இனிக்குமா! கசக்குமா!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாளில் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகத்தில் சுருளேட்டை எடுத்து உண்ணுமாறு யோவானுக்கு பணிக்கப்படுகிறது. வாயில் அது இனிப்பாகவும் வயிற்றில் கசப்பாகவும் இருந்தது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்துவும் எருசலேம் தேவாலயத்திற்குச் சென்று அங்கு நிகழ்ந்த அநீதிக்கு எதிராக சாட்டையை சுழற்றுகிறார். இயேசுவின் செயலை கண்டு அவரை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு கூட்டம் அவரை கொல்வதற்கு வழி தேடிக்கொண்டிருந்தது.
இன்றைய நாளில் நாம் நமது வாழ்க்கையில் தவறான காரியங்களில் ஈடுபடும் போது இறைவன் பல மனிதர்கள் மூலமாக நம்மிடையே வந்து நமது செயல்பாடுகள் தவறு என்பதைச் சுட்டிக்காட்டும் போது அதை
நாம் ஏற்றுக் கொள்கிறோமா? அல்லது
அதனை நியாயப்படுத்தக் கூடியவர்களாக இருக்கிறோமா?
அல்லது
மறுக்கக் கூடியவர்களாக இருக்கிறோமா?
என்று சிந்திப்போம்.
இன்று பெரும்பாலும் மனிதர்கள் தாங்கள் செய்கின்ற தவறுகளை நியாயப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் கடவுள் தவறுகளை நியாயப்படுத்துவதை விரும்புவதில்லை. ஆனால் தவறு என தெரிந்த போது அதை திருத்திக் கொள்வதற்கு நம்மை அழைக்கிறார். எருசலேம் தேவாலயத்தில் சென்று அவர் அங்கு சாட்டையை சுழற்றிய போது ஏழை எளிய மக்கள் நசுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை அளிக்கப்படுகிறது. ஆனாலும் இயேசுவின் செயலால் பாதிக்கப்பட்டவர்கள், நேர்மையற்ற செயலில் ஈடுபட்டவர்கள் எல்லாம் தாங்கள் பாதிக்கப்பட்டதாக உணர்ந்தார்கள். எனவே இயேசுவை எப்படி அழிக்கலாம் என வழி தேடினார்கள். இவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. மாறாக யாரொருவர் நீதியை நிலைநாட்ட விரும்புகிறாரோ அவரை அழித்தொழிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு செயல்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். நமது வாழ்விலும் பல நேரங்களில் தவறிழைக்கும் போது நமது தவறுகளை சுட்டிக் காட்டக்கூடிய நபர்களை நாம் நல்லமுறையில் பார்க்கின்றோமா? அல்லது அவர்களை எதிரிகளாக பார்த்து அவர்களை எப்படி பழிவாங்கலாம்?அல்லது எப்படி அவர்களை குற்றவாளிகளாக சித்தரிக்கலாம் என்ற நோக்கத்தோடு செயல்படுகின்றோமா? என்ற கேள்விகளை எழுப்பி பார்ப்போம். அடுத்தவர் நமது செயல்களில் குறை இருப்பதை கூறும் போது அதை சரி செய்து கொள்வதற்கு முன் வரக்கூடிய மனநிலையோடு நம்மிடம் இருக்கிறதா?
இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று
என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப, இனிய சொற்களை மட்டுமே நாம் எப்போதும் விரும்புகிறோம். நம்மை நியாயப்படுத்தக் கூடிய நம்மைப் பாராட்டக் கூடிய நல்ல செயல்களை மட்டுமே விரும்புகிறோம். பாராட்டுகளை விரும்பக்கூடிய நாம் நம்மிடையே இருக்கும் குற்றங்களை சுட்டிக் காட்டும் பொழுது அதை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக, நமது வாழ்வில் நல்ல விதமான மாற்றத்தை உருவாக்க கூடியவர்களாக ஒரு மாறு இன்றைய நாளில் இறைவன் நம்மை அழைக்கிறார். அடுத்தவரின் வார்த்தைகள் இனிக்கிறதா கசக்கிறதா என ஆராய்வதை விட கொடுக்கக் கூடிய வார்த்தைகள் நமது வாழ்க்கை மாற்றத்திற்கு உதவும் என்றால், அதனை நல்ல வார்த்தைகளாக எண்ணி அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். யோவானைப் போல அதனை உட்கொள்ள வேண்டும்.
நல்ல விதமான மாற்றத்தை நமது வாழ்வில் ஏற்படுத்திக்கொள்ள இன்றைய நாளில் ஆண்டவர் இயேசு அழைக்கிறார். இயேசுவின் பயணத்தில் நாமும் உடன் பயணிப்போம்.
கசப்பான பொருட்கள் நமது உடலுக்கு நன்மை பயக்கும் என்று கூறுவார்கள். தேன்கூட
பதிலளிநீக்குஉண்மையில் கசப்பானதே. கசப்பை ஏற்று கொள்பவனுக்கு எல்லாம் இனிக்கும்!
எமது வாழ்வை திருப்பி பார்க்க இன்று அருமையான கருத்துக்களை கூறிய அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களும்! பாராட்டுக்களும்! நன்றிகளும்!