சனி, 14 நவம்பர், 2020

மதித்திட....நேசித்திட..... (15.11.2020)


இப்ராஹிம் என்ற ஒரு இஸ்லாமிய துறவி, தன்னுடைய சீடர்களுடன் ஒரு நாள் வெளியூர் பயணம் போன போது, ஒரு பள்ளிவாசலில் தங்க நேர்ந்தது. அது ஒரு பழைய கட்டிடம். அதிலிருந்து ஒரு துவாரத்தின் மூலம் வீசிய பனிப்புயல் உள்ளே தங்கியிருந்தவர்களை பாதித்தது. ஆகவே ஊசி குத்துவது போன்ற குளிர் பாதிப்பால் அவர்கள் சுருண்டு அவதிப்பட்டனர். இதனை கவனித்த இப்ராஹிம் எழுந்து போய் அந்த துவாரத்துக்கு மறைவாக தன்னுடைய முதுகை அடைத்தபடி நின்று கொண்டார். பனிப் புயலின் பாதிப்பை அவர் ஒருவர் மட்டுமே தாங்கிக்கொள்ள, மற்றவர்கள் அமைதியாக உறங்கினார்கள். இப்படி அவர் நின்றதால் அவருடைய வழக்கமான பின் இரவு நேர தொழுகை தடைபட்டு போனது. இந்த உறுத்தலின் காரணமாக தொழுகை தடைபட்டுப் போய்விட்டது என இறைவனிடம் மன்றாடி கொண்டிருந்தார், அதாவது, இறைவனிடத்தில் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு அசரீரி கேட்டது. அந்த அசரீரி இவ்வாறாகச் சொன்னது, "இப்ராஹிம் இரண்டு நாட்களுக்கு முன் நீர் செய்த பின் இரவுத்தொழுகை இறைவனுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று" என்றது. உடனே இந்த இப்ராஹிம், ஐயோ! அன்று நான் தொழவே இல்லையே என்றான். அன்று நீ செய்த சேவை இறைவனுக்கு மிகவும் பிடித்தது. சிறப்பான தொழுகையாக இறைவன் அதனையே கருதுகிறார், என்று அந்த அசரீரி மீண்டும் அவருக்கு கேட்டது. இந்த நிகழ்வுக்கும் இன்றைய நாள்  வாசகங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை உணர முடிகிறது. இன்றைய முதல் வாசகத்தில் ஒரு பெண்மணி தன்னுடைய கணவன் மற்றும்  அவள் இருக்கக்கூடிய இடத்தை எவ்வாறாக பேணி பராமரிக்கிறாள், எவ்வாறெல்லாம் பார்த்துக் கொள்கிறாள் என்பதை முதல் வாசகம் தெளிவாக, அழகாக, எடுத்துரைக்கிறது. இன்றைய இரண்டாவது வாசகமும் நம்மை எப்போதும் அறிவு தெளிவோடு விழிப்பாய் இருப்பதற்கு அழைப்பு விடுக்கிறது. அதுபோலவே இன்றைய நற்செய்தி வாசகத்திலும் தாலந்து உவமை பற்றி நாம் வாசிக்க கேட்கிறோம். அந்த தாலந்து உவமையும் நம்மிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை, பணிகளை சிறப்பாக செய்து நல்ல ஒரு பலனை தரக்கூடிய பணியாளர்களாக நாம் இருக்க அழைப்பு தரும் வகையில் அமைகிறது. ஆம் பெண்களிடம் இருந்து இந்த சமுதாயம் பலவற்றை கற்றுக் கொள்ளக் கூடிய சூழ்நிலையில் உள்ளது. பெண்கள் எப்போதும் பேணிக் காக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.  பெண்கள் எப்போதுமே அடுத்தவர் நலனில் அக்கறை உடையவர்களாக இருக்கிறார்கள். பெரும்பாலான குடும்பங்களில் நிதி மேலாண்மை செய்வது பெண்கள்தான். பெண்கள் சிறுக சிறுக சேமித்து பல திட்டங்களை தீட்டி மிகவும் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு வழி வகுக்கக்கூடிய மகத்துவமான பணியினை செய்கிறார்கள். இத்தகைய பெண்கள் குடும்பத்தில் ஆற்றக்கூடிய சிறப்பான பணிகளை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. இன்றைய  இரண்டாம் வாசகத்தில் இறைவன் எப்போது வருவார் எனத் தெரியாது! எனவே, விழிப்போடு இருங்கள் என்ற செய்தியானது அறிவுறுத்தப்படுகிறது. விழிப்போடு இருக்கும் பணி என்பது பெண்களிடமே நாம் பெரும்பாலும் காணலாம். கணவர் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வருகிறார் என்றால், கணவனின் வருகைக்காக விழித்திருக்க கூடியவளாக பெண் இருக்கிறாள். கணவன் வந்ததும் அவனுக்கு உணவு கொடுப்பதில் இருந்து அவன் உறங்கச் செல்வது வரை அவனது தேவைகளை எல்லாம் நிவர்த்தி செய்து வைக்கக் கூடியவளாக ஒரு பெண்மணி இருக்கிறாள். இந்த பெண்மணிகள் எல்லாம் வீட்டில் வெறுமனே இருப்பதில்லை. வீட்டில் பல விதமான வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இருந்த போதும் தங்கள் கணவனை கவனிப்பதிலும் தங்கள் குழந்தைகளை கவனிப்பதிலும் எப்போதும் விழிப்போடு இருக்க கூடிய பெண்களாக அவர்கள் இருக்கிறார்கள். ஒரு பெண்மணி இரவு எத்தனை மணிக்கு உறங்கினாலும், விடியற்காலை அந்த பெண்மணி எழுந்து தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தேவையானவைகளை செய்து கொடுக்கக் கூடியவளாக இருக்கிறாள். ஒரு பெண் விழிப்போடு இருப்பாள் என்பதற்கு இதைவிட எளிய முறையில் உதாரணங்கள் கொடுக்க இயலாது என எண்ணுகிறேன். 

விண்ணரசு என்பது பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடப்படுகிறது எனக்கூறி, இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் தாலந்து உவமையைக் கூறுகிறார். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றை கொடுக்கிறார். தாலந்தை பெற்றுக் கொண்டவர்கள் எல்லாம் அதனை இரண்டு மடங்காக மாற்றுகிறார்கள். இறுதியாக ஒரு தாலந்து பெற்ற நபர் மட்டும், அந்த தாலந்தை இரண்டாக மாற்றாமல், அந்த தாலந்தை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்ற பாதைக்கு செல்லாமல், அதை அப்படியே புதைத்து வைத்து இருந்து மீண்டும் அரசரிடம் அவர் கேட்கும் போது கொடுக்கக் கூடியவராக இருக்கிறார். அப்படிப்பட்டவரிடத்தில் இருந்து ,  அந்த தாலந்து கொடுத்த நபர் அதை வாங்கி ஐந்து தாலந்தை மேலும் ஐந்து தாலந்தாக மாற்றியவரிடத்தில் கொடுக்கிறார். ஐந்து தாலந்தை 10 தாலந்தாக மாற்றிய நபரிடம் கொடுத்து விட்டு, அந்த ஒரு தாலந்தை எதுவும் செய்யாமல் வைத்திருந்த, அந்த பயனற்ற பணியாளனை புறம்பே தள்ளுங்கள் என்று சாடக்கூடிய, செய்தியினை இன்று நாம் நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். 

ஐந்து தாலந்தை 10 தாலந்தாக மாற்றிய நபரை போல, பெரும்பாலும் பெண்கள் பலவிதமான பணிகளை முன்னெடுக்கிறார்கள். ஆனாலும், இச் சமூகத்தில் பல நேரங்களில் அவர்கள், ஆண்களுக்கு கீழானவர்கள் என்ற எண்ணத்தின் அடிப்படையில், அவர்களை தங்களுக்கு கீழாக நடத்தக் கூடிய, ஆண்கள் தான் இந்த உலகத்தில் அதிகமாக இருந்து கொண்டே இருக்கிறார்கள். பொதுவாகவே பெண்களை இழிவாக கருதுவதும், தங்களுக்கு கீழாக எண்ணுவதும், பெண்களுக்கு உரிய உரிமைகளை கொடுக்காமல் இருப்பதும்,  ஒரு சமுதாயம் சமத்துவமான சமுதாயம் என கூற இயலாது என்பதை உணர்த்துகிறது. எனவே இன்றைய நாளில்  நமது வாழ்வை வளப்படுத்தும் விதமாக இறைவனால் கொடையாக கொடுக்கப்பட்டுள்ள பெண்களை, பேணிக் காப்பதும் அவர்களுக்கான உரிமைகளை மதிப்பதும், அவர்களை மனித நேயத்தோடு நடத்துவதும் தான் இறைவன் விரும்பக் கூடியதாகும். அத்தகைய இறை விருப்பத்தை அறிந்தவர்களாக, அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருந்து கண்ணில் காணும் ஒவ்வொரு மனிதரையும், அன்பு செய்யவும்,  மதிக்கவும், நேசிக்கவும் இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்க உங்களை அன்போடு அழைக்கின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...