உன் விருப்பம் என்ன...?
சொல்லானது செயலாக்கப்பட ...
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எலியாவை நான் மீண்டும் அனுப்புவேன் அவர் பெற்றோரின் உள்ளங்களைப் பிள்ளைகளிடத்திலும் பிள்ளைகளின் உள்ளங்களைப் பெற்றோர் இடத்திலும் திரும்புவார் என்ற செய்தியானது முதல் வாசகம் வழியாக வழங்கப்படுகிறது.
அதுபோலவே இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவானின் பிறப்பும் அவருக்கு பெயர் சூட்டும் நிகழ்வு நடப்பதை நாம் வாசிக்க கேட்கிறோம்.
பல இறையியலாளர்கள் கருதுகிறார்கள் மீண்டும் நான் எலியாவை அனுப்புவேன் என்று குறிப்பிடப்பட்டிருப்பது இந்த திருமுழுக்கு யோவானை பற்றியே என பலரும் கூறுகிறார்கள், இந்த திருமுழுக்கு யோவானின் பணி ஆண்டவரின் வருகைக்காக மக்கள் அனைவரும் மனம் மாறி ஆண்டவர் இயேசுவை எதிர்கொள்ள தயாராக வேண்டுமென அழைப்பு விடுக்கும் வகையில் அமைந்திருந்தது. இதே பணியைத்தான் எலியாவும் நாம் அனைவரும் தண்டனைக்கு உள்ளாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பெற்றோரின் உள்ளங்களைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளின் உள்ளங்களைப் பெற்றோர் இடத்திலும் மனம் திருப்பக்கூடிய பணியினை செய்வார் என குறிப்பிடப்படுகிறது.
ஒரு குழந்தையின் வளர்ப்பில் பெற்றோரின் பங்கு மிகவும் அவசியமாகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட குழந்தையாகிய திருமுழுக்கு யோவானுக்கு என்ன பெயர் வைப்பது? என்பதை பெற்றோர்களாகிய எலிசபெத்தும் செக்கரியாவும் முடிவு செய்கிறார்கள். இந்த மண்ணில் பிறக்கக்கூடிய ஒவ்வொரு குழந்தையும் கடவுளின் சாயலாக உருவாகிறது. இக்குழந்தைகள் கடவுள் இவ்வுலகின் மீது கொண்டிருக்கக்கூடிய அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தக்கூடிய வகையில் அமைந்திருக்கின்றன என்றால் அது மிகையாகாது.
குழந்தைகள் வழியாக நாம் கற்க வேண்டிய பாடங்கள் இவ்வுலகில் மிகவும் அதிகமாக உள்ளது. ஆனால் குழந்தைகளை நாம் எப்படிப்பட்டவர்களாக உருவாக்குகிறோம்? என்பதை சிந்திக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.
கடவுளின் கை வன்மை பெற்று இருந்த திருமுழுக்கு யோவானை எலிசபெத்தும் செக்கரியாவும் மிகவும் அன்போடும் அக்கறையோடும் கடவுளுக்கு உகந்த ஒரு குழந்தையாக வளர்த்தெடுத்தது போல நாம் நமது குழந்தைகளை வளர்த்து இருக்கின்றோமா? என சிந்திக்க இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே....
அது நல்லவராவதும்.....
தீயவராவதும்.........
பெற்றோரின் வளர்ப்பினிலே....
என்ற திரைப்பட பாடல் வரிகள் நாம் நமது குழந்தைகளை எப்படி உருவாக்க வேண்டும்? என்பதை சுட்டிக் காட்டக் கூடியதாக அமைகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் எலிசபெத் தன்னுடைய மகனுக்கு யோவான் என பெயர் வைக்க முன்மொழிந்த போது மௌனமாக வாய் கட்டப்பட்டிருந்த செக்கரியாவை நோக்கி அங்கு இருந்தவர்கள் எல்லாம் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்? உன் விருப்பம் என்ன? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். இன்று அதே கேள்வியை தான் இறைவன் நம்மிடம் எழுப்புகிறார். நமது குழந்தைகளை நாம் எப்படி வளர்க்கப் போகிறோம்? நம் விருப்பம் என்ன ?என்ற கேள்வியை தான் இன்று இறைவன் வாசகங்கள் வழியாக நம்மிடம் கேட்கின்றார். ஆண்டவரின் கேள்விக்கு நாம் எப்படி பட்ட பதிலைச் சொல்ல போகிறோம்? என சிந்திப்போம்.
நமது குழந்தைகளை நல்ல குழந்தைகளாக நாம் வளர்க்கப் போகிறோம் என சொன்னால்.... சொல்லானது செயலாக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. நாம் நமது குழந்தைகளை நல்ல குழந்தைகளாக கடவுளின் கை வன்மையை பெற்றிருந்த திருமுழுக்கு யோவானை எப்படி எலிசபெத்தும் செக்கரியாவும் வளர்த்தார்களோ அவர்களைப்போல கடவுளின் அன்பு பரிசாகிய குழந்தைகளை நாமும் கடவுளுக்கு ஏற்ற குழந்தைகளாக வளர்த்தெடுக்க கூடியவர்களாக... பொறுப்பினை உணர்ந்தவர்களாக செயல்பட இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்.
பெற்றோர்கள் தனது பிள்ளைகளை பற்றியும் அவர்களின் வாழ்வு முறை பற்றியும் சிந்தித்துப் பார்க்க அருமையானதொரு தலைப்பு இன்று. அருமையான கருத்துகளை வழங்கிய அருட் சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களது பணிகள் சிறப்பாக தொடர ஜெபிக்கிறோம்!
பதிலளிநீக்கு