இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்று நாம் தாய்த் திரு அவையோடு இணைந்து திருக்குடும்ப பெருவிழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். எனவே இந்த நேரத்தில் உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், உரித்தாக்குகிறேன்.
வாழ்த்துக்கள் சரி! ஏன் பாராட்டுக்கள்? என்ற கேள்வி எழலாம். குடும்பமாக இன்று இணைந்து வாழ்வதென்பது சவாலாக உள்ளது. ஏனென்றால், நாளுக்குநாள் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகக் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் இந்த நேரத்தில், நீங்கள் இன்றுவரை குடும்பமாக இணைந்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் குடும்பமாக இருப்பதே இவ்வுலகிற்கு மிகப்பெரிய வரப்பிரசாதமும் அருளுமாக இருக்கிறது. எனவே தான், உங்களுக்கு பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன்.
இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் நமக்கு நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளன.
10 வயதில் ஒருவன் குழந்தையாக இருக்கிறான்.
20 வயதில் இளைஞராகிறான்.
30 வயதில் முறுக்கேறி திரிகிறான்.
40 வயதில் பொறுப்போடு நகர்கிறான்.
50 வயதில் ஆசைகளை அடைவதற்கு முயலுகின்றான்.
60 வயதில் ஓய்வு பெறுகிறான்.
70 வயதில் ஏக்கம் கொள்கிறான்.
80 வயதில் நடுங்குகிறான்.
90 வயதில் படுக்கையில் கிடக்கிறான்.
100 வயதில் கல்லறைக்குள் அடக்கப்படுகிறான்.
மனித வாழ்க்கையை இவ்வாறாக குறிப்பிடுவார்கள். ஆனால், கடவுளின் பார்வையில் நாம் என்றுமே, அவரது குழந்தைகள் தான். ஒரு மனிதன், ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு விதமான நிலைகளில் இருக்கிறான்.
ஒரு இடத்தில் குழந்தையாக இருக்கக் கூடியவன்,
நண்பர்கள் மத்தியில் நண்பனாகிறான்.
திருமணம் முடிக்கும் போது கணவனாக மாறுகிறான்.
தன்னுடைய பிள்ளைக்கு தந்தையாகிறான்.
மீண்டும் பேரப்பிள்ளைகளுக்கு தாத்தாவாக மாறுகிறான்.
மனிதன் ஒவ்வொரு நிலையிலும், தன்னுடைய வளர்ச்சியில், பலவிதமான நிலைகளைக் கடந்து செல்கிறான். ஆனால் கடவுளின் பார்வையில் நாம் எப்போதும் அவரது குழந்தைகள் தான். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இதையே இன்றைய முதல் வாசகம் வழியாக இறைவன் நமக்கு உணர்த்துகிறார்.
ஒவ்வொரு மனிதனுமே பலவிதமான நல்ல பண்புகளை கொண்டிருக்கிறான். அந்த பண்புகளைத் தான், இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் பட்டியலிட்டு காண்பிக்கின்றார். ஒவ்வொருவரும் கிறிஸ்து இயேசுவிடமிருந்து இந்த நற்பண்புகளை பெற்றிருக்கிறோம். அப்பண்புகளுக்கு ஏற்றபடி வாழ்வதற்கு அழைப்பு தருகிறார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட, வானதூதரின் வார்த்தைக்கு இணங்கி, யோசேப்பு, தாய் மரியாவையும், குழந்தை இயேசுவையும், பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு எகிப்துக்கு ஓடுகிறார். சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் வானதூதரின் வார்த்தைகளுக்கு இணங்கி, இயேசுவையும் தாயையும் அழைத்துக் கொண்டு, நாசரேத்து என்னும் ஊரில் வந்து குடியேறுகிறார். ஒரு பெற்றோரின் மிகப்பெரிய பொறுப்பு, பாதுகாக்கும் பணி. சூசை இன்று, வானதூதர்களின் வார்த்தைக்கு இணங்கி, தாய் மரியாவையும் குழந்தையையும் பாதுகாத்து வந்தார். நமது பெற்றோர்களும் நம்மை பாதுகாத்துக் கொண்டு இருக்கிறார்கள். நமது பெற்றோர்கள் கடுமையாக உழைக்கிறார்கள் என்றால், அந்த உழைப்பு அவர்களுடைய நலனுக்காக அல்ல. மாறாக! தங்கள் குழந்தைகளின் நலனுக்காக. குழந்தைகள் மீது கொண்ட அதீத அக்கறையின் காரணமாகவே, கண் துஞ்சாது உழைக்கக்கூடிய தந்தையர்களின் எண்ணிக்கை அதிகம். தான் உண்ணா விட்டாலும் பரவாயில்லை, தன் குழந்தை உண்ண வேண்டும் என்ற எண்ணத்தோடு, இருப்பதையெல்லாம் குழந்தைக்கு கொடுத்து, குழந்தை உண்டு மகிழ்வதைக் கண்டு மகிழக் கூடிய தாய்மார்கள் அதிகம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகளாக இருக்கிறோம். நாம் நமது குழந்தைகளுக்காக பலவிதமான இன்னல்களையும், துன்பங்களையும், அனுபவித்தாலும், நாம் குழந்தைகளின் மகிழ்வில் மகிழ்வது போல, நம்முடைய நேர்மறையான, அறம் சார்ந்த, நம்மிடம் இருக்க கூடிய நல்ல பண்புகளின் அடிப்படையில், நாம் அடுத்தவரை பேணிப் பாதுகாப்பதும், அடுத்தவர் மகிழ்வில், அது குழந்தையாக இருந்தாலும் சரி! யாராக இருந்தாலும் சரி! அடுத்தவருக்காக நாம் செய்யக்கூடிய
சின்னஞ்சிறு தியாகங்களில் இருந்து இறைவன் மகிழுகிறார். அவர் நம்மை குழந்தையாகத்தான் பார்க்கிறார். நாம் வளர்ச்சியில் பல நிலைகளை அடைந்தாலும், கடவுளின் பார்வையில் குழந்தைகளாகத் தான் இருக்கிறோம். குழந்தைகளை இறைவன் அதிகம் அன்பு செய்கிறார். கடவுளின் குழந்தைகளாகிய நாம், இன்று குடும்பங்களாக இருக்கிறோம். நாம் குடும்பத்தில், நமது வளர்ச்சியில், பல நிலைகளில், பல்வேறு நிலைகளை அடைந்தவர்களாக இருந்தாலும், நாம் எப்போதும் கடவுளின் குழந்தைகள். கடவுள் நம்மைக் கண்ணோக்குகிறார். நம்மை அன்பு செய்கிறார் என்பதை உணர்ந்து கொண்டவர்களாக, கடவுளின் பிள்ளைகள் நாம் என்பதில் பெருமை கொண்டவர்களாக, இன்றைய நாளில் மார்தட்டிச் சொல்லுவோம், "நாம் கடவுளின் குழந்தைகள்! கடவுளே நம் தந்தை" என்று. கடவுளிடம் காணப்படக்கூடிய அந்த குடும்ப உறவின் மனப்பான்மையை, நாம் நமது உள்ளத்தில் ஏற்றுக் கொண்டவர்களாக, வாழ்க்கையில் நல்ல விதமான மாற்றங்களை முன்னெடுக்கக் கூடிய கடவுளின் குழந்தைகளாக, உருவாக, உருமாறிட, இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்று செயல்படுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக