வெள்ளி, 18 டிசம்பர், 2020

கடவுளால் கூடாதது ஒன்றுமில்லை! (19.12.2020)

கடவுளால் கூடாதது ஒன்றுமில்லை!

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இ璥
 இன்றைய முதல் வாசகத்திலும், நற்செய்தி வாசகத்திலும்,  குழந்தையின்மையால் வாடக்கூடிய இரு தம்பதியினரை பற்றி நாம் வாசிக்க கேட்கிறோம்.

 முதல் வாசகத்தில் மனோவாகு என்பவரைப் பற்றி நாம் வாசிக்கிறோம். .அவரும்  அவருடைய மனைவியும் குழந்தையின்மையால் வாடுகிறார்கள். அவர்களின் வேதனைகளையும், துயரங்களையும் கண்ணோக்கிய இறைவன்  ஒரு குழந்தையை  உனக்கு நான் தருவேன் எனக் கூறுகிறார். அந்த மகனைப் பெற்றெடுக்கும் வரை அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் வானதூதர் வழியாக
இறைவன் அவர்களுக்கு உணர்த்துகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட செக்கரியாவும் எலிசபெத்தும், குழந்தையின்மையால் மிகவும் வருந்துகிறார்கள். செக்கரியா  தங்களுக்கான குழந்தைக்காக இறைவனிடத்தில்  வேண்டுகிறார். இறைவனும் செக்கரியாவின் வேண்டுதலுக்கு செவிகொடுத்து அவருக்கு குழந்தை வரத்தை அருளுகிறார். ஆனால் தம்மிடம் உரைப்பது இறைவனின் தூதர் என்பதை உணர்ந்து கொள்ளாத செக்கரியா, தடுமாற்றம் அடைகிறார். நான் கூறியது  நிறைவேறும் வரை உன்னுடைய வாய் கட்டப்பட்டிருக்கும் என்ற செய்தியினை வானதூதர் செக்கரியாவுக்கு அறிவிக்க, அவரும், இறை திருவுளத்தை உணர்ந்து கொள்ளும் வரை வாய் கட்டப்பட்டவராக இருக்கிறார்.
இன்று நாம் வாழக்கூடிய இந்தச் சமூகத்தில், இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் தமக்கு கூடிய செய்தி என்ன என சந்திக்கும்போது, கடவுளால் கூடாதது ஒன்றுமில்லை என்ற செய்திதான்,  இன்றைய வாசகர்களின் மையக் கருத்து என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.  

ஆம் அன்புக்குரியவர்களே!
ஒரு குடும்பத்தில் குழந்தை இல்லை என்றால், அந்த குடும்பத்தினர் படக்கூடிய வேதனைகள் ஏராளம். அதிலும் குறிப்பாக,  பெண்கள் படக் கூடிய வேதனை எண்ணிலடங்கா.   பெரியாரின் சிந்தனை ஓட்டத்தில் பார்ப்போமானால்,  தம்பதியினர் இருவருக்கும் குழந்தை இல்லை.  ஆனால் இந்த சமூகம் பெண்ணைத்தான் மலடி என்று அழைக்கும்.  குழந்தை இல்லாததால் அவள் சுப நிகழ்வுகளில் பங்கேற்க கூடாது. அவள் பார்த்தால் தீட்டு. அவள் வெளியே செல்லும் முன் வந்து நின்றால் தீட்டு,  என்றெல்லாம் கூறி, பெண்ணை அடிமைப்படுத்தக்கூடிய நடைமுறை,  இன்று மட்டுமல்ல,  தொடக்க கால சமூகத்திலிருந்தே இருந்து வந்ததுதான்.  இத்தகைய பெண்ணடிமைத்தனத்தை பலரும் எதிர்த்தார்கள்.  அவர்களுள் பெரியாரும் ஒருவர். 

 இன்று நாம் வாழக்கூடிய இந்த சமூகத்தில் கூட இன்றும் இந்த பழமைவாத சிந்தனைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. குழந்தை இல்லை என்ற காரணத்திற்காக பெண்களை இழிவாக நடத்தக்கூடிய பழக்கமானது, இன்னும் பல குடும்பங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  

குழந்தை என்பது இறைவன் கொடுக்கக்கூடிய ஒரு பரிசு. ஒரு குழந்தை  இந்த உலகத்தில் பிறக்கிறது என்றால்,  கடவுள் இந்த உலகத்தை இன்னும் அன்பு செய்து கொண்டிருக்கிறார் என்பதன்  அடையாளம் என்பார்கள்.  

இந்த உலகில் நெடுங்காலமாகவே இருக்கக்கூடியது எது? என வினவினால்,அது... 
பிறப்பும் 
இறப்பும் ..... மட்டும்தான். 

இது பல காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இனியும் தொடர்ந்து கொண்டே இருக்கப் போகிறது. ஆனால் இந்த, "குழந்தையின்மை" என்ற காரணத்தினால் ஒரு ஆணும் பெண்ணும் சமூகத்தில் அடையக்கூடிய துன்பங்களும் துயரங்களும் ஏராளம். பெரும்பாலான ஆண்கள்,  குழந்தையை பெறுவது  மட்டுமே   தங்களுடைய ஆண்மையின் அழகு என என்ன கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் குழந்தை என்பது இறைவனால் கொடுக்கப்பட்டக்கூடிய ஒரு கொடை. அந்த கொடையை நாம் இறைவனின் பரிசாக எண்ணி,  பெற்றுக்கொள்ள வேண்டும்.  நம் வழியாக இவ்வுலகத்தை காணக்கூடிய குழந்தைகளுக்கு இந்த உலகத்தில் உள்ள நன்மைகளை கற்பிக்கவேண்டும்.  அவர்கள் சுயமாக நிற்பதற்கும், சுயமாக சிந்தித்து வளர்வதற்கும்,  சுயமாக செயல்படுவதற்குமான வாய்ப்புகளை, நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும். அவர்களின் வாழ்வுக்கு வழி காட்டவேண்டும். உயிரை உருவாக்குவது யாராலும் முடியாத ஒரு காரியம்தான்.உயிர் அளிப்பது இறைவனுடைய ஆசீர். அந்த உயிரை இறைவன் தருகிறார்.  இறைவன் தரக்கூடிய உயிரை பேணிப் பாதுகாப்பது என்பது நம் ஒவ்வொருவரின் கடமை. ஆனால் அது நம்மாள் இயலாது என எண்ணக் கூடியவர்களாகத் தான் நம்மில் பலர் இருக்கிறோம். அப்படிப்பட்ட நேரங்களில் மனதில் நிறுத்துவோம், கடவுளால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.  கடவுள் அனைத்தையும் நலமாக்குவார்.  எப்படி குழந்தையின்றி வாடிய மனோவாகு தம்பதியினருக்கும், செக்கரியா தம்பதியினருக்கும், கடவுள் குழந்தைச் செல்வத்தை கொடுத்தாரோ, அதே போல கடவுள் நமது வாழ்விலும்,  நம்மால் இயலாது. இனி நம்மால் எதுவும் செய்ய முடியாது, என நாம் தடுமாறி, வழியற்று, திசை தெரியாது நிற்கக்கூடிய நேரங்களில், அவர் நமக்கு உற்ற துணையாக இருந்து, நமது கவலைகளை தீர்க்கக் கூடியவராக இருப்பார். அவரை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அவருடைய வார்த்தைகளை நம்பி, அவர் காட்டும் வழியில் செல்லக் கூடியவர்களாக நாம் இன்றைய நாளில் உருவாக, இன்றைய வாசகங்களின் வழியாக நாம் அழைக்கப்படுகிறோம். அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவிகொடுத்தவர்களாய், நமது வாழ்வை அழகாக்கிக் கொள்ள இயேசுவின் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.

2 கருத்துகள்:

  1. கடவுளால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்று கூறி அனைவரையும் ஊக்கப்படுத்தவும் உற்சாகப்படுத்தவும் நம்பிக்கையூட்டும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்!🙏🙏🙏🙏🙏🙏🙏

    பதிலளிநீக்கு
  2. தங்களின் பகிர்வுக்கு நன்றி சகோ...
    குழந்தை வரம் என்பது கடவுளின் கொடை, பரிசு என்று கூறிய கருத்து அருமையானது.

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...