திங்கள், 30 நவம்பர், 2020

குழந்தைகளாவோம்...(1.12.2020)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 
 இன்றைய நாள் வாசகத்தின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 ஒரு சிறுவன் அழுதுகொண்டே இருந்தான். 
டாக்டர் ஏம்பா அழுகிறாய்? என்று கேட்டார்.
 எங்க நாய் செத்துப் போச்சு! என்றான் அந்த சிறுவன். 
உடனே அந்த டாக்டர் அவனிடம் போன வாரம் எங்க தாத்தாவும் செத்துப் போனார் நான் அழுத கிட்டா இருக்கிறேன்? என்றார். 
உடனே அந்த சிறுவன் டாக்டரை பார்த்து, உங்க தாத்தாவை நீங்க குட்டியிலிருந்து பால் கொடுத்து அன்புசெய்து வளர்த்தீர்களா? என்றான். 
டாக்டர் மௌனமானார். 

குழந்தைகளுக்கு எதையும் இயல்பாக வெளிப்படையாக பேசும் தன்மை உண்டு. பல நேரங்களில் குழந்தைகள் தங்கள் அழுகையின் மூலமாக தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள்.குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று எனக் கூறுவார்கள். குழந்தைகளிடமிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் ஏராளமாக இருக்கின்றன. குழந்தைகள் பலவற்றை நமக்கு போகிற போக்கில் சொல்லி தந்து விட்டுச் செல்கிறார்கள். 

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவரின் ஆவி அவர் மேல் தங்கியிருக்கும். ஞானம்,  மெய்யுணர்வு, அறிவுத்திறன் ஆற்றல், நுண் மதி, ஆண்டவரை பற்றிய அச்ச உணர்வு, இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்.  இவ்வாறு தூய ஆவியானவர் அருளக்கூடிய கொடைகளை பற்றி நாம் முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம்.  ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு தூய ஆவியானவர் வழியாக இத்தகைய கொடைகள் வேண்டுமென ஜெபிக்கக் கூடியவர்களாகத் தான் இருக்கிறோம். தூய ஆவியானவரின் அருள் கொடைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய குழந்தைகள், மிகவும் அன்பாகவும், நீதியோடும் ஏழைகளுக்கு உதவக் கூடியவர்களாகவும் வாழ்கிறார்கள். அவர்கள் அப்படி வாழ்வதற்கு தூய ஆவியானவர் வழங்கிய கொடை, ஒரு காரணமாக இருந்தாலும், அந்தக் கொடையை  அவர்கள் உணரச் செய்வதற்கு பெற்றோர்கள் மிகவும் அவசியமாகிறார்கள்.

 ஒரு குழந்தையின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் அதிகமாகவே இருக்கிறது. எந்த ஒரு குழந்தையும் தன்னுடைய குடும்பத்தில் இருந்து 60 சதவீதமான அறிவினைப் பெற்றுக் கொள்கிறது என உளவியல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். 

இன்றைய நாளில் நாம் வாசிக்கின்ற நற்செய்தி வாசகத்தில் கூட, குழந்தைகளை பற்றி பெருமையாக பேசுவதை நாம் வாசிக்க கேட்கலாம். தூய ஆவியால் பேருவகை அடைந்த இயேசு தந்தையே! விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே! உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் இதுவே உமது திருவுளம் என்று கூறுகிறார். நாமும் குழந்தைகளைப் போல் இருக்க அழைக்கப்படுகிறோம். 

குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை  இன்றைய முதல் வாசகத்தின் அடிப்படையில்  எசாயா இறைவாக்கினர் உரைப்பதாக உணரலாம். ஓநாய் செம்மறி ஆட்டுக்குட்டியோடு தங்கியிருக்கும்...
குழந்தைகளுக்கு நல்லவர் யார்? தீயவர் யார்? எனத் தெரியாது. காண்போர் அனைவரிடமும் செல்லும். அனைவரிடமும் புன்னகைக்கும்! அனைவருடனும்  ஒட்டிக் கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள்.
 கன்றும் சிங்ககுட்டி கொழுத்த காளையும் கூடிவாழும் பச்சிளம் குழந்தை அவற்றையும் நடத்திச் செல்லும். குழந்தைகளுக்கு விலங்குகளைப் பற்றிய அச்சம்  சிறுவயதில் இருப்பதில்லை குழந்தைகள் விலங்குகளை அன்போடு நோக்குவார்கள்.  விலங்குகள் வலிமையானதாகவும் நச்சுத்தன்மை கொண்டதாக இருந்தாலும், அதெல்லாம் அவர்களுக்கு தெரியாது. அவர்கள் அதனருகில் செல்வார்கள். அவர்கள் அதனோடு சேர்ந்து விளையாடுவார்கள்.  

பொதுவாக தமிழ் திரைப்பட பாடல் ஒன்று உண்டு,  
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் 
மண்ணில் பிறக்கையிலே!-  அது 
நல்லவராவதும் தீயவராவதும்
பெற்றோரின்  வளர்ப்பினிலே! 

என்ற  பாடல் வரிகள் உண்டு. பெற்றோரை  பொறுத்துதான் ஒரு  குழந்தையின் வளர்ச்சியில் பல மாறுபாடுகள் உருவாகின்றன.  உதாரணமாக
ஒரு சிறு குழந்தை ஒரு மிகப் பெரிய கண்ணாடியை எடுத்து கீழே போட்டு உடைத்து விட்டது.  கோபத்தின் உச்சிக்குச் சென்ற தாய்,  ஓடி வந்து ஏன் இதை போட்டு உடைத்தாய்?  என குழந்தையை கடிந்து கொண்டார்.

சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு ஒரு உறவினர் வருகிறார்.அவரிடம் குழந்தையை காண்பித்து இந்த குழந்தை இவ்வளவு பெரிய...‌ கண்ணாடி பொருளை எடுத்து கீழே போட்டு உடைத்து விட்டான் என பெருமையாக கூறுகிறார்கள்.  குழந்தை இரண்டையும் கவனிக்கிறது. ஒரு நேரம், கண்ணாடியை உடைத்ததற்காக தாய் திட்டினாள். மறுகனம் உறவினரிடம் கண்ணாடியை உடைத்தது பற்றி, பெருமையாக வியக்கக்கூடிய வகையில் மற்றவரோடு பேசுகிறார். குழந்தை இரண்டையும் பார்க்கிறது குழந்தை தன்னுடைய  வாழ்க்கைக்கு எது தேவையோ அதை எடுத்துக் கொள்ள முயலுகிறது. எந்த ஒரு குழந்தையும் இந்த மண்ணிலே கெட்ட வார்த்தைகள் பேசுவது இல்லை மாறாக தாங்கள் கேட்ட வார்த்தைகளை தான் பேசுகிறார்கள் என கூறுவார்கள்.

 நமது குழந்தைகள் நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. இந்த குழந்தைகள் கள்ளங்கபடமற்றவர்களாக இருப்பார்கள். பல நேரங்களில் பெற்றோர் தங்கள் சுற்றத்தாரிடம் இருக்கக் கூடிய கருத்து வேறுபாடுகள் காரணமாக,  பலரோடு உறவு கொள்ளாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி விடுகிறார்கள். அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு தங்களின் மனப்பான்மையைத் திணிக்கிறார்கள். நீயும் அவர்களோடு உறவு கொள்ளக் கூடாது. அவர்கள் வீட்டிற்குச் செல்லக் கூடாது. பேசக்கூடாது என கூறுகிறார்கள். ஆனால் கள்ளங்கபடமற்ற குழந்தைகள் அவர்களோடு உறவாடுகிறார்கள். அவர்களோடு பேசுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.  குழந்தைகளுக்கு தன்னைத் தீண்டியவர்களை, தன்னை காயப்படுத்தியவர்களை வெறுக்க தெரியாது. காயப்படுத்தினாலும் மீண்டும் அவர்களோடு சேர்ந்து கொள்வார்கள். அவர்கள் தங்களை விட்டுச் சென்றால் அழுது புலம்புவார்கள்
குழந்தைகள் ஞான மிக்கவர்களாகத் திகழ்கிறார்கள். இந்த குழந்தைகளை போலத்தான் நாம் ஒவ்வொருவரும் இருப்பதற்கு அழைக்கப்படுகிறோம். குழந்தைகளின் மனப்பான்மையை நாம் கொண்டிருந்தால்தான் விண்ணரசில் நுழைய முடியும். 

குழந்தை மனப்பான்மை என்பது எல்லா விஷயத்திலும் குழந்தைத்தனமாக இருப்பதல்ல!  குழந்தைகளிடம் காணப்பட்ட, அன்பு, இரக்கம், பகிர்வது போன்ற பண்புகளை நாம் உள்வாங்கிக் கொள்வது. நம் அனைவரும் குழந்தை பருவத்தில் இருந்துதான் இளமை பருவத்தை நோக்கி செல்கிறோம். அதன்பின் முதுமை பருவத்தை நோக்கிச் செல்கிறோம். முதுமைப் பருவம், இன்னொரு குழந்தை பருவம் எனக் கூறுவார்கள். குழந்தை பருவத்தில் நம்மிடமிருந்த குணங்கள் நம்மிடம் தான் இருக்கின்றன. ஆனால் சூழலுக்கு ஏற்ப நாம் அவற்றை மறைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

 சிறுவயதில் அடிப்பட்டு வலிக்காத போது வலிக்கிறது என கூறி நாம் அழுதோம். இப்போது உண்மையாலுமே வலித்தாலும் வலிக்கவில்லை என கூறிக் கொண்டிருக்கிறோம்.  குழந்தைகளைப் போல இயல்பாக இருப்போம்!   நம்மிடம் இருக்கக்கூடிய அன்பு, நீதி, உண்மை, சகோதரத்துவம், போன்ற பண்புகளை கண்டுகொள்வோம். அத்தகைய பண்புகளோடு நம் அருகாமையில்  இருக்கக்கூடியவர்களை உற்று நோக்குவோம். வாழ்க்கையை அழகாக்கிக் கொள்வோம்.  குழந்தை உள்ளம் கொண்டவர்களாக இன்றைய நாளில் நாம் உருவாகிட உள்ளத்தில் உறுதி ஏற்போம்!  "மற்றவர்கள் பேசுவதை செவிமடுக்க செவிகள் மட்டும் போதாது!  இதயமும் இணைந்து செயல்பட வேண்டும்" என்பார்கள். நமக்குள் இருக்கக்கூடிய குழந்தைத் தன்மையை, குழந்தை மனப்பான்மையை நாம் இதயத்தால் கண்டுகொண்டு செயலாக்க இன்றைய நாளை  தொடங்குவோம்,  இறைவனது அருளோடு!

1 கருத்து:

  1. குழந்தை உள்ளம் கடவுள் வாழும் இல்லம் என்று கூறுவார்கள். நமது உள்ளங்கள் கடவுள் வாழும் இல்லங்கள் ஆகட்டும்! தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்! ஜெபிக்கிறோம்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...