திங்கள், 7 டிசம்பர், 2020

அன்பிய கிறிஸ்து பிறப்பு விழா மன்றாட்டுக்கள் ...(10.12.2020)

மன்றாட்டுக்கள்:
1. விண்ணையும் மண்ணையும் படைத்த அன்பு இறைவா! உம்மைப் போற்றுகிறோம்! புகழ்கிறோம்! நன்றி கூறுகிறோம்! எமது திருஅவையை வழிநடத்தக்கூடிய திருஅவை தந்தையர்களுக்காகவும் ஆயர்களுக்காகவும், குருக்களுக்காகவும், கன்னியர்களுக்காகவும் ஏனைய துறவறத்தார் அனைவருக்காகவும் செபிக்கிறோம். இவர்கள் அனைவரும் அஞ்சாது, ஆண்டவர் இயேசுவாகிய உம்முடைய பணியை துணிவோடு செய்ய இவர்களுக்கு தேவையான ஆற்றலையும் ஞானத்தையும் விவேகத்தையும் தூய ஆவியானவர் வழியாக இவர்களுக்குத் தந்தருள வேண்டும் என இந்நேரத்தில் இறைவா உம்மை இரைஞ்சி மன்றாடுகிறோம்.

2. படைப்பின் நாயகனே எம் இறைவா! 
இன்றைய நாளில் எங்களுடைய அன்பியம் சார்பாக முன்னெடுக்கக் கூடிய இந்த கிறிஸ்து பிறப்பு பெருவிழா  நிகழ்ச்சி வழியாக எங்கள் உள்ளங்களில் பிறக்கவிருக்கக்கூடிய உம்மை நாங்கள் அன்போடும் மகிழ்வோடும் ஏற்கவும், தன்னலம் துறந்து பொதுநலப் பணி செய்யக் கூடியவர்களாக,  உம்மை போன்று,  உமது உண்மையான சீடர்களாக இச்சமூகத்தில்  உருமாறிட உமது ஆற்றலையும் ஞானத்தையும் எங்களுக்கு தந்து  எங்களை பிறர் நலச் சேவையில் வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அரசர்களுக்கெல்லாம் அரசரான எம் இறைவா!
நிகழக்கூடிய இந்த இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில்,  எங்கள் நாட்டை ஆளக்கூடிய தலைவர்களை நாங்கள் விரைவில் தேர்வு செய்யவிருக்கிறோம். நாங்கள் நல்லதொரு தலைவரை தேர்வு செய்யவும், நல்ல ஒரு தலைவர் உதயமாகி எங்கள் நாட்டில் இருக்கக்கூடிய பிரச்சனைகளில் இருந்து எங்களை விடுவித்து, நல்லதொரு ஆட்சியை மண்ணிலேயே மலரச் செய்து, உம்முடைய மக்கள் மகிழ்வோடு வாழச் செய்ய நல்ல தலைவர்களை தன்னலமற்ற,  பொதுநல சேவை பான்மை கொண்ட நல்ல தலைவர்களை எம் சமூகத்தில் உருவாக்கிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்பின் இறைவா!
 பல்வேறு நோயினாலும், பொருளாதாரத்தில் பின்தங்கியதாலும் நலிவுற்று வாடும் ஏழை எளிய மக்களை உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம்.  அவர்கள் அனைவரையும் கண்ணோக்கியருளும். அவர்கள் அனைவருக்கும் நீரே நல்ல ஒரு தகப்பனாக இருந்து, அவர்களின் தேவைகளை எல்லாம் நிவர்த்தி செய்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை  இரைஞ்சி மன்றாடுகின்றோம்.

5. பாலன் இயேசுவாக எம் மத்தியில் பிறக்க ஆசைகொண்ட எம் இறைவா!
உமது மாட்சிமிக்க தெய்வீகத்தில் நாங்கள் பங்குபெற உமது சாயலில் அன்று நீர்  எம்மை படைத்தீர். கிறிஸ்து அவனாக, கிறிஸ்து அவளாக, உமது இறைச் சாயலை வெளிப்படுத்தி வாழ்ந்திட, உமது மண்ணுலகப் பிறப்பின் வழியாக ஒவ்வொரு ஆண்டும் இந்த கிறிஸ்துமஸ் நாளில் எமக்கு நீர் அழைப்பு விடுக்கின்றீர். எமது உள்ளத்தில் இதனை உணர்ந்தவர்களாக அவ்வப்போது எம்மை பற்றிக்கொள்ளும் பாவ மாசுகளை விலக்கி, உமது அன்பு பிள்ளைகளாக உமது தெய்வீக சாயலில் வாழ்ந்திட இறையருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...