ஞாயிறு, 20 டிசம்பர், 2020

ஒருவர் ஒருவரை வாழ்த்துவோம்! (21.12.2020)

ஒருவர் ஒருவரை வாழ்த்துவோம்!

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 எந்த மதமும் காதலுக்கு எதிரானது அல்ல. திருவிவிலியத்தில் இருக்கக்கூடிய இனிமைமிகு பாடல் என்பது, காதல் அன்பை கிறிஸ்தவ மதம் முழுமையாக ஏற்றுக் கொள்கிறது என்பதன் வெளிப்பாடு என்றால்,  அது மிகையாகாது. இன்று நாம் வாசிக்கக் கேட்ட முதல் வாசகமானது,  இனிமைமிகு பாடல் பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. காதலனின் வருகைக்காக காத்திருந்த காதலியையும்,  அந்த காதலனின் ஓசையை, குரல் ஒலியைக் கேட்டு மகிழக் கூடிய காதலியின் உள்ளத்தையும், அழகாக எடுத்துக்கூறும் வகையில் இன்றைய முதல் வாசகம் அமைகிறது. அதுபோலவே,  இன்றைய நற்செய்தி வாசகத்தில், செக்கரியாவின் வீட்டை அடைந்த மரியா,  எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தொலியை கேட்டு,  எலிசபெத்தும் அவள் வயிற்றில் இருந்த குழந்தையும் மகிழ்ந்தது என்ற செய்தியினை இன்று நாம் விவிலியத்தில் வாசிக்க கேட்கிறோம். 
இன்றைய வாசக பகுதிகள் அனைத்தும் நமக்கு தரக்கூடிய மையச் செய்தி, நாம் ஒருவர் மற்றவரை வாழ்த்துவோம் என்பதாகும். ஒரு கவிஞன் அழகாக கூறினான்,  இந்த உலகம் கலங்குவது அணுகுண்டுகளால் அல்ல. மாறாக, அன்பற்ற இதயங்களால்! என்று கூறினார்.  திருவள்ளுவர் திருக்குறளில் அழகாக கூறினார், தீயினால் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு என்று. நமது வார்த்தைகளுக்கு வலிமை அதிகம். வார்த்தைகளால் ஒருவரை குணப்படுத்தவும் முடியும். ஒருவரை ரணப்படுத்தவும் முடியும்.  நமது வாழ்க்கையில், அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகள் அனைத்தும்,  அனைவருக்கும் மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் தரக்கூடிய வகையில் இருத்தல் என்பது அவசியமாகிறது.  நாம் ஒருவர் மற்றவரை ஒவ்வொரு நாளும் வாழ்த்த வேண்டும் என்ற செய்திதான் இன்றைய வாசகத்தின் மையப்பகுதியாகிறது.  மரியாவின் வாழ்த்தொலியைக் கேட்டு எலிசபெத்தும் அவள் வயிற்றில் இருந்த குழந்தையும் மகிழ்ந்தது போல,   முதல் வாசகத்தில் காதலனின் வார்த்தைகளை,  குரலொலியைக் கேட்டு காதலி மனம் மகிழ்ந்தது போல,  நமது வார்த்தைகளைக் கேட்டு மற்றவர்கள் மனம் மகிழ வேண்டும்.  அதற்கேற்ற வகையில் நமது சொல்லானது அமைந்திட வேண்டும். ஒவ்வொரு நாளும் திருப்பலியில் பங்கெடுக்கிறோம்.  திருப்பலியில் பங்கெடுத்து,  தொடக்க நிகழ்வாக நாம் பாவத்தை நினைத்து மனம் வருந்தி இறைவனிடத்தில் மன்னிப்பு கேட்போம். அப்போது அனைவரும் இணைந்து செல்வோம், "எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே உங்களிடமும், நான் பாவியென்று ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில், என் சொல்லாலும், செயலாலும், சிந்தனையாலும், என சொல்லிக்கொண்டே செல்வோம். நாம் முதலில் குறிப்பிடுவது "நமது சொல்லால்"!  நமது சொல் அடுத்தவருக்கு மகிழ்வை தரவில்லை என்றால்,  நமது சொல் அடுத்தவருக்கு வாழ்த்துச் செய்தியாக இல்லை என்றால், அது ஏற்புடையதாக கருதப்படமாட்டாது. நமது சொல்லானது அடுத்தவருக்கு மகிழ்ச்சியையும் மன மாற்றத்தையும் தரக்கூடிய சொல்லாக அமைதல் என்பது மிகவும் அவசியமாகிறது. 
வார்த்தை என்பது மிகவும்  அர்த்தம் வாய்ந்தது.  வார்த்தையாகத் தான் இறைவன் இருந்தார் என யோவான் நற்செய்தி, ஒன்றாம் அதிகாரம், ஒன்றாம் வசனம் குறிப்பிடுகிறது.  ஆதியில் வார்த்தை இருந்தது. அவ்வார்த்தை கடவுளோடு இருந்தது. அவ்வார்த்தை கடவுளையும் இருந்தது. வார்த்தையான இறைவன் நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறார். அந்த இறைவனை நாம் வாழ்த்துச் சொல் வழியாக வெளிப்படுத்த இறையருளை வேண்டுவோம்.
இன்றைய நாளில், நாம் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளை நினைத்துப் பார்ப்போம். நமது வார்த்தைகளால் மனம் மகிழ்ந்தவர்கள் எத்தனை நபர்கள் இருப்பார்கள் என சந்திப்போம்.  நமது வார்த்தைகளால் காயம் பட்டவர்களை நினைத்து பார்த்து, நமது செயலுக்காக இந்நேரத்தில் இறைவனிடத்தில், இந்த திருப்பலி வழியாக மன்னிப்பை வேண்டுவோம். இந்த உலகத்தில் ஊக்கப்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. நமது வார்த்தைகளால் நாம் பலரும் பல சாதனைகளைப் புரிய, அடுத்தவரை ஊக்கமூட்டக் கூடிய,  நல்ல வார்த்தைகளை வழங்கக் கூடியவர்களாக இருக்க, இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்.

1 கருத்து:

  1. நமது வார்த்தைகளால் நம்மை சுற்றி இருப்பவரின் வாழ்வையும் அழகாக்குவோம்" என்றுஅருமையான கருத்துக்களை கூறிய அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது வாழ்த்துகளும்! பாராட்டுகளும்! நன்றிகளும்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...