நம் நாட்டில் மனிதனை மனிதனாகப் பார்ப்பதில்லை.
சாதி அடையாளத்தோடுதான் பார்க்கிறார்கள்.
மனிதன் முன்னால் பிறந்தவன்.
சாதிகள் பின்னால் பிறந்தவை.
சாதிகள் தோன்றும் முன் மனிதனிடம் ஏற்றத் தாழ்வுகள் இல்லை.
அப்போது எல்லோரும் உழைப்பவர்களாக இருந்தார்கள்.
உழைக்காமல் பிழைக்கக் கூடிய காலம் வந்தபோதுதான்
அப்படிப் பிழைத்தவர்கள்
உழைப்பவர்களைத் தாழ்ந்த சாதியினர்
என்று கூறும் மூடத்தனம் தோன்றியது.
இப்படிக் கூறிய இந்த மூடர்கள் தங்களை அறிவாளிகள் என்று
கூறிக்கொண்டதுதான் மிகப் பெரிய நகைச்சுவை.
இப்போது யாரைக் காட்டுமிராண்டிகள் என்கிறார்களோ
அந்த ஆதிவாசிகளிடம் சமத்துவம் இருந்தது.
நாகரிகத்தில் வளர்ந்தவர்களாக
நினைத்துக் கொண்டிருப்போரிடம்தான்
இந்த உயர்ந்த பண்பாடு இல்லாமல் போய்விட்டது.
யாரை இந்த நாடு தாழ்ந்தவர்கள் என்று சொல்லுகிறார்களோ
அவர்களே இந்த நாட்டைத் தங்கள் உழைப்பால் உயர்த்தியவர்கள்.
சூத்திரர்கள் என்று மூடர்களால் இகழப்படும்
உழைக்கும் மக்கள் இல்லையென்றால்
ஒரு சமூகம் , ஒரு நாடு உருவாகியிருக்காது.
உற்பத்தி செய்யும் உழைக்கும் மக்கள் இல்லையென்றால்
வைசியர்கள் தோன்ற வாய்ப்பே இல்லை.
சூத்திரர்களும், வைசியர்களும் இல்லையென்றால்
சத்திரர்களுக்கும், பிராமணர்களுக்கும் வேலையே இல்லை.
அதாவது தாழ்ந்தவர்கள் இல்லையென்றால்
இந்த உயர்ந்தவர்கள் இல்லை.
எனவே சமூகத்தில் மதிக்கப்பட வேண்டியவர்கள் உழைக்கும் மக்களே அன்றி
அவர்கள் உழைப்பில் பிழைக்கும் பிறவிகள் அல்லர் .
பிரம்மனின்
முகம் பிராமண ஜாதியாக ஆயிற்று .
கைகள் சத்திரிய ஜாதியாகச் செய்யப்பட்டன .
இவருடைய தொடைகள் வைசிய ஜாதியாக ஆயின.
பாதங்களிலிருந்து குத்திர ஜாதி உண்டாயிற்று.
என்று ரிக்வேதத்திலுள்ள புருஷஸுக்தம் கூறுகிறது .
அறிவோடு படிப்பவர்களுக்கு இது உருவகம் என்பது புரிந்துவிடும்.
ஆனால்
இது உருவகம் என்பதைப் புரிந்துகொள்ளாதவர்கள்
தலையிலும், கைகளிலும் தோன்றியதால்
தங்களை உயர்சாதியினர் என்று கூறிக்கொண்டனர்.
உருவகத்தைக் கூடப் புரிந்துகொள்ள முடியாத மூடர்கள்
தங்களை அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டது
மிகப் பெரிய நகைச்சுவை.
தலையிலும் கையிலும் தோன்றியதால்
தங்களைத் தலைமையானவர்கள் என்றும்
காலில் தோன்றியவர்கள் என்பதால்
உழைக்கும் வர்க்கத்தைத்
தாழ்ந்தவர்கள் என்றும் கூறியவர்கள்
வள்ளுவர் காலத்திலும் இருந்தனர்.
அந்த மூடர்களை இடித்துரைக்கும் வகையில்
எந்தத் தொழிலைச் செய்வதால்
அந்தத் தொழிலைச் செய்பவர்களைக்
கீழானவர்கள் என்று கூறினார்களோ…
உண்மையில் அந்தத் தொழில்தான்
உலகத்தில் தலைமையானது
என்றார் வள்ளுவர்.
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழன்றும் உழவே தலை.
அதாவது யாரைக் காலில் பிறந்தவர்கள்
என்பதால் இகழ்ந்தார்களோ
அவர்களே உண்மையில் சமூகத்தின் தலை
என்கிறார் வள்ளுவர்.
சாதி பேதம் பாராட்டியவர்களைச்
சான்றோர்கள் காலந்தோறும்
கண்டித்து வந்திருக்கின்றனர்.
பசி,
தாகம்,
காமம்,
இன்பம்,
துன்பம்
என்பவை மனிதர் அனைவர்க்கும் ஒன்றே.
உயர்ந்த சாதி என்றால் பசி தோன்றாதோ?
உயர்ந்த சாதியினர் தாகம் என்றால்
தங்க ரசத்தைத்தான் அருந்துவார்களோ?
தாழ்ந்த சாதிப் பெண் என்றால்
அவளிடம் அனுபவிக்கும் போகமும் தாழ்ந்ததாக இருக்குமா?
என்று கேட்கிறார் சித்தர் சிவவாக்கியர்.
இவள் தாழ்ந்த சாதிப் பெண் என்றும்
இவள் உயர்ந்த சாதிப் பெண் என்றும்
இறைச்சி,
தோல்,
எலும்பில்
எழுதப்பட்டிருக்கிறதா?
இரண்டு பேருக்கும்
இவையெல்லாம் ஒன்றுதானே?
அப்படியிருக்கும்போது அவர்களிடம்
அனுபவிக்கும் போகம் மட்டும் எப்படி வேறுபடும்?
பறைச்சி,
பணக்காரி
என்பவை என்ன?
வெறும் பெயர்கள் அல்லவா?
இவர்கள் இருவரையும் பகுத்துப் பார்த்தால்
ஏதாவது வேறுபாடு தென்படுமா?
என்கிறார் சிவவாக்கியர்
வானம்,
காற்று,
நெருப்பு,
நீர்,
மண்
என்ற ஐம்பூதங்களும்
ஒரே மூலத்திலிருந்தே உதித்தன.
இந்த ஐம்பூதங்களின் கலவைதான்
படைப்புகள் எல்லாம்.
இவற்றுள் இது உயர்ந்தது.
இது தாழ்ந்தது என்பவன் மூடன்.
மனிதாகள் அனைவரும் மூல நீரின் அம்சமான
விந்தில்தான் பிறக்கிறார்கள்.
பிறகென்ன பேதம்?
உயர்ந்த சாதிக்காரர்கள் மட்டும்
வாயிலிருந்தா பிறக்கிறார்கள்?
பெண்கள் காதில் தோடு அணிகிறார்கள்.
காலில் சிலம்பு அணிகிறார்கள்.
இரண்டுமே தங்கம் என்ற
ஒரே உலோகத்தில்தான் செய்யப்படுகின்றன.
காதில் அணிவதால்
தோடு உயர்ந்ததென்றும்.
காலில் அணிவதால்
சிலம்பு தாழ்ந்ததென்றும் கூறினால்
அவனுடைய அறிவை என்னென்பது?
பெரியாரியக்கத்தின் பிரச்சாரத்தால்
அடிபட்டு ஒளிந்திருந்த சாதி உணர்வு
மறுபடியும் தலைதூக்கி வருகிறது.
முன்பு பாமரரிடம்தான் சாதி உணர்வு இருந்தது.
இப்போது படித்தவரிடமும் பரவி வருகிறது.
படிப்புக்கும்
அறிவுக்கும்
சம்பந்தமில்லை என்பதை
இந்தப் படித்தவர்கள் நிரூபித்து வருகின்றனர்.
சமூகத் தலைமை,
அரசியல் ஆதாயம்
இவற்றைக் கருதி…
இப்போது படித்தவர்களே
தத்தம் சாதியினரைத் திரட்டி வருகின்றனர்.
சாதிச் சங்கங்களும்,
சாதிக் கட்சிகளும் பெருகி வருகின்றன.
இதனால் சாதி மோதல்
அபாயம் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் தாழ்த்தப்பட்டவரை
உயர்சாதியினர் சுரண்டி வந்தனர்.
இப்போது அவர்களை அவர்கள்
தலைவர்களே சுரண்டி வருகின்றனர்.
சாதிகள் ஓட்டு வங்கிகளாகி வருகின்றன.
அதனால் அரசியல்வாதிகளும் அவற்றுக்கு ஊக்கமூட்டி வளர்த்து வருகின்றனர்.
இன்று
சிவவாக்கியர்களும்,
பெரியார்களும்
பெருகாவிட்டால்
இந்த நாட்டை ஆண்டவனாலும்
காப்பாற்ற முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக