இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாளின் வாசகங்கள் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய வாசகங்கள் வழியாக நாம் கட்டுப்பாடு உள்ள நல்ல பணியாளர்களாக வாழ அழைக்கப்படுகிறோம்.
ஒரு வார இதழில் வந்த கேள்வி இது! தீமை அதிகரிக்கையில் அவதரிப்பேன் என்று சொன்ன இறைவன் தற்போது எங்கே இருக்கிறார்? இந்த கேள்விக்கு இரத்தினச் சுருக்கமாக ஒரு பதிலை அவர்கள் எழுதி இருந்தார்கள். அந்த பதில், தீமை அதிகரிக்கையில் அவதரிப்பேன் என்று சொன்ன கடவுள் தற்போது எங்கே இருக்கிறார் என்றால், அவர் நமக்குள் இருக்கிறார் என்று எழுதியிருந்தார்கள்.
ஆள்பவன் காப்பான்!
அடுத்தவன் காப்பான்!
உற்றவன் காப்பான்!
உலகத்தான் காப்பான்! என்று
உறங்கிக் கொண்டிருந்தால்
உறைந்து போய் விடுவோம்.
இன்றைய வாசகங்களில் நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. வயது மூத்த பெண்கள் தூய நடத்தை உடையவர்களாகவும், புறங்கூறாதவர்களாகவும், குடிவெறிக்கு ஆளாகாதவர்களாகவும், இருக்க வேண்டும். அது போல பெண்கள் கணவனிடம் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். ஆண்களும் அறிவுத் தெளிவோடும் கண்ணியத்தோடும் கட்டுப்பாட்டோடும் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும், அன்புக்கும் மன உறுதிக்கும் சொந்தக்காரர்களாகவும் இருக்க வேண்டுமென முதல் வாசகம் நமக்கு குறிப்பிடுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட நமக்காக பணி செய்யக்கூடியவர்களுக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறோம் என்பதை நயமாக இயேசு சுட்டிக்காட்டுகிறார். நமக்காக இந்த உலகத்தில் பலரும், பல நேரங்களில், பல வழிகளில், உதவிகள் பல செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் உதவிகளை நாம் எவ்வாறு பார்க்கின்றோம்? எவ்வாறு கையாளுகின்றோம்? என சிந்திக்க இன்றைய நாளில் நம் அனைவருக்கும் இயேசு அழைப்பு தருகிறார் .நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் அனுதினமும் பலருடைய உதவிகளினாலும், பலருடைய செயல்களினாலும், நாம் உயிர் வாழ்கிறோம். நாம் உண்ணக்கூடிய உணவினை விளையச் செய்தது யாரோ ஒருவர். அதை கொள்முதல் செய்தது ஒருவர். நாம் அந்த அரிசியை அருகாமையில் இருக்கக்கூடிய ஒரு கடையில் வாங்கி இருக்கலாம். அந்த இடத்திற்கு அந்த அரிசியை கொண்டு வந்து சேர்ந்தவர் ஒருவர். ஏன், இன்னும் சுருக்கமாகச் சொல்லப் போனால் நமது வீட்டிற்கு தேவையான அரிசியை நமது வீட்டில் உள்ள யாரோ ஒரு நபர் தான் வாங்கி வந்திருப்பார். ஆனால் நாம் எளிதாக அதை சமைத்து உண்டு கொண்டிருக்கிறோம். இந்த உண்ணும் உணவு நம்மை அடைவதற்கு பல வழிகளில் பலர் உதவியிருக்கிறார்கள். அதுபோல், தெரிந்தோ தெரியாமலோ, பலரின் உதவிகளால் தான் இந்த மனித இனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மனிதன் என்பவன் ஒருவர் மற்றவரோடு உறவு கொள்ளவே படைக்கப்பட்டிருக்கிறான். உறவு என்பது எப்போதும் அன்பையும் நீதியையும் மையப்படுத்தி அமைந்திருக்க வேண்டும். அந்த அடிப்படையில் நாம் நலமுடன் வாழ, இயேசு இன்று பல நல்ல பண்புகளை நமக்கு கற்பிக்கின்றார். அந்தப் பண்புகளை எல்லாம் நமது வாழ்வில் செயலாக்க வேண்டும். அவ்வாறு செயலாக்காமல், இறைவன் பார்த்துக் கொள்வார், இறைவன் பார்த்துக் கொள்வார், என்று இறைவன் மீது எல்லாவற்றையும் சுமத்திவிட்டு நாம் வெறுமனே அமர்ந்திருப்போமாயின், எத்தகைய மாற்றத்தையும் காண முடியாது. நாம் மாற்றத்தைக் காண வேண்டுமாயின், மாற்றத்தை உருவாக்க கூடியது நாமாகத்தான் இருக்க வேண்டும். இறைவன் நம் ஒவ்வொருவருக்குள்ளும் உறைந்திருக்கிறார். எங்கிருந்தோ வந்து ஒரு மாற்றத்தை சமூகத்தில் நிகழ்ந்துபவரல்ல இறைவன். மாறாக நம் வழியாகவே மாற்றத்தை, நல்ல மாற்றத்தை இச்சமூகத்தில் உருவாக்குபவர் இறைவன். அந்த இறைவனது குரலுக்கு செவி கொடுத்தவர்களாக, இன்றைய நாளில் அவரின் வார்த்தைகளின் வழி நமது வாழ்வை நல்ல ஆரோக்கியமான வளமான அடுத்தவரை அன்பு செய்யக்கூடிய, அடுத்தவருக்கு நன்றி கூறக் கூடிய, வாழ்வாக அமைத்துக் கொள்ள இந்த நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்போம்.
ஆம். அவர் நம்முள்ளே இருக்கிறார்..
பதிலளிநீக்குஅருமை சகோ.👏👏