நம்பிக்கை! அதானே எல்லாம்!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு அறையிலேயே நான்கு மெழுகுதிரிகள் எரிந்து கொண்டிருந்தனவாம். அந்த நான்கு மெழுகுதிரிகளையும் அணையாமல் பார்த்துக் கொள்வதற்காக, ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். எங்கிருந்தோ காற்று அடித்தது. ஒவ்வொரு மெழுகுதிரியாக அணையத் துவங்கியது. மூன்று மெழுகு திரிகள் அணைந்து போயின. ஒரே ஒரு மெழுகு திரி மட்டும் எரிந்து கொண்டிருந்தது. சிறுவன் அழத் தொடங்கினான். எரிந்துகொண்டிருந்த மெழுகுதிரி சிறுவனை பார்த்து கேட்டது, தம்பி ஏன் அழுகிறாய்? இந்த மெழுகுதிரிகள் அனைத்தையும் அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் என் பணி. ஆனால் மூன்று மெழுகு திரிகள் அணைந்து விட்டன. எனவேதான் அழுது கொண்டிருக்கிறேன் என்றான். உடனே அந்த எரிந்து கொண்டிருந்த மெழுகுதிரி சொன்னது, என்னை பயன்படுத்தி மற்ற மூவரையும் நீ பற்ற வைக்கலாமே என்றது. உடனே அழுதவன் அழுகையை நிறுத்திய வண்ணம், வியப்போடு அந்த எரிந்து கொண்டிருக்கும் மெழுகுதிரியை பார்த்து, உன் பெயர் என்ன? என்றான். அதற்கு அந்த மெழுகுதிரி, எனது பெயர் நம்பிக்கை என்றது. நம்பிக்கை இருந்தால் எதிலும் நம்பி, கை வைக்கலாம்.
இன்றைய அனைத்து வாசகங்களும் நம்பிக்கையை நமக்குள் விதைக்கும் வண்ணமாக அமைந்திருக்கின்றன.
ஆம்! அன்புக்குரியவர்களே! இன்றைய முதல் வாசகத்தில் தாவீது அரசன் ஆண்டவருக்கென கோவில் எழுப்ப விரும்புகிறான். இந்த தாவீது சிறு வயதினராக, வயல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது, தாவீதை இஸ்ரயேல் மக்களை வழிநடத்தும் அரசனாக மாற்றியவர் இறைவன். காரணம், அவரோடு இறைவன் இருந்தார். இறைவன் அவரோடு இருந்ததால், அவர் இத்தகைய மாட்சிக்குரிய இடத்தை அடைந்தார் என்ற செய்தியினை நாத்தான் வழியாக அவருக்கு விளக்கிக் கூறுகிறார். ஆண்டவர் நம்மோடு இருக்கிறார், என்பதை நாம் முதலில் நம்ப வேண்டும். அந்த நம்பிக்கை தான் நம் வாழ்க்கையில் நம்மை நகர்த்தக்கூடிய அச்சாணியாக அமைந்திருக்கிறது.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூட, திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார், நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொள்ளுங்கள் என்கிறார். ஆம்! இறைவன் தரக்கூடிய நற்செய்தி என்பது, அநீதி செய்யக்கூடியவர்களுக்கு துயரமாக இருப்பது போல் தோன்றினாலும், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஆண்டவருடைய நற்செய்தியானது, துன்புறுவோருக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும், ஞானத்தையும் தருகிறது. ஆண்டவரின் நற்செய்தியை நம்புங்கள் என்ற பவுலின் வார்த்தைகள், வெறும் வாய் வார்த்தைகள் அல்ல. பவுல் அதனை தன் வாழ்வில் வெளிக்காட்டினார் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவின் பிறப்பானது, அன்னை மரியாவுக்கு அறிவிக்கப்படுகிறது. கபிரியேல் தூதர் மரியாவின் முன் தோன்றி, நீர் ஒரு மகனைப் பெற்றெடுப்பீர். அந்த மகன் இவ்வுலகத்தில் உள்ளவர்களை அவர்களது பாவங்களிலிருந்து மீட்பார், என்று கூறினார். நீர் கடவுளின் மகனைப் பெற்றெடுப்பீர் என்ற வார்த்தைகளைக் கேட்டபோது, மரியாவின் உள்ளத்தில் கலக்கம் எழுகிறது. எப்படி என்னால் இது இயலும்? என்ற கேள்வியை எழுப்பினாள். ஆண்டவரால் அனைத்தும் முடியும் என்பதை அன்று வானதூதர் வழியாக உணர்ந்து கொண்டாள். கடவுள் மீது முழுமையான நம்பிக்கை கொண்ட பெண்மணியாக, உமது விருப்பப்படியே எனக்கு ஆகட்டும் என்று, தன்னை முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்தார், அன்னை மரியாள். இந்த அன்னை மரியாவின் வாழ்வு நமக்கு வெளிக்காட்டுவது, "கடவுளை நம்புங்கள்" என்ற பாடம் ஆகும். ஆம்! நம்பிக்கை அதானே எல்லாம்! அன்றைய யூத சமூகத்தில் ஒரு பெண்ணானவள், திருமணத்திற்கு முன்பு கருவுற்று இருந்தால், அவளை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது, மோசே எழுதிய சட்டம். பெண்கள் பொதுவாகவே யூத சமூகத்தில் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருந்த காலம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இறைவன் மீது கொண்ட முழுமையான நம்பிக்கையின் அடிப்படையில், "ஆண்டவரின் அடிமை நான்" என்று தன்னை முழுவதுமாக, இறைவனுக்கு சமர்ப்பணம் செய்தாள் அன்னை. அந்த அன்னைமரியா கொண்டிருந்த நம்பிக்கையை தான் நாமும் இன்றைய நாளில் கொண்டிருக்க வேண்டுமென வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு அழைப்பு தருகின்றார். ஆம்! தாவீது அரசன் ஆண்டவர் மீது கொண்டிருந்த நம்பிக்கை தான், ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அவரை அரச நிலைக்கு உயர்த்தியது. அதுபோலத்தான் கிறிஸ்துவைப் பற்றி போதிப்பவர்களை எல்லாம், கண்டுபிடித்து கொலை செய்ய வேண்டும் என புறப்பட்ட சவுல், ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்? என்று, கடவுளின் ஒலியை காதில் கேட்டதும், தவறான எண்ணங்களை எல்லாம் கைவிட்டு, ஆண்டவர் மீது முழுமையான நம்பிக்கை கொண்டவராக, பவுலாக மாறி, "வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே! இறந்தால் அதுவும் எனக்கு ஆதாயமே" என்று கிறிஸ்துவுக்காக தன் வாழ்வையே இழக்கக்கூடியவராக, ஒரு நம்பிக்கை மனிதராக திகழ்ந்தார் என்பதும், நாம் அறிந்த ஒன்றே.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் காணப்பட்ட அன்னை மரியாவும், நம்பிக்கை என்பதை தன் கேடயமாக கொண்டு, ஆண்டவர் இயேசுவை தன் வயிற்றில் சுமந்து, நீ மண்ணுலகிற்கு அக்குழந்தையை தந்து, அந்தக் குழந்தை இறுதியில், நமது மீட்புக்காக பலரால், கொல்லப்பட்ட போது, செய்வது அறியாது, இறைத் திருவுளம் என்று ஏற்று தன்னை முழுமையாக இறைவனின் கரத்தில் ஒப்படைத்தவளாய், அனைத்தையும் உள்ளத்தில் இருத்தி சிந்தித்துக் கொண்டு, நம்பிக்கையின் தீபமாக இம்மண்ணில் வாழ்ந்தவர் என்பது, மறுக்கவியலாத உண்மை.
இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நாம் நம்பிக்கையோடு வாழ அழைப்பு தருகின்றார். நம்பிக்கையின் தீபமாக விளங்கும் அன்னை மரியாளை, நாம் நமது முன்னோடியாகக் கொண்டு, நம்பிக்கையின் தீபங்களாக, நம்பிக்கைக்குரிய மனிதர்களாக, நம்பிக்கையை விதைக்கும் நல்ல மாமனிதர்களாக, இச்சமூகத்தில் வலம்வர நாம் இயேசுவின் பாதையில் பயணம் செய்வோம்.
நம்பிக்கை நம் கையில் தான் உள்ளது அருமையான வரிகள் நன்று மகிழ்ச்சி
பதிலளிநீக்குNice bro.. 👍
பதிலளிநீக்கு