்கிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கோவிலில் கற்பித்துக் கொண்டிருந்த பொழுது தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் நீர் எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கின்றீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? இன்று இரண்டு கேள்விகளை ஆண்டவர் இயேசுவைப் பார்த்து கேட்கின்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், திருமுழுக்கு யோவானின் திருமுழுக்கு கொடுக்கின்ற அதிகாரம் விண்ணில் இருந்து வந்ததா? மனிதரிடம் இருந்து வந்ததா? என்ற கேள்வியை அவர்களிடம் கேட்கின்றார். தலைமைக் குருக்களும் மூப்பர்களும் யோவானை ஏற்றுக்கொள்ளாததால், அவரது அதிகாரம் விண்ணில் இருந்து வந்தது என்று அவர்களால் சொல்ல இயலவில்லை. மேலும் மனிதரிடம் இருந்து வந்தது என்று அவர்கள் கூறினால் திருமுழுக்கு யோவான் மேல் நம்பிக்கை வைத்திருக்கும் மக்களின் அச்சுறுத்தலுக்கு இவர்கள் ஆளாக நேரிடும். எனவே இவர்கள், எங்களுக்கு தெரியாது! என்று பதில் கூறுகின்றனர். உடனே இயேசுவும், எந்த அதிகாரத்தால் நான் இவற்றை கற்பிக்கிறேன் என நான் உங்களுக்குச் சொல்ல மாட்டேன் என்று கூறுகிறார்.
பல நேரங்களில் பல இக்கட்டான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். அந்த நேரத்தில் முன் மதியோடும் விவேகத்தோடும் செயல்படுவதற்கு இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன. உதாரணமாக, நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் ஆங்காங்கே அநீதிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.இதை கண்டும் காணாமல் இருப்பவர்கள் பலர். அந்த அநீதிகளை கண்டு அதற்கு எதிராக குரல் கொடுக்கக் கூடியவர்கள் சிலர் உண்டு. அவர்கள் எந்த எண்ணத்தில் இதை செய்கிறார்கள்? என யோசித்து பார்க்கும் பொழுது, அவர்கள் அனைவரும் கடவுளின் ஞானத்தை பெற்றவர்களாக, அடுத்தவரின் துயரத்தை தன் துயரமாக எண்ணியதன் அடிப்படையில்அடுத்தவருக்கு நிகழக்கூடிய அநீதியை எதிர்த்து குரல் கொடுத்து நீதியை நிலைநாட்ட முயலுகிறார்கள்.
நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர் என்று மத்தேயு நற்செய்தி பிரிவு 5, அருள் வாக்கியம் 6ல் சொல்லப்படுகிறது.
அதன் அடிப்படையில் நீதியை நிலைநாட்டுவதன் மூலமாக அவர்கள் கடவுளின் முகத்தை கண்டுகொள்கிறார்கள். நிறைவை நோக்கி செல்கிறார்கள். தற்போது கூட நம் இந்திய திருநாட்டில் வேளாண் சட்ட மசோதா என்ற பெயரில் விவசாயிகளின் நலனுக்காக என்று கூறி, ஒரு சட்டமானது இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தினால் விவசாயிகளின் வாழ்வில் ஏதாவது நன்மை ஏற்படுமா என்றால் ஒரு படிவளர்ச்சி கூட இருக்காது என்ற எண்ணத்தோடு, அந்த சட்டம் தங்களுக்குத் தேவையில்லை என்ற எண்ணத்தோடு, விவசாயிகள் டெல்லியில் நாளுக்கு நாள் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுவரை அவர்களுடைய போராட்டத்திற்கும், அவர்களுடைய கருத்துக்களுக்கும் அரசு எந்த விதத்திலும் செவிசாய்க்கவில்லை. செவி கொடுக்க மறுக்கிறது. பல தன்னார்வத் தொண்டர்கள் நல்லுள்ளம் கொண்ட மனிதர்கள் அவர்களை நோக்கி செல்கிறார்கள். அவர்களுக்கு தங்கள் ஆதரவை தருகிறார்கள். அவர்களுடைய துயரத்தில் பங்கெடுக்க விரும்புகிறார்கள். இந்த அடுத்தவரின் துயரத்தில் பங்கெடுக்கும் நிகழ்வானது எங்கிருந்து வெளிப்படுகிறது? விண்ணிலிருந்து வருகிறதா? அல்லது மனிதரிடமிருந்து வருகிறதா? என்று நற்செய்தி வாசகத்தில் இயேசு எழுப்பிய கேள்வியை நம்மிடம் எழுப்பி பார்ப்போமானால், இந்த உணர்வானது, நம் அருகில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரையும் உடன்பிறப்புகளாக, சகோதரர்களாக பாவிக்கும் பொழுது உருவாகிறது. எந்த ஒரு நிகழ்வும் நம்மை தீண்டாத வரை அந்த நிகழ்வில் நாம் பங்கெடுப்பதே கிடையாது. நம்மை தீண்டும் போது மட்டுமே அந்த நிகழ்வானது நம்மை பாதிக்கிறது என்கிற உணர்வோடு நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம்மை எதுவும் தீண்டாமல் ஒரு தீங்கானது அடுத்தவருக்கு இழைக்கப்படுகிறது என்றால், அடுத்தவருக்கு இழைக்கப்படக்கூடிய அந்த தீங்கும் நமக்கு இழைக்கப்பட்ட தீங்கு! நம்மைச் சார்ந்த ஒருவர் துன்புறுகிறார் என்ற எண்ணத்தோடு, அவர்களுக்கு இழைக்கப்பட்ட கூடிய அநீதிகளை எதிர்த்து குரல் கொடுக்கவும், அங்கு நீதியை நிலைநாட்டவும் நாம் முயல வேண்டும். இயேசு இந்த மண்ணகத்தில் வாழ்ந்த போது பல நிகழ்வுகளை செய்தார். எனவேதான் இந்த அதிகாரம் உனக்கு எங்கிருந்து வந்தது? என்ற கேள்வியை அவர்கள் எழுப்பினார்கள். இயேசுவிடம் எழுப்பப்பட்ட கேள்வி இன்று நம்மிடமும் எழுப்பப்படுகிறது. அவர்களுக்காக நீ ஏன் குரல் கொடுக்கிறாய்? அவர்களுக்காக நீ ஏன் போராடுகிறாய்? என்ற கேள்வியானது எழுப்பப்படுகிறது. நாம் ஏன் அடுத்தவருக்காக குரல் கொடுக்கிறோம்? நாம் ஏன் நீதிக்காக போராட கூடிய ஒரு நபருக்கு துணை நின்று கொண்டிருக்கிறோம்? என்ற கேள்வியை இன்று நமக்குள் எழுப்பி பார்த்தால், அவனும் நம்மைச் சார்ந்தவன். நம் சகோதரன் என்ற உணர்வின் அடிப்படையில், இயேசு, தான் வாழ்ந்த சமூகத்தில் அனைவரையும் தன்னுடைய மக்களாகவே கருதினார். எனவேதான், சட்டங்களால் மக்களை அடிமைப்படுத்திய போது, சட்டங்களை விட மனிதர்களே முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்ற கருத்தின் அடிப்படையில், இயேசு மனிதத்திற்கு முன்னுரிமை கொடுத்து சட்டங்களை புறந்தள்ளினார். இன்றும் சட்டங்களால் மனிதர்கள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில் சக மனிதர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியவர்களாக நாம் இருக்க வேண்டும். இதற்கான அதிகாரம் விண்ணிலிருந்தோ, அல்லது வேறு எங்கிருந்தோ வரவேண்டும் என காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அருகில் இருப்பவனை நம்மைச் சார்ந்தவன், நம் சகோதரன், உன்னை நீ நேசிப்பது போல அடுத்தவரையும் நேசி" என்ற ஆண்டவரின் வார்த்தைகளுக்கு ஏற்ப, அடுத்தவரை நேசிப்போமானால், அடுத்தவனுக்கு இழைக்கப்படக் கூடிய அநீதி, நமக்கான அநீதி என்பதை உணர்ந்து கொள்ள முடியும். எனவே அடுத்தவனுக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு, நாமும் நீதியை நிலைநாட்டிட, துன்புறுவோருக்குத் துணையாக இருக்க இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு அழைப்பு விடுக்கின்றார். ஆண்டவர் தரக்கூடிய, தூய ஆவியானவரின் கொடைகளுள் ஒன்றான ஞானத்தைப் பெற்றுக் கொண்டவர்களாக, நாம் அனைவரும் இன்றைய நாளில், விவேகத்தோடு, அடுத்தவரின் நலனில் அக்கறை கொண்டவர்களாக, அடுத்தவரின் துயர் நீக்க இயேசுவின் பாதையில், அவரது உண்மை சீடர்களாக பயணம் செய்ய, இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரின் அழைப்புக்கு செவி கொடுத்து செயலில் இறங்குவோம்! மாற்றத்தை உருவாக்குவோம்!
நம் அருகில் இருக்கும் ஒவ்வொருவரும் ஆண்டவர் இயேசுவின் அன்பு பிள்ளைகள் என்கிற சகோதர உணர்வுடன் அனைவருடனும் அனைவரையும் அன்பு செய்து வாழ அழைப்பு விடுக்கும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது நன்றிகளும்! செபங்களும்!
பதிலளிநீக்கு