புதன், 16 டிசம்பர், 2020

"வரும் ஒரு காலம்" (17.12.2020)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

இன்றைய முதல் வாசகத்தில், எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை, யாக்கோபு தன் புதல்வர்களுக்கு  கூறக்கூடிய, நிகழ்வினை நாம் வாசிக்கின்றோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் மூதாதையர் பட்டியலானது தரப்படுகிறது. 

இன்றைய வாசகங்களின் அடிப்படையில் மனித மனங்கள் அதிகம் விரும்பக் கூடியது.
1.எதிர்காலம் எப்படி இருக்கும் என எண்ணுவது. 
2. கடந்த காலம் எப்படி இருந்தது என சிந்தித்துக் கொண்டிருப்பது. 
இன்றைய வாசகங்களின் அடிப்படையில் மனித எண்ணங்களை நாம் இந்த இரு வகையில் வகைப்படுத்தி பார்க்கலாம்.  
1.  வருங்காலம் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தோடு பயணிப்பது. 
2. கடந்த காலத்தை நினைத்து பயணம் செய்துகொண்டிருப்பது. 

மனித வாழ்க்கை என்பதே ஒரு தொடர் பயணம் என்று பொதுவாக கூறுவார்கள். மனித வாழ்வில் ஒவ்வொரு நாளும் நாம் பலவிதமான மனிதர்களை சந்திக்கிறோம். பல விதமான அனுபவங்களை பெறுகிறோம். ஆனால் ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கைக்கான பாடத்தைக் கற்றுக் கொண்டே நகர்ந்து கொண்டிருக்கிறோம். இத்தகைய உலகத்தில் நம்மில் பலர் பெரும்பாலும் எதிர்காலத்தை எண்ணி வருந்துபவர்களாகத் தான் இருக்கிறோம்.

 வருங்காலம் வளமாக அமைய, "வரும் ஒரு காலம்" என எண்ணக் கூடியவர்களாக நம்மில் பலர், இருக்கின்றார்கள். பல நேரங்களில் வருங்காலம் பற்றிய எண்ணமானது நிகழ்காலத்தை அழிக்கிறது. எதிர்காலத்தை எண்ணி எண்ணி நிகழ்காலத்தை வாழ மறந்து போகிறார்கள். நிகழ்காலத்தில் உறவுகளோடு இணைந்திருக்க மறுக்கிறார்கள். நிகழ்காலத்தில் உறவுகளோடு இணைந்திருப்பதில் உள்ள இன்பத்தை பெற்றுக்கொள்ள தவறுகிறார்கள். 

இன்றைய வாசகங்கள் வழியாக, எதிர்காலம் குறித்து யாக்கோபு தன் புதல்வர்களுக்கு அறிவிக்கக்கூடிய நிகழ்வாக இருக்கட்டும்!  இயேசுவின் தலைமுறைப் பட்டியலாக இருக்கட்டும்! நமக்கு சொல்லக்கூடிய ஆழமான செய்தி என்னவென்றால்,  வருங்காலத்தையும், கடந்த காலத்தையும் எண்ணி, நிகழ்காலத்தை இழக்காதே!  என்பதாகும்.  

தலைமுறைப் பட்டியல் என்பது,  ஒருவனின் மூதாதையர் பட்டியல் என்பது,  அவன் யாருடைய மகன்? அவனுடைய பின்னணி என்ன? என்பதை எல்லாம் தெளிவாக எடுத்துரைக்கிறது. ஆனால் வரலாறு என்பது கூட, வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுவது தான் என்ற கருத்தானது நிலவுகிறது. வரலாறு எழுதுபவனின் சார்பாகவே அமைந்திருக்கிறது என்ற கருத்தும் நிலவுகிறது. 
வரலாற்றில் நடந்தவைகளை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் வரலாற்றைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருப்பது ஏற்புடையதல்ல.  கடந்த கால அனுபவங்கள், நிகழ்காலத்தில் நாம் சரியாக செயல்பட வழி வகுக்க வேண்டும். கடந்த காலத்தில் நடந்ததை நினைத்து  நினைத்து நிகழ்காலத்தை நாம் இழக்கக் கூடாது.

 இன்று மனித வாழ்க்கையில் பெரும்பாலான மனிதர்கள் வரும் காலத்தையும், கடந்த காலத்தையும் எண்ணி, நிகழ்காலத்தை மறக்கிறார்கள். நிகழ்காலத்தில் நாம் 
ஞானம் கொண்டவர்களாகவும், 
அன்பானவர்களாகவும், 
நியாயமானவற்றை செய்யக் கூடியவர்களாகவும் 
துணிவு மிக்கவர்களுமாகவும் 
பயணம் செய்ய  ஒவ்வொரு நாளும்  வாழ்வில் சந்திக்கின்ற இடர்பாடுகளை எல்லாம், எதிர்கொண்டு, அவைகளைத் தடைகளாகக் கண்டு முடங்கி விடாமல்,  அதனை தகர்த்தெரிந்தவர்களாக,  தொடர் பயணத்தில் ஈடுபட நாம் அனைவரும் இன்றைய வாசகங்கள் வழியாக அழைக்கப்படுகிறோம். 

ஆம்! அன்புக்குரியவர்களே! வருங்காலம் வளமாக மாற, "வரும் ஒரு காலம்" என எண்ணிக் கொண்டே இருப்பதை விட,  வருங்காலம் வளமானதாக மாற வேண்டும் என்றால், கடந்தகால அனுபவங்களோடு,  நிகழ்காலத்தை நாம் சரியாக வாழவேண்டும். நிகழ்காலம் சரியாக இருக்கும் பொழுது, கண்டிப்பாக வரும் காலம் வளமான காலமாக மாறும். கடந்த காலத்தையும், வரும் காலத்தையும், சிந்தித்தவர்களாய்,  நிகழ்காலத்தை இழந்துவிடாது,  வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும், ஒவ்வொரு நிமிடத்தையும், அர்த்தமுள்ள வகையில் ஆண்டவர் இயேசு காட்டிய பாதையில், அவரைப்போல, அடுத்தவருக்காக பணிகளை முன்னெடுத்து, 
அன்போடும்! 
ஞானத்தோடும்! 
நியாயமானவர்களாகவும்! 
துணிவோடும் வாழ்ந்து,

 இயேசுவின் சீடர்கள் நாம் என்பதை இவ்வுலகிற்கு வெளிக்காட்டிட,  இன்றைய நாளில்  நமது வாழ்க்கை என்னும் பயணத்தில் புதிய அத்தியாயத்தை தொடருவோம்.

2 கருத்துகள்:

  1. நம் கையில் இருக்கும் நிகழ்காலம் என்னும் பொற்காலத்தை மகிழ்வோடு அனுபவிப்போம் பிறரையும் மகிழ்ச்சிப்படுத்துவோம்! என்று அன்புடன் அழைக்கும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது அன்பான வாழ்த்துக்களும்! மகிழ்வின் நன்றிகளும்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...