வியாழன், 10 டிசம்பர், 2020

வெற்றி நிச்சயம்! (11.12.2020)

வெற்றி நிச்சயம்!

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வந்த இஸ்ரயேல் மக்களுக்கு வழங்கக்கூடிய கடவுளின் செய்தியைத் தான் இன்றைய நாளில் நாம் வாசிக்கின்றோம். அவர் தன்னுடைய செய்தியில் கடவுளின் கட்டளைக்கு நாம் செவிசாய்த்து நடந்தால்  நிறை வாழ்வையும் வெற்றியையும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற செய்திகளை அவர் வழங்குகிறார். மேலும் நாம் இறைவனின் வார்த்தைகளின் படி வாழக் கூடியவர்களாக இருந்தால், நமது வழிமரபினர் மணலை விட எண்ணிலடங்காதவர்களாக இருப்பார்கள் என ஆசி மொழிகளை  உதிர்க்கின்றார்.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மக்களை குழந்தைகளுக்கு, சிறு பிள்ளைகளுக்கு ஒப்பிட்டுக் கூறுகிறார். இன்றைய வாசகங்கள் வழியாக நமக்குக் கிடைக்கக்கூடிய செய்தி வெற்றி நிச்சயம் என்பதாகும். எப்படி என்றால், கடவுளின் கட்டளைக்கு செவிசாய்த்து நடக்கும் பொழுது கண்டிப்பாக வெற்றி நமக்கு கிடைக்கும். ஆனால் இந்த மண்ணக வாழ்வில் நாம் அனைவரும் சிறு பிள்ளைகளைப் போல செயல்படுகின்றோம். பல நேரங்களில் நாம் ஒரு செயலை செய்தால்,  அது சரி என்றும், அதே செயலை மற்றவர் செய்யும் போது அதை தவறு என்கிறோம். ஒரு செயலை நாம் செய்தால் அனைவரும் பாராட்ட வேண்டும் என்று எண்ணுகிறோம். அதைச் செயலை மற்றவர்  செய்தால் நாம் பாராட்ட மறுக்கின்றோம். பல நேரங்களில் இவ்வாறாகத் தான் நாம் இருக்கிறோம். பல நேரங்களில் நமக்கு என்றால் அது சரி. அடுத்தவருக்கு என்றால் அது தவறு, என்ற மனப்பான்மை நம்மிடம் இயல்பாகவே இருக்கிறது. இந்த மனநிலையில் இருந்து மாற்றம் பெறக் கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். கட்டளைகளுக்கு எல்லாம் முதன்மையான கட்டளை, உன்னை நீ நேசிப்பது போல உனக்கு அடுத்திருப்பவரையும் நேசி  என்பதை நாம் விவிலியத்திலிருந்து அறிந்து கொள்கிறோம். நம்மை நேசிப்பது போல அடுத்தவரை நேசிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். அது எளிதான காரியம் அல்ல. ஆனால், எளிதான காரியமாக மாற்றிக்கொள்ள வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. சிறு குழந்தைகளை பொறுத்தவரை எப்போதுமே எல்லோரும் இணைந்து இருக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். கள்ளம் கபடமற்றவர்களாக இருப்பார்கள். அந்தக் கள்ளங்கபடமற்ற தன்மை நம்மிடம் இருக்க வேண்டும். நாம் அனைவருமே கடவுளின் பார்வையில் சிறு பிள்ளைகள்
 தான். அவருடைய கட்டளைகளின்படி நாம் வாழவேண்டும். அவருடைய ஒரே அன்பு கட்டளை, தன்னைத்தானே நேசிப்பது போல அடுத்தவரையும் நேசி என்பதாகும்.  நாம் ஒரு செயலை, ஒருவர் செய்தார் என்னும்  போது அவர் இடத்தில் நம்மை வைத்துப் பார்ப்போம். ஒருவேளை நாம் அவரது இடத்தில் இருந்திருந்தால்,  நான் செய்த செயலுக்காக பலர் நம்மை பாராட்டுவார்களா? நமது செயலைக் குறித்து அதனை நாம் சரி செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு,  அறிவுரைகள் வழங்குவார்களா?  எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் என சிந்திப்போம். நாம் நம்மைப் போலவே அடுத்தவரையும் நோக்க வேண்டும்.  நம்முடைய செயல்களை நாம் தீர்ப்பிடுவது போலவே அடுத்தவருடைய செயல்களையும் நாம் தீர்ப்பிடவேண்டும். நம்மை நாம் சரி செய்து கொள்வது போலவே அடுத்தவர்கள் கூறக்கூடிய அறிவுரையின்படி நம்மை நாம் சரி செய்து கொள்ளக் கூடியவர்களாகவும் இருந்திடவேண்டும். இத்தகையை செய்தியையே இன்றைய வாசகங்கள் வழியாக  நமக்கு வழங்கப்படுகிறது. 
 கடவுளின் கட்டளைக்கு செவி கொடுத்து நடந்தால் அவர்கள் நிறைவாழ்வை ஆற்றலைப் போலும்,  வெற்றியை கடல் அலைபோலும் பெற்றுக் கொள்வார்கள் என்ற ஏசையா இறைவாக்கினரின் வார்த்தைகளுக்கு ஏற்ப நாம் நம்முடைய இந்த மண்ணுலக வாழ்வில் ஒவ்வொரு நாளும் கடவுளின் பிள்ளைகள் நாம்என்பதை மனதில் இருத்தியவர்களாய்,  அவர்கள் கடவுளின் கட்டளைகளைக் செவிகொடுத்து அதன்படி நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்போது வெற்றி நிச்சயம். எனவே வாழ்க்கையில், வெற்றியை அடைய இறைவன் காட்டும் இந்த வழியில் இணைந்து இயேசுவோடு இணைந்து பயணிப்போம் வாருங்கள்.

1 கருத்து:

  1. நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதை உணர்வோம்! குழந்தை மனநிலையோடு வாழ்வோம்! நமக்கு என்றுமே வெற்றி நிச்சயம்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...