வியாழன், 24 டிசம்பர், 2020

இதயம் இல்லமாகட்டும்...(25.12.2020)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

கிறிஸ்து பிறப்பின் 2020 ஆம் ஆண்டு நிறைவை நாம் இன்று கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அனைவருக்கும் என்னுடைய கிறிஸ்துமஸ் பெருவிழா நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்! 
                  இந்த உலகம் இன்று வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த உலகத்தில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை நாம் பல்வேறு காரியங்களுக்காக பல்வேறு இடங்களுக்கு வேகமாக சென்று கொண்டிருக்கிறோம். 
நம்மைப் போலவே ஒரு நாள் ஒரு மனிதன் ஒரு குதிரையில் ஏறி மிகவும் வேகமாகச் சென்று கொண்டிருந்தான். அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் சிலர்,  அவனை அழைக்கும் விதமாக, தம்பி! தம்பி! என்று சத்தமாக கத்தினார்கள். ஆனால் அவன் காதில் எதுவும் விழுந்ததாக தெரியவில்லை. வேகமாகவே சென்றுகொண்டிருந்தான். சற்று நேரம் கழித்து அவன் திரும்பி வந்து அந்த இடத்தில் நின்ற பொழுது, அனைவரும் அவனிடம், "உன்னை தானே நாங்கள் அழைத்தோம்! சத்தமாக கூப்பிட்டோம்! உனக்கு எதுவும் காதில் விழவில்லையா? என்று அவனிடம் கோபமாக கேட்டார்கள். அதற்கு அவன் அவர்களிடம், நானா வேகமாக சென்றேன்? நன்றாக சிந்தித்து பாருங்கள். எனது குதிரைதான் வேகமாக சென்றது என்றான். அப்பொழுது அவர்கள் உனது குதிரையை நீ பிடித்து இழுத்து நிறுத்தி இருக்கலாமே! என்று கூறினார்கள். அதற்கு அவன், "எனது குதிரை நான் சொல்வதை கேட்பதில்லை! நான் வலப்புறம் செல் என்றால், அது இடப்புறம் சென்று கொண்டிருக்கும். நான் இடப்புறம் செல் என்று கூறினால் அது வலப்புறம் சென்று கொண்டிருக்கும். அதனால் அது எந்த பக்கத்தில் செல்கிறதோ, அந்த பக்கம் நான் ஏறி சென்று விடுவேன் என்று கூறினானாம். 
         இன்று நாம் வாழ்கின்ற இந்த உலகமும் அவ்வாறே சென்று கொண்டிருப்பதாக உணர்கிறோம். இந்த ஆண்டு முழுவதுமாக கண்ணுக்குத் தெரியாது ஒரு சிறிய நோய்க்கிருமி இன்று வேகமாக ஓடிக் கொண்டிருந்த  நம் அனைவரையும் ஒரு வீட்டுக்குள்ளேயே முடக்கி போட்டு விட்டது. நமது பணிகளுக்கும், நமது அண்டை அயலாருக்கு உதவிகள் செய்வதற்கும், நண்பர்களோடு மகிழ்வில் பங்கெடுப்பதற்குமென்று வாழ்ந்து கொண்டிருந்த நாம், இன்று இந்த கொரோனா கிருமியின் செயல்பாட்டினால், அது நம்மை இழுத்துச் செல்கின்ற போக்கிற்கு சென்று கொண்டிருக்கிறோம். 
                 மற்றொருபுறம் இன்று இந்தியாவில் நிறைவேற்றப்படுகின்ற புதிய சட்டங்கள் நமது வாழ்க்கை பாதையை மாற்றுவதாக இருக்கின்றன. நமது வாழ்வை உயர்த்துவதாக மாயையான   சட்டங்கள்  இன்று நிறைவேற்றப்படுகின்றன. இதன் சாதக பாதகங்களை உணர்ந்து கொள்ளாமல், இவற்றால் ஏற்படும் பாதிப்புகளின் முக்கியத்துவத்தை உணராமல் இன்று வாழ்வோர் நம்மில் பலர். இன்று 26 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டங்களை முன்னெடுத்து கொண்டிருக்கிறார்கள். இவற்றைப் பற்றிய தேடல்கள், ஆதரவுகள், மக்களால் அதிகமாக கண்டறியப் படவில்லை. இந்தப் போராட்டத்தில் 13 விவசாயிகள் உயிர் துறந்தனர். அதையெல்லாம் யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை.  ஆனால், ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடித்த நடிகையின் மரணம் மக்களை வெகுவாக பாதிக்கிறது. இத்தகைய செய்திகள் மக்களால் அதிக கவனம் செலுத்தப்படுகின்றன. நாம் எத்தகைய பாதையில் தமது வாழ்க்கையை செலுத்திக் கொண்டு இருக்கிறோம் என்று சிந்திப்போம். வேகமாக சென்று கொண்டிருக்கும் நமது வாழ்க்கை எனும் குதிரையின் கடிவாளம் நமது கரங்களில் இருக்கிறதா? அல்லது குதிரை இழுத்துச் சென்ற இடங்களுக்கெல்லாம் சென்ற மனிதனைப் போல  நாம்   இருக்கிறோமா? என்று சிந்திப்போம். 
                உலகத்தின் இத்தகைய போக்குகளுக்கு மத்தியில் இன்று நாம் கொண்டாடுகின்ற பாலன் இயேசுவின் பிறப்பு விழா நமக்கு சுட்டிக் காட்டுகின்ற செய்தி என்னவென்று சற்று ஆழமாக சிந்திப்போம். 

            இன்றை நற்செய்தி வாசகங்கள் அஞ்சாமல் வாழ நம்மை அழைக்கின்றன.  அஞ்சாமல் வாழுவதற்கு இம்மானுவேலைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.  இம்மானுவேல் என்றால் கடவுள் நம்மோடு என்று பொருள் .... கடவுள் நம்மோடு... நாம் யாரோடு...? என சிந்திப்போம்.

ஆபிரகாம் லிங்கன் தனது வாழ்வில் பலவிதமான இன்னல்களுக்கு மத்தியில் உயர்ந்து அமெரிக்காவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். அவரிடம் அவரது நண்பர் கூறினார் கடவுள் உன்னோடு இருக்கிறார் எனவே தான் நாளுக்கு நாள் உன் மதிப்பானது உயர்ந்து கொண்டே செல்கிறது என்றார். அதற்கு ஆபிரகாம் லிங்கன் கூறினாராம் கடவுள் என்னோடு இருக்கிறார் என்பதில் எனக்கு துளியளவும் ஐயமில்லை ஆனால் நான் கடவுளோடு இருக்கின்றனா?என்பதுதான் எனக்கு அவ்வப்போது எக்கூடிய கேள்வியாக உள்ளது என்றாராம் .இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் நிலவக்கூடிய இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் நாம் கடவுளோடு இருக்கின்றோமா? என்ற கேள்வி எழுப்பி பார்க்க அழைக்கப்படுகிறோம். 

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது எல்லாம் மறைந்து தனித்து வாழ்வதே வாழ்வு என்ற நிலை இன்று உருவாகியுள்ளது ... தனித்திருத்தல் என்பது நல்லது தான் ஆனால் அது உடலால் தனித்திருப்பதாகும் உள்ளதால் அல்ல. உள்ளதால் நாம் எப்பொழுதும் ஒன்றிணைந்து இருக்க இறைவன் நம்மை அழைக்கின்றார். 

ஏதோ வாடிக்கையாக கிறிமஸ் கொண்டாடிவிட்டு போவதற்காக ஆலயத்திற்கு வந்தவர்களா ...? நாம் அல்லது வேடிக்கை பார்ப்பதற்காக வந்தவர்களா? அல்லது உண்மையாலுமே இந்த வருடம் முழுவதும் இறைவன் நம்மை காத்தார் அவருக்கு நன்றி கூறுவோம் என்ற நன்றியின் வெளிப்பாடாக வந்தவர்களா....?

திருவிவிலியத்தில் யோபு என்ற மனிதரை பற்றி நாம் படித்திருப்போம் வாழ்க்கையில் ஒருவன் அடைய முடியாத அத்தனை துன்பங்களையும் அனுபவித்த போது இறைவன் கொடுத்தார் இறைவன் எடுத்துக் கொண்டார். இறைவன் பார்த்துக் கொள்வார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மனிதனாக திருவிவிலியத்தில் காட்டப்படுகிறார். அந்த யோபுவிடம் இருந்த நம்பிக்கை இன்று நம்மிடம் இருக்கிறதா? ஏனென்றால் நம்மை சுற்றியுள்ள சூழல் அனைத்தும் இன்று நமது நம்பிக்கைக்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக அமைந்திருக்கிறது. ஆனால் இந்த நேரத்திலும் நாம் அனைவரும் ஆண்டவரோடு இருப்பதை குறித்து மகிழ்வோம். உலகம் முடியும் வரை நான் உங்களோடு இருக்கிறேன் என்று சொன்ன ஆண்டவர் என்றும் எப்போதும் நம்மோடு இருக்கிறார். நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கக் கூடிய இன்ப துன்ப நேரங்களில் அனைத்திலும் அவர் நம்முடன் இருக்கிறார். நம்மோடு இருக்கும் அவரை நாம் உணர்ந்து கொள்வோம். ஒவ்வொரு நாளும் நாம் வாழ்கிறோம் என்றால் அது அவரால் மட்டுமே அந்த இறைவனோடு நாம் இருக்கவேண்டும் நாம் அவர் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு இதயத்தால் அனைவரையும் ஏற்றுக் கொண்டவர்களாக இறைவன் காட்டும் பாதையில் பயணப்படுவோம்....

நம்மோடு எப்போதும் இருக்கும் இறைவன் இன்று பிறப்பது குடிலில் மட்டுமல்ல நமது உள்ளத்தில் என்பதை மனதில் கொண்டவர்களாக நமது இதயத்தை இறைவன் பிறக்கும் இல்லமாக மாற்றிடுவோம்...
என்றும் அன்புடன் 
உங்கள் சகோ. சகா....

1 கருத்து:

  1. சகோ.சகா அவர்களுக்கு கிறிஸ்து பிறப்பு பெருநாள் வாழ்த்துகள்... உங்களுடைய ஆழ்ந்த சிந்தனையுடனான அருமையான கருத்துப்பதிவுகள் தொடர வாழ்த்துகிறேன். செபிக்கிறேன்.🙏

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...