இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நாம் அனைவரும் பயணம் செய்ய இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.
பயணம் செய்ய அழைக்கப்படுகிறோமா? எதை நோக்கி? எங்கிருந்து எங்கு வரை? என்ற கேள்விகள் உள்ளத்தில் எழலாம். நாம் செய்ய வேண்டிய பயணம் வாழ்க்கை என்ற பயணமாகிறது. ஆம், வாழ்க்கை பயணத்தில் இன்னல்கள் ஏராளம் உண்டு. தடைகள் ஏராளம் உண்டு. ஆனால் அந்த தடைகளை எல்லாம் கடந்து தடைகளை கண்டு, நாம் பயணத்தையும் நிறுத்தாது தொடர்ந்து பயணிக்க இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நம்மை அழைக்கின்றார்.
கடுமையான வறட்சி காரணமாக ஒரு கிராமத்தில் கிணற்றிலிருந்து தண்ணீர் அனைத்தும் வற்றி போனது. விவசாயி விவசாயம் செய்வது எப்படி என தெரியாமல் குழம்பிப் போனார். ஆனால் நம்பிக்கையோடு கிணற்றை ஆழமாக வெட்டுவோம் என முடிவு செய்து கிணற்றை வெட்டத் தொடங்கினார். 30 அடிவரை வெட்டியும் தண்ணீர் வரவில்லை. தனது மனைவி பிள்ளைகளின் நகைகளையெல்லாம் அடமானம் வைத்து 60 அடி வெட்டினார். தண்ணீர் வரவில்லை. இனி விற்கவோ வைக்கவோ எதுவுமே இல்லாத நிலை. ஊரில் எல்லோரும் கேலியாகப் பேசினார்கள். கோபத்தின் உச்சத்துக்கு சென்ற விவசாயி, இரவு நேரத்தில் கிணற்றுக்குள் இறங்கினார். நம்பிக்கையோடு உன்னை வெட்டினேன். நீ என்னை ஏமாற்றி விட்டாயே! என்று சொல்லி, கிணற்றின் பக்கத்துச் சுவரில் மடார் மடார் என்று தலையை முட்டினார். சிறிது நேரம் கழித்து அந்த கல்லுக்கு அருகாமையில் சிறிதாக தண்ணீர் கசியத் துவங்கியது. அதிர்ச்சி அடைந்து அந்தக் கல்லை ஆட்டினார். தண்ணீர் அதிகமாக வரத் தொடங்கியது. சற்று நேரத்திற்குள் 30 அடிக்கு மேலே தண்ணீர் வர ஆரம்பித்தது. உடனே மேலே வந்து சத்தம் போட்டு பக்கத்து வயலில் வேலை செய்தவர்களை எல்லாம் அழைத்து அச்செய்தியை கூறினார். மற்ற விவசாயிகளும் வந்து பார்த்து பெருமிதம் கொண்டார்கள். ஆனால் சற்று நேரத்தில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக விவசாயி மயங்கி மண்ணில் சாய்ந்தார். அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அவரும் பிழைத்துக் கொண்டார்.
தோல்வியை தடையாக நினைத்துக்கொண்டு சோர்ந்து போகாமல் அவைகளை படிக்கற்களாக நினைத்து பயணம் தொடர வேண்டும் என்பதை இக்கதை உங்களுக்கு உணர்த்தும் பாடமாகக் கருதலாம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இத்தகைய விவசாயியைப் போலவே நாம் ஒருவரைக் காண்கிறோம். ஆம்! பார்வையற்ற இருவர் வழியோரம் அமர்ந்துகொண்டு, தங்கள் அமர்ந்திருக்கும் பாதையில் இயேசு என்கிறவர் செல்கிறார் என்பதையும் அறிந்தவர்களாய் தாவீதின் மகனே எங்களுக்கு இரங்கும் என்று கத்தினார்கள். பலர் அவர்களை கத்துவதை நிறுத்துமாறு கூறி, அதட்டினார்கள். ஆனால் அவர்கள் தங்களின் குரலை நிறுத்திக் கொள்ளவில்லை. மாறாக இன்னும் அதிகமாக உரத்த குரலில் தாவீதின் மகனே எங்களுக்கு இரங்கும் என்று கத்தினார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, நான் இதை செய்யமுடியும் என நம்புகிறீர்களா? என கேட்டார். அதற்கு அவர்கள் ஆம் ஐயா என்றார்கள். அவர்களின் நம்பிக்கையை கண்டு, அவர்களின் கண்களைத் தொட்டு, நீங்கள் நம்பிய படியே உங்களுக்கு நிகழட்டும் எனக்கூறி பார்வையற்றவருக்கு பார்வை தந்தார். மனித வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் மாறி மாறி வரக் கூடியது. எது எப்போது வரும் என அறியாத வண்ணம் இறைவன் இரண்டையும் மாறி மாறி அனுப்புகிறார் என சபை உரையாளர் புத்தகம் உணர்த்துகிறது. ஆனால் நாம் வாழக்கூடிய இந்த வாழ்க்கையில், பெரும்பான்மையானவர்கள் துன்பங்களைக் கண்டு துவண்டு போகிறார்கள். சிலர் முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு கட்டத்தில், இனி முயற்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் எதை எடுத்தாலும் தோற்றுத்தான் போவோம் என்று கூறி முயற்சியில் இருந்து பின்வாங்க கூடிய சூழலில் இருக்கிறார்கள்.
நம் அனைவருக்கும் தெரிந்த ஒருவர், மின் விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முயற்சிகளுக்குப் பின் தான் அவர் மின் விளக்கை விளக்கை கண்டுபிடித்தார் எனக் கூறுவார்கள். பலவிதமான முயற்சிகளுக்குப் பிறகுதான், பலவிதமான தோல்விகளை சந்தித்த பிறகுதான் மின் விளக்கை கண்டுபிடித்தார் என கூறுவார்கள். முதல் முறை இரண்டாம் முறை மூன்றாம் முறையென தோல்வியையே சந்தித்து கொண்டிருந்த தாமஸ் ஆல்வா எடிசன், தன்னுடைய முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணியிருந்தால் இன்று இந்த உலகம் இருளில் ஒளிர்ந்திருக்காது. இது போலத்தான் நம்முடைய வாழ்வும். நமது வாழ்வில் துன்பங்களே நமக்குப் பரிசாக கிடைத்தது என்றால் கண்டிப்பாக இந்தத் துன்பங்கள் ஒரு நாள் மறையும். நம்மால் துன்பங்களைக் கடந்து, தடைகளை கடந்து வெற்றியை நோக்கிச் செல்ல முடியும்.
பொதுவாக கூறுவார்கள் ஒருவன் துன்பப்படுகிறான் என்றால் ஒருவனால் தாங்க முடியாத அளவு துன்பத்தை கடவுள் உனக்கு தருவதில்லை. எத்தகைய துன்பத்தை அவனால் தாங்கிக் கொள்ள முடியுமோ அத்தகைய துன்பத்தைத் தான் கடவுள் தருகிறார். அந்தத் துன்பத்தின் வழியாக இன்பத்தைக் கண்டு கொள்ள வேண்டும் என்பதே இறை விருப்பமாக இருக்கிறது. அந்த விருப்பத்தை நாம் நிறைவேற்ற வேண்டுமாயின் துன்பங்களுக்கு பின்னாக உள்ள இன்பத்தைக் கண்டு கொள்ள வேண்டுமாயின், நாம் தொடர் முயற்சியில் ஈடுபட வேண்டும். ஆண்டவரே எங்களுக்கு இரங்கும் என உரக்க கத்திய பார்வையற்றவர்களை போல, நம்பிக்கையோடு தடைகளை கடந்து நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும் போது, கண்டிப்பாக நாம் வெற்றியை அடைய முடியும். இதையே இன்றைய முதல் வாசகத்திலும் பார்க்கிறோம். அந்நாட்களில் காது கேளாதோர் ஏட்டுச் சுருளின் வார்த்தைகளை கேட்பர். பார்வையற்றோரின் கண்கள் காரிருளில் இருந்தும் மையிருளில் இருந்தும் விடுதலையாகி பார்வை பெறும். ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர். மானிடரில் வறியவர், இஸ்ரயேலின் தூயவரில் அக மகிழ்வர். கொடியோர் இல்லாதொழிவர். இகழ்வோர் இல்லாமல் போவர். தீமையில் நாட்டம் கொள்வோர் அழிந்து போவர் என்ற செய்திகள் எல்லாம் இயேசுவின் காலத்தில் நிறைவேறியதை நாம் உணரலாம். பிறவிக் குருடன், இவன் பாவம் செய்தவன். இவனோடு நாம் தொடர்பு கொள்ளக் கூடாது. இவனை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும். ஊனமுற்றவன் இவன் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்தவன். ஆகவேதான் குறைபாடுகளோடு பிறந்திருக்கிறான் என்று கூறி ஒதுக்கி வைத்த அச்சமூகத்தில், இயேசு மாற்றத்தை முன்மொழிகிறார். ஒதுக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒடுங்கிப் போய்விடவில்லை. ஆண்டவரை நோக்கி குரல் எழுப்பிக் கொண்டே இருந்தார்கள். இப்படி இஸ்ராயேல் மக்கள் நசுக்கப்பட்ட போது கூட கடவுள் தங்களைை மீட்பார் என்ற நம்பிக்கையோடு, கடவுளைை நோக்கி குரல் எழுப்பினாரோ, அதுபோல, இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்ட பார்வையற்ற குருடர் தொடர் குரல் எழுப்பியது போல, நாமும் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய தடைகளை கண்டு, மனம் தளராது தொடர் முயற்சியில் ஈடுபட்டு, வெற்றியைை பரிசாக்கிக் கொள்ள, அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய் தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல், தடைகளைக் கண்டு நமது முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், நமது முயற்சிகளுக்கு தொடர் புள்ளிகளை கொடுத்து வெற்றியை பரிசாக்கிக் கொள்ள இன்றைய நாளில் இறைவன் நம்மை அழைக்கின்றார். அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய், வாருங்கள் இயேசுவின் பாதையில் தொடர்ந்து நம்பிக்கையோடு பயணம் செய்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக