இறையாட்சி நெருங்கி வந்து விட்டதா?
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு.
பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்; நடவுக்கு ஒரு காலம், அறுவடைக்கு ஒரு காலம்.
சபை உரையாளர் 3 : 1,2.
சபை உரையாளர் புத்தகம் மூன்றாம் அதிகாரம் இவ்வாறாகக் கூறுகிறது. இவ்வுலகத்தில் நடக்கக்கூடிய ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு, ஒரு நேரம் உண்டு என அழுத்தமாக கூறப்படுகிறது. இவ்வார்த்தைகளின் அடிப்படையில் இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்ட திருவெளிப்பாட்டு நூலிலிருந்து வாசித்த வாசகம் நமக்கு உணர்த்தக்கூடிய பாடம், ஒரு அரக்கப் பாம்பினை வானதூதர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு கட்டி வைக்கின்றார்கள். இந்த அரக்கப் பாம்பு தான் மக்களிடையே குழப்பத்தை உருவாக்குகிறது. இங்கு அரக்கப் பாம்பு எனப்படுவது, இச்சமூகத்தில் நிலவக்கூடிய ஒட்டுமொத்த தீமையின் உருவகமாக பொருள் கொள்ளப்படுகிறது. இவ்வுலகத்தில் நிறைந்து இருக்க கூடிய தீமைகள் தான் பல நேரங்களில் நம்மை சுயநலம் கொண்டவர்களாக, அடுத்தவர் நலனில் அக்கறை காட்டாத மனிதர்களாக, வாழ நம்மை தூண்டக் கூடியதாக அமைந்திருக்கிறது. ஆனால் ஒரு நேரம் வரும். ஒரு காலம் வரும். அப்போது இந்த ஒட்டுமொத்த தீமையின் உருவகமாக இருக்கக்கூடிய அரக்கப் பாம்பை ஆண்டவர் அடியோடு அழித்து போடுவார் என்ற செய்தியினை இன்றைய முதல் வாசகம் நமக்கு வழங்குகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் மரத்தினை உவமையாகக் கூறி மரத்திடம் இருந்து காலங்களை அறிந்து கொள்ளுங்கள் என இயேசு நமக்கு உணர்த்துகிறார். தன்னுடைய வார்த்தைகளின் வழியாக இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை இயேசு எடுத்துரைக்கிறார். நாம் வாழக்கூடிய இந்த சூழ்நிலையில் உண்மையாலுமே இறையாட்சி நெருங்கி வந்து விட்டதா? என்ற கேள்வியை இன்றைய நாளில் நாம் எழுப்பி பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம். இறையாட்சி என்பது அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம், இவைகளினால் இவ்வுலகில் மலரக் கூடிய ஒரு மனித நேயம் கொண்ட ஆட்சியாகும். இதுவே இறைவன் விரும்பக் கூடியதாகும். இறைவன் விரும்பும் இந்த ஆட்சியில் மனிதனை மனிதனாக மதிப்போம். மதத்தின் காரணமாகவோ, மொழியின் காரணமாகவோ, சாதியத்தின் அடிப்படையிலோ, பாலினத்தின் அடிப்படையிலோ, எனக்கு கீழானவன் நீ! உனக்கு மேலானவன் நான்! என்ற எண்ணங்களை எல்லாம் விடுத்து, அனைவரையும் சமமாக, சகோதர, சகோதரிகளாக, இயேசுவைப் போல பார்க்கக்கூடிய மனிதர்களாக, இவ்வுலகத்தில் உள்ளவர்கள் இருக்கவேண்டும். அப்படி இருக்கும் போது தான் அது இறைவனது இறையாட்சியாக உருவாகிறது. இத்தகைய இறையாட்சி இன்று நிலவுகிறதா? என்ற கேள்வியை நாம் அனைவரும் நமக்குளாக எழுப்பி பார்ப்போம். நாம் வாழும் இந்த சூழ்நிலையில், அதிலும் குறிப்பாக இப்போது பரவக்கூடிய நோய் தொற்று காரணமாக மனிதனை மனிதன் தொடாமலும், ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதன் தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், நோயுற்றான் என தெரிந்தால் அவரிடமிருந்து, பல அடி தூரம் விலகி நிற்பதும், அவருடைய தேவைகளை நிவர்த்தி செய்ய வழி காட்டாமல் இருப்பதும், அவன் தேவைகளை நிவர்த்தி செய்ய உதவி செய்யாமல் இருக்க கூடிய சூழ்நிலையும் இன்று நிலவிக் கொண்டிருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே. ஆனால் மற்றொருபுறம் உண்டு. அங்கு நோயாளிகள் பாதுகாக்கப்படுகிறார்கள். பராமரிக்கப்படுகிறார்கள். அரசும் பல வழிகளில் அவர்களை பாதுகாப்பதற்கும் அவர்கள் நோயிலிருந்து நலம் பெறுவதற்குமான முயற்சியில் ஈடுபடுகிறது. பலர் பல நேரங்களில் அரசு அரசியல் செய்கிறது எனக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அரசு அரசியல் செய்யட்டும். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்ற கேள்வி தான் என்று அவசியம். நாம் வாழும் இச்சமூகத்தில் நாளுக்குநாள் மனித நேயம் என்பது மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. மனிதனை மனிதன் வெறுக்கக்கூடிய சூழல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மனிதன் மனிதனை மதிக்காமல், தனக்கு கீழானவன் என எண்ணி, கர்வத்தோடு வாழ்ந்த காலங்கள் ஏராளம். அத்தகைய காலங்களில் எல்லாம் நீ செய்வது தவறு என்று குரல் கொடுத்த பல மனிதர்கள் இன்றும் நம் மத்தியில் பேசப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இன்றும் நாம் இறையாட்சியின் மதிப்பீடுகளின் படி வாழ வேண்டும் என போதிக்கிறோம், அறிவிக்கிறோம். ஆனால் நமது செயல்களில் அவைகள் வெளிப்படுகின்றனவா? என்ற கேள்வியை எழுப்பினால், இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது எனக் கூறுவதில் சற்று ஐயம் எழுகிறது.
நாம் வாழும் இந்தச் சூழ்நிலையில், நாம் ஒருவரை ஒருவர் அன்பு செய்யவும், மதிக்கவும், அவர்களின் தேவைகளை அறிந்தவர்களாய், அவர்களை அவர்களின் துயரத்தை துடைக்க கூடியவர்களாய் நாம் உருவாக வேண்டும் என்ற பாடத்தினை ஒவ்வொரு நாளும் இறைவன் நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார். நம் அனைவருக்கும் தெரிந்ததுதான், சென்னை முழுவதும் வெள்ளத்தால் தவித்தபோது பல நல்ல உள்ளங்கள் பல தன்னார்வ தொண்டர்கள் வீதியில் இறங்கி நீரோடு போராடி பலரை மீட்டெடுத்தார்கள், பலரை காத்தார்கள் என்ற செய்தியை அறிவோம்.
இன்றும் அதே நிலைதான் சென்னையில் நிலவுகிறது. மனிதநேயம் என்பது துன்பங்கள் சூழ்ந்து இருக்கும் போது மட்டும் வெளிப்படுவது அல்ல. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனிடத்திலும் இருந்து வெளிப்படக் கூடியது. இன்றும் கூட சென்னையில் தானே! நமக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற எண்ணத்தோடு வாழக்கூடிய மனிதர்கள் பலர் உண்டு. ஆனால் இன்னும் பல விதமான மனிதர்கள் உண்டு. எங்கோ ஒருவருக்கு துயரம் எனத் தெரிந்தால், அவர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு எப்படியாவது உதவ வேண்டும். ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு செயலில் ஈடுபடக் கூடியவர்கள். இன்று நாம் வாழும் உலகத்தில் மனித நேயம் என்பது மண்ணோடு மண்ணாக புதைக்கப்படுகிறது. புதைக்கப்பட வேண்டியது அல்ல மனித நேயம். மனித நேயம் என்பது தலைமேற்கொண்டு மதிக்கப்பட வேண்டிய ஒரு செயல். இதனை உணர்ந்தவர்களாக நமது செயல்கள், மனிதநேய செயல்களாக மாறும் போது, இயேசுவின் அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம், அனைத்தும் பேசும் பொருளாக அல்லாமல், செயலாக ஒவ்வொருவரிடத்திலும் மாறும்போது, இறையாட்சி கண்டிப்பாக இம்மண்ணில் மலரும். அந்த இறையாட்சி மலர வைக்க வேண்டிய பொறுப்பு மனிதர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் உரியது. எங்கிருந்தோ இந்த இறையாட்சி வரும் என எண்ணுவதை விட, இறையாட்சியை உருவாக்கக் கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். நமது செயல்களால் இறைவனது ஆட்சியை, இறையாட்சியை இம்மண்ணில் மலரச் செய்ய இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு அழைப்பு விடுக்கின்றார். இறைவனின் அழைப்பை உணர்ந்தவர்களாக, வாழ்க்கையில் மாற்றத்தை உள்வாங்கிக்கொண்டு, உள்ள மாற்றத்தோடு தொடர்ந்து இறையாட்சியின் விழுமியங்களின்படி நமது வாழ்வை அமைத்துக்கொள்ள, இயேசுவின் பாதையில் பயணமாகுவோம்.
மற்றவரின் துன்பத்தில் பங்கெடுப்போம்! இறையாட்சியை மலரச் செய்வோம்! இன்றைய அருமையான கருத்துகளை வழங்கிய அருட் சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅன்பு சகோதரரே உங்களுடைய கருத்துக்கள் மிகவும் எளிமையாகவும் சிந்திக்கத் தூண்டுவதாகவும் அமைகின்றது வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு