சிற்றொளி பேரொளியை உருவாக்கும்!
இறைவன் இயேசுவில் அன்பிற்குரியவர்களே!
இன்றைய நாளின் வாசகங்கள் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகம் இறைவாக்கு உரைக்க அனுப்பப்பட்டவரின் ஆசிகளைப் பற்றியும், இறைவன் அவர்களோடு இவ்வாறு உடனிருப்பார் என்பதையும் இறை அழைப்பை ஏற்று இறைவாக்கு உரைக்க ஆயத்தமாய் இருப்போரின் வழியாக இறைவன் ஆற்ற விருக்கின்ற விடுதலை பணிகள் பற்றியும் இன்றைய வாசகங்கள் நமக்கு வெளிப்படுத்துகின்றன.
இன்றைய முதல் வாசகத்தில், விடுதலையின் ஆண்டவர், ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும்! சிறைப்பட்டோருக்கு விடுதலையை பறைசாற்றவும்! ஆண்டவர் அருள் தரும் ஆண்டினை அறிவிக்கவும்! இறைவன் தன்னை அருள்பொழிவு செய்துள்ளதாக இறைவாக்கினர் எசாயா குறிப்பிடுகின்றார்.
விதைத்தவன் தூங்கட்டுமே அல்லது விழித்து இருக்கட்டுமே! விதைக்கப்பட்ட விதைகள் மண்ணில் ஊன்றி பலன் தந்திடும் என்பதற்கேற்ப, இறை அழைப்பை ஏற்று அவரது வார்த்தைகளை அறிவிக்கின்ற பொழுது அவரது விடுதலை செய்திகளை பறைசாற்றுகின்ற பொழுது, விதையை உடைத்து நிலத்தை பிளந்து வெளியே வருகின்ற தளிர் போல இறைவனும் தன்னுடைய ஊழியர்கள் வழியாக பல்வேறு இடர்பாடுகள் மத்தியிலும் எதிர்மறையான சூழலின் மத்தியிலும் ஆண்டவரின் விடுதலைச் செய்தி, எளியோருக்கும், ஒடுக்கப்பட்டோருக்கும், சிறைப்பட்டோருகும் உள்ளம் உடைந்தோருக்கும் வாழ்வு கொடுப்பதாக அமையும் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கின்றது.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய கடிதத்தில் அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து நல்லதை பற்றிக் கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கின்றார். நமக்கு மட்டும் நல்லது தரக்கூடியது, நமது உள்ளம் விரும்பியதை மட்டுமே செயல்படுத்த கூடிய நிலையை அல்லாது தூய ஆவியானவரின் செயல்பாடுகளைக் கண்டுணர்ந்து அவற்றுக்கு வழிவகுக்க கூடியவர்களாக நமது வார்த்தையும் வாழ்க்கையும் அமைய வேண்டும். அதற்கு உறுதுணையாக இறை வார்த்தைகளை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நல்லதை பற்றிக்கொண்டு அனைவருக்கும் நலமான காரியங்களை நாம் செய்யும் பொழுது நம்பிக்கைக்குரிய இறைவன் நம்மோடு உடன் இருப்பார். நமது பணிகளை மென்மேலும் ஆசீர்வதிப்பார். தமது அமைதியாலும் மகிழ்ச்சியாலும் நம்மை நிரப்புவார். நம்பிக்கைக்குரிய ஆண்டவர், வாக்கு மாறாத ஆண்டவர் நம்மை இறுதிவரை வழிநடத்தி செல்வார். மலர் மாலை அணிந்த மணமகன் போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போலும், இறையரசின் மாட்சியில் நம்மை இணைத்துத்துக் கொள்வார் என்பதை நமக்கு வெளிப்படுத்துகின்றார் புனித பவுல்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், இறைவனால் அழைக்கப்பட்ட அனைத்து இறைவாக்கினர்களுக்கும் முன்மாதிரியாக ஆண்டவர் இயேசு இருப்பதை நாம் காண்கிறோம். அவர் ஒளியாக இருக்கிறார் என்று யோவான் குறிப்பிடுகின்றார்.
ஒளி இருக்கும் இடத்தில் வாழ்வு இருக்கும். ஒளி இருக்கும் இடத்தில் எல்லோரும் மகிழ்ந்திருப்பார். ஒளி இருக்குமிடத்தில் நன்மைகள் நிறைந்து இருக்கும். நமது உள்ளத்தை நாம் ஒளியாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் நிரப்பும் என்ற பொழுது, ஆண்டவரில் நம் உள்ளம் அக்களிப்படையும்.
இன்றைய நாளில், இம்மண்ணில் விழுகின்ற விதைகள் மண்ணைப் பிளந்து தன் பணியை வெற்றிகரமாக ஆற்றி, செடியாக, கொடியாக , கிளையாக, மிகப் பெரிய மரமாக, வளர்ந்து பலன் தருவது போல நாமம் இறையாட்சியின் விதைகளாக, தூய ஆவியானவரால் ஊட்டம் பெற்றவராக, எல்லாவகையான தீமைகளையும் விட்டொழித்து நன்மைகளை பற்றிக்கொண்டு, நன்மையின் உருவாக நம்மை மாற்றிக் கொள்ளவும், ஒரு சிற்றொளி, மிகப்பெரிய பேரொளியாய் உருவெடுப்பது போல நாமும் நமது வார்த்தைகளாலும் வாழ்க்கையாலும், இறையாட்சியின் பேரொளியை இம்மண்ணுலகில் பரப்பிடவீரியம் உள்ள விதைகளாக நம்மையே நாம் இன்று உருவாக்கிக்கொள்ள, இறை ஒளியை உள்ளத்தில் ஏற்றுக் கொள்ள, இறையருளை வேண்டி நம்மையே அர்ப்பணிப்போம்.
சிறு சிற்றொளியாக, வீரியம் உள்ள விதைகளாக, இறைப்பணி ஆற்ற புறப்படுவோம்!என இறையாட்சி பணிகளுக்கு நம்மை அர்ப்பணிக்க அழைக்கும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களும்! செபங்களும்!
பதிலளிநீக்கு