கிறிஸ்துவின் பெயரால் எனது உள்ளம் புத்துயிர் பெறும்.
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
பலர் கூடி இருந்த ஒரு அரங்கத்தில் என் மகன் சாகவில்லை என்று மைக்கின் முன்பாக நின்று மரகதமாள் கூறியதைக் கேட்ட கூட்டம் திகைத்துப் போனது. தன் ஒரே மகன் இறந்து போன அதிர்ச்சியில் ஒருவேளை அவருடைய சித்தம் கலங்கிவிட்டது என்று பலர் நினைத்தார்கள். பஸ் விபத்து ஒன்றில் உயிரிழந்த 34 பேர்களில் ஒருவன்தான் குமரன், மரகதம்மாளின் மகன். இறந்தவர்களுடைய குடும்பங்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் தான் அது. கண்களில் நீர்மல்க அனைவரும் ஈட்டுத் தொகையை பெற்றுக் கொண்டார்கள். கடைசியாக குமரனின் பெயரைச் சொன்ன போது முதல் வரிசையில் அமர்ந்திருந்த மரகதம்மாள் மேடைக்குச் சென்றார். எளிமையான அமைதியான தோற்றம். நடுத்தர வயது. முன் தலையில் லேசான நரை. தலைவர் காசோலை அடங்கிய கவரை நீட்டியபோது, சைகையால் வேண்டாம் என்று மறுத்து விட்டு அமைதியாக எந்த ஒரு பிசிறும் இல்லாமல், தெளிவான குரலில் அவர் சொன்னார், என் மகன் குமரன் சாகவில்லை. யாருக்கும் எதுவும் புரியவில்லை. தலைவர் குழப்பத்துடன் செக்கரட்டரியை பார்க்க, செக்கரட்டரி மீண்டும் பட்டியலைப் பார்த்தார். பிறகு மரகதம்மாளைப் பார்த்துச் சொன்னார், குமரனின் உடலை நீங்கள்தானே அடையாளம் காட்டினீங்க. உடலைக் கூட உங்க கிட்ட தானே ஒப்படைத்தோம். இப்ப என்னம்மா இப்படி சொல்றீங்க?
ஒரு இரண்டு நிமிடம் என்னை பேச அனுமதிக்கிறார்களா என்றாள் மரகதம்மாள். கண் இமைப்பதும் கூட கேட்கக்கூடிய நிசப்தம் நிலவியது. என் மகன் குமரன் பலமுறை பலருக்கு ரத்த தானம் செய்திருக்கிறான். இப்பொழுது பலருடைய உடலில் அது ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் போன வருடம் எந்தவித பயனும் பெற்றுக் கொள்ளாமல் தன் சிறுநீரகத்தை தானம் செய்து ஒரு உயிரை காப்பாற்றினான். அதனை தானம் பெற்றவர் இந்தக் கூட்டத்தில் அமர்ந்திருக்கிறார். கூட்டம் நிசப்தமாக இருக்க மரகதம்மாள் தொடர்ந்து பேசினாள். அது மட்டுமல்ல விபத்து நடந்ததும் தானம் செய்யப்பட இருந்த அவனுடைய கண்களை எடுத்து ஒரு பெண்ணுக்கும் சிறுவனுக்கும் பொருத்தினார்கள். அவர்கள் இதோ முன்வரிசையில் அமர்ந்து இருக்கின்றார்கள். அதனால் தான் சொல்கிறேன் என் மகன் சாகவில்லை. இந்த பணத்தை கொடுத்து தான் ஆக வேண்டும் என்றால், கொடுத்துவிடுங்கள், ஏதாவது ஒரு அனாதை இல்லத்திற்கு!
மேடையை விட்டு மரகதம்மாள் இறங்கி வந்தபோது அங்கிருந்த அனைவருடைய கண்களும் கலங்கின குமரனின் கண்கள் உட்பட.
குமுதம் இதழில் படித்த ஒரு பக்க கதை இது. இந்தக் கதைக்கும் இன்றைய நாள் வாசகங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இன்றைய முதல் வாசகத்தில் பவுல் தான் பெற்ற துன்பங்கள் அடிப்படையில் எப்படி உறுதியாக நிலைத்து தனது பணியில் ஈடுபட்டார் என்பதை விளக்கிக் கூறுகிறார். மேலும் தன்னுடைய பணிக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மற்றவர்களை நாடுகிறார். கிறிஸ்து இயேசுவின் பெயரால் என் உள்ளம் புத்துயிர் பெறச் செய்யும் என அவர் வேண்டுவது இன்றைய நாளில் நாம் கிறிஸ்துவின் பெயரால் என் உள்ளம் புத்துயிர் பெறச் செய்யும் என பவுலின் வேண்டுதல் இன்று நம்முடைய வேண்டுதலாக வேண்டும். கிறிஸ்து இயேசுவின் பெயரால் புத்துயிர் பெற்றது போல் தான் குமரனின் வாழ்வு அடங்கிய இருந்ததாக நான் எண்ணுகிறேன்.
இயேசு நமக்காக தன் உயிரை அர்ப்பணித்தார். அது போல பலருக்கும் பலர் நலம் பெற வேண்டும் என்பதற்காக தன்னுடைய உடல் உறுப்புகளை தானம் செய்தவனாக குமரன் இந்த கதையில் சித்தரிக்கப்படுகிறார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறையாட்சி எப்போது வரும் என்ற தேடல் அனைவரிடமும் இருக்கிறது. இறையாட்சியை எதிர்பார்த்துதான் மனிதர்கள் காத்து இருக்கிறார்கள் என்ற செய்தி கொடுக்கப்படுகிறது. இறையாட்சியை எதிர்பார்த்து இருப்பவர்கள் எல்லாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை எதிர்நோக்கி இருப்பவர்கள். அவர் வரும் போது நம்மை காக்க வேண்டும். நம்மை மீட்டுக் கொள்ள வேண்டும். நம்மை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். தன்னுடைய மீட்புத் திட்டத்தில் நமக்கு பங்கு தரவேண்டும் என்றெல்லாம் எண்ணுகிறோம். இயேசுவின் வருகையை முன்னிட்டு இயேசுவின் வருகையின் போது நம்மை அவர் காத்தருள வேண்டும் என்ற எண்ணத்தோடு பலவிதமான நற்செயல்களில் நாம் ஈடுபடுகிறோம். ஆனால் இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு உணர்த்தக்கூடிய பாடம், நாம் அனைவருடைய உள்ளமும் புத்துயிர் பெற வேண்டும். ஒரு பலனை எதிர்பார்த்து எதையும் செய்யாமல், எந்தவித எதிர்பார்ப்புமின்றி நல்ல செயல்கள் செய்வதில் நாம் தொடர்ந்து ஈடுபட இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. பவுலின் பணிச்சுமைகளில் பலர் அவருக்கு உதவினார்கள். அதுபோல இந்த சமூகத்தில் நாம் காணக்கூடிய ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோர், சமூகத்தால் புறம் தள்ளப்பட்டோர், சமூகத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் என சொல்லப்படுபவர்கள் என அனைவரையும் அன்பு செய்வதும், ஏற்றுக்கொள்வதும், அவர்களுக்கு நம்மாலான உதவிகளை செய்வதும், இயேசு நமக்கு தரக்கூடிய கட்டளையாகவும், பாடமாகவும், படிப்பினையாகவும் இருக்கிறது. இந்த படிப்பினைகளை உணர்ந்தவர்களாக, சொல்லால் அதனை நிறைவேற்றாமல், செயலால் அதனை நிறைவேற்ற நாம் அனைவரும் இந்த நாளில் அழைக்கப்படுகிறோம்! இயேசு தன் சீடர்களை நோக்கி கூறினார், ஒரு காலம் வரும். அப்போது மானிடமகனுடைய நாட்களில் ஒன்றையாவது காண நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள் என்று கூறினார். மானிடமகன் ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகையை ஆவலோடு எதிர்பார்க்க கூடிய நாம் அனைவரும் இயேசுவின் இரண்டாம் வருகை என்பது என்று வரும்? என்று எண்ணுவதை விட்டு விட்டு நம் அருகில் உள்ள சகோதரர்களுக்கு அவர்களின் தேவைகளை நாம் நிவர்த்தி செய்யும் போது தான், இயேசு அங்கு உதயமாகிறார் என்ற உண்மையை உணர்ந்தவர்களாக, நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்து, இறுதி நாளில் கடவுள் நம்மை காக்க வேண்டும் என்ற பயனை எதிர்பாராமல் உண்மையான மனித நேயத் தன்மையோடு ஒருவர் மற்றவரை அன்புசெய்து அடுத்தவரின் துயரத்தை துடைக்கக்கூடியவர்களாக நம் உள்ளம் மாறிட நமது உள்ளத்தில் மாற்றத்தை உருவாக்கிட நமது உள்ளத்தை புத்துயிர் பெறச் செய்வோம்.
"ஆண்டவர் இயேசுவின் பெயரால் என் உள்ளம் புத்துயிர் பெற்றது" என்ற பவுலடியாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப நமது உள்ளத்தை புத்துயிர் பெறச் செய்வோம். ஆண்டவர் இயேசுவின் பணியில், ஆண்டவர் இயேசுவைப் பின்பற்ற கூடிய நாம், அவரது பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள இன்றைய வாசகங்கள் அழைக்கின்றன. அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாக, உள்ள மாற்றம் செய்து கொண்டவர்களாக, புத்துயிர் பெற்று, புத்தொளி வீசிட புறப்படுவோம்!
எதிர்பார்ப்புகள் இன்றி ஆண்டவரின் பணியை அன்போடு செய்வோம்!
பதிலளிநீக்கு