எது எளிதானது?
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு மனிதன் அழகிய பெரிய வீடு ஒன்று கட்டி அந்த வீட்டிற்கு அன்னை இல்லம் என்று பெயர் வைத்தான். ஆனால் அவனது அன்னை இருப்பதோ அனாதை இல்லத்தில்!
இன்றைய நற்செய்தி வாசகத்தில் முடக்குவாதமுற்ற ஒருவரை பலர் கட்டிலோடு சுமந்து கொண்டு வந்து இயேசுவுக்கு முன் வைக்க வழி தேடுகிறார்கள். ஆனால் ஏற்கனவே இயேசுவை மக்கள் கூட்டத்தினர் திரண்டு இருந்து சூழ்ந்திருந்த காரணத்தினால் இயேசு இருக்கக்கூடிய வீட்டின் மேற்கூரையை பிரித்து முடக்குவாதமுற்றவரை உள்ளே இறக்கி இயேசுவிடம் அவருக்கு நலம் அளிக்குமாறு வேண்டுகிறார்கள். இயேசுவும் அந்த மனிதரைப் குணப்படுத்த வேண்டும் என நோக்குகிறார். ஆனால் இயேசுவை சுற்றியிருந்த பலரும் பல மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசு எப்படி இவனை குணப்படுத்துவார் என இயேசுவின் மீது குற்றம்சாட்டக் கூடிய நோக்கத்தோடு அவரை உற்று நோக்கினார்கள். இயேசு அவர்களின் உள்ளங்களை அறிந்தவராய், "இவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன" எனக் கூறி அவரை குணமாக்க முயல்கிறார். ஆனால் இயேசுவின் மீது குற்றம்சாட்டக் கூடியவர்கள் பாவங்களை மன்னிக்க இவர் என்ன கடவுளா? என்ற கேள்வியை தங்களுக்குள் எழுப்பும் போது, தன்னைச் சூழ்ந்த இருந்தவர்களை நோக்கி, பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்பது எளிதானதா? அல்லது எழுந்து நட என்பது எளிதானதா? என்ற கேள்வியை இயேசு எழுப்புகிறார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்கக்கூடிய இந்த நிகழ்வானது, எளிதான நிகழ்வாக இருக்க வாய்ப்பே இல்லை. முடக்குவாதமுற்றவரை நான்கு பேர் சுமந்து வருவதும் எளிதான காரியமல்ல. யாரோ ஒருவர் முடக்குவாதமுற்றிருக்கிறார். அவரை ஏன் நாங்கள் நால்வர் சுமந்து செல்ல வேண்டும்? என அவர்கள் எண்ணி இருக்கலாம். ஆனால் அந்த சுமைகளை அவர்கள் விருப்பத்தோடு சுமந்தார்கள். இயேசுவிடம் கொண்டு போக முயன்ற போது இயேசுவை சுற்றி, பலர் இருந்தார்கள். கூட்டத்திற்குள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே செல்ல இயலவில்லை. இருந்தபோதும் வீட்டின் மேற்கூரையை பிரித்து இந்த முடக்குவாதமுற்றவரை இயேசுவுக்கு முன் கொண்டு சென்றார்கள். இதுவும் எளிதான காரியம் அல்ல. ஆனால் எளிதாக செய்து முடித்தார்கள். பாவங்களை மன்னிப்பது என்பது எளிதான காரியமல்ல. இருந்தாலும், இயேசு முடக்குவாதமுற்றவனுடைய பாவங்களை முதலில் மன்னிக்கின்றார். எளிதான காரியம் அல்ல என்ற தலைப்பில் சிந்திக்கின்ற நாம், நமது குடும்பத்தில் இருக்கக்கூடிய சூழ்நிலைகளை இன்றைய நற்செய்தி வாசகத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். நமது குடும்பத்தில் ஒருவரை ஒருவர் ஒவ்வொரு மனிதனுமே ஒவ்வொருவரும் வெவ்வேறு விதத்தில் வேறுபட்டவர்கள். பல விதமான கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் நாம் நமது குடும்பங்களில் ஒருவரை ஒருவர் அன்போடு ஏற்றுக் கொள்கிறோமா?
அவர்களின் பிணிகளை நமது பிணிகளாக எண்ணி, அவர்கள் நலம் பெற வேண்டும் என உதவுகிறோமா? பெரும்பாலும் பெண்கள் கணவனுக்காக வருந்துவது உண்டு. ஆனால் அதிலும் ஒரு சுயநலம் இருக்கும் என்பது எதார்த்தம். பெற்றோர்கள் குழந்தைகளின் நலனுக்காக வருந்துவது உண்டு. ஆனால் அதிலும் தங்கள் குழந்தைகள் என்ற சுயநலம் இருக்கும். ஆனால் வீட்டில் இருக்கக் கூடிய முதியவர்களைப் பராமரிக்கின்ரோமா? கேள்வி எழுப்பினால் அங்கு சற்று வித்தியாசமாகவே நாம் பதிலைக் காண முடியும். நாம் நமது குடும்பத்தில் வயதாகிப் போயிருக்கக் கூடிய பெரியவர்களை நாம் குழந்தைகளாக பாவித்து அவர்களை சுமக்க முன்வருகின்றோமா? அல்லது அவர்களை சுமைகளாக எண்ணி அவர்களைப் பேணிக் காப்பது எளிதான காரியமல்ல என எண்ணுகிறோமோ? என சிந்தித்துப் பார்ப்போம். எளிதான காரியம் தான் இது. ஆனால் அந்த எளிதான காரியத்தை செய்வதற்கு மனம் இல்லாதவர்கள் தான் இந்த உலகத்தில் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு ஊரிலே ஒரு முதியோர் இல்லத்தில் ஒரு தந்தையை ஒருவன் வந்து பார்த்து விட்டுச் செல்கிறான். அந்த தந்தை மகன் சென்ற பிறகு படுத்த படுக்கையானார். இறக்கும் நேரத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். அவரிடம் வந்து ஒரு பணியாளர், ஐயா! இன்னும் சில நொடிகளில் நீங்கள் இருந்து விடுவீர்கள் என எண்ணுகிறேன். உங்கள் மகனிடம் நான் ஏதேனும் கூற வேண்டும் என விரும்புகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர் அந்த பணியாளரிடம் சொன்னார், என்னை எங்கு விட்டுச் சென்ற என் மகனுக்கு தெரியவே கூடாது அவனை நான் ஒரு அனாதை இல்லத்திலிருந்து எடுத்து வளர்த்தேன் என்ற உண்மை என்று கூறினாராம். நமது பெற்றோர்கள், இன்று முதியோர்களாக நமது வீட்டில் இருக்கக்கூடிய மூத்தவர்கள், நம்முடைய வளர்ச்சிக்கு அவர்கள் சிந்திய வியர்வைத் துளிகளும் அவர்கள் பட்ட கடினங்களும் ஏராளம். ஆனால் அதை அவர்கள் சுமைகளாக எண்ணவில்லை. எளிதான காரியமாக எண்ணினார்கள். முடக்குவாத நோய் உற்றவரிடம், உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என இயேசு கூறியதன் காரணம், ஒருவர் நோயுற்றால் அது அவன் செய்த பாவத்தின் அடிப்படையில் என்ற சிந்தனையானது யூத சமூகத்தில் மேலோங்கிக் காணப்பட்டது. அந்தச் சிந்தனையை அழிக்கும் நோக்குடன் தான், அப்படி அல்ல! இறைவனின் வல்லமை இவரில் வெளிப்பட வேண்டும் என்பதே இவர் இப்படி இருப்பதற்கான காரணம் என்பதை உணர்த்தும் வகையில் இயேசு அங்கு பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்கிறார். இயேசுவை சுற்றி இருந்த பலரும் இயேசுவின் மீது குறை காண வேண்டும் என்ற நோக்கத்தோடு அவருடன் நின்று கொண்டிருந்தார்கள். நமது குடும்பத்திலும் சரி, நம்மைச் சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளிலும் சரி, நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலிலும் குறை காண்பவர்கள் அதிகம். நிறைகளை கண்டு பாராட்டுபவர்களைவிட குறைகளை சுட்டிக்காட்டி தங்களை மேன்மையானவர்களாக காட்டிக் கொள்பவர்கள் தான் இச்சமூகத்தில் அதிகமாக இருக்கிறார்கள். பல நேரங்களில் இது நமது குடும்பங்களிலும் நடக்கிறது. ஆனால் இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு உணர்த்துவது, குறைகளை காணாதீர்கள். நிறைகளை நோக்குங்கள். நிறைகளை பாராட்டுங்கள். ஊக்கம் ஊட்டங்கள், என்ற செய்தியினை இறைவன் இன்று நமக்கு வழங்குகிறார். முடக்குவாதமுற்றவனைத் தூக்கி வந்தவர்கள் அவனை சுமையாகக் கருதவில்லை. பலவிதமான கஷ்டங்களுக்கு மத்தியிலும், பல சிரமங்களுக்கு மத்தியிலும், அவனை இயேசுவிடம் கொண்டு சென்று இயேசுவால் அவன் குணம் பெற வேண்டும் என விரும்பினார்கள். அவர்களின் நம்பிக்கையை அறிந்த ஆண்டவர் அங்கு சமூகத்திற்கு பாடம் கற்பித்த வண்ணம், அந்த முடக்குவாதமுற்றவனை நோக்கி, "எழுந்து நட! உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன எனக் கூறினார்.
இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் நாமும், நம்மிடம் நமது குடும்பங்களில் உள்ள மூத்தவர்களை சுமைகளாக கருதாது, அவர்களை சுமப்பதில் சுகம் காணக் கூடியவர்களாக உருவாக வேண்டும். அதுபோலவே நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் குறைகளை மட்டும் காணாமல், நிறைகளைக் கண்டு அவர்களை ஊக்கமூட்டக் கூடியவர்களாக இருக்க வேண்டும். அப்படி நாம் இருக்கும்போது, இன்றைய முதல் வாசகத்தில் இயேசு கூறுவது போல, பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும். காது கேளாதவரின் செவிகள் கேட்கும். கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளி குதிப்பர். வாய் பேசாதோர் மகிழ்ந்து பாடுவர் என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப அனைத்தும் நலமானதாக மாறும். எனவே நன்மைகள் இவ்வுலகில் தழைத்தோங்கிட நாம் நம்மைச் சுற்றி இருக்கக் கூடிய உறவுகளை சுமைகளாக எண்ணாது, சுகங்களாக எண்ணவும், தான் என்ற மனப்பான்மையில் இருந்து விலகிட இறையருளை வேண்டுவோம்.
இன்றைய நாளில் நமது குடும்பங்களில் உள்ள மூத்தவர்களை சுமைகளாக கருதாது, அவர்களை சுமப்பதில் சுகம் காணக் கூடியவர்களாகவும் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் நிறைகளை கண்டு அவர்களை ஊக்கமூட்டுபவராகவும் பிறரை குற்றம் காண வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படாதவர்களாகவும் இருக்க உள்ளத்தில் உறுதி ஏற்றுக் கொண்டு ஆண்டவர் இயேசுவின் உண்மை சீடர்களாக இச்சமூகத்தில் பயணிப்போம்.
சுகமான சுமைகள் ஆல் நமது வாழ்வு அழகாக மாறும்! இது இதனை உள்ளத்தால் அனுபவித்தவர்களுக்கே ஆனந்தமாக அமையும்!
பதிலளிநீக்கு