இணையத்தால் இணையும் மனிதம்
உடலால் உங்களோடு இல்லாவிட்டாலும்,
நான் உள்ளத்தால் உங்களுடன் இருக்கிறேன்.
(கொலோசையர்- 2: 5)
தொடக்கமாக....
இது நடக்குமா?..., இது சாத்தியமாகுமா?..., என்னால் இது முடியுமா?..., எதிர்காலம் எப்படியிருக்கும்?... என்றெல்லாம் பல சந்தேகக் கேள்விகளை எழுப்பக்கூடிய சூழலுக்கு மத்தியில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று கொரோனா தொற்று நோயின் தாக்கம் காரணமாக உறவுகள் எல்லாம் சிதைந்து, மனிதர்கள் அச்ச உணர்வின் காரணமாக ஒருவரை ஒருவர் தொடாமலும், சந்திக்காமலும், இன்னொருவரின் வீட்டில் துக்க நிகழ்வு என்று தெரிந்தாலும், அவர்களின் வீட்டிற்குச் செல்லாமல் இருக்கின்ற சூழ்நிலை இன்று நீடித்துக் கொண்டிருக்கிறது.
தனித்திரு! விழித்திரு! என்கிறது அரசு. விழித்திருக்கலாம், ஆனால் தனித்தே இருக்க இயலுமா?. தனித்திருந்தால் எப்படி மனித இனம் உறவுகளை வளர்த்துக் கொள்ளும்? என்ற கேள்வி ஆழமாக எல்லோர் உள்ளத்திலும் இன்று எழத் துவங்கி உள்ளது.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற நிலைமாறி, தனித்து இருந்தாலே இன்று உயிர் வாழ முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. உடலால் நாம் அனைவரும் தனித்து இருக்கிறோம். ஆனால் உள்ளத்தால் நாம் இணைந்து இருக்க வேண்டும் (கொலோசையர்- 2: 5) என்ற விவிலிய வார்த்தைகளுக்கு ஏற்ப உள்ளதால் நாம் இணைந்திருப்பதற்கு உதவி செய்வதாக இன்று இணையம் திகழ்கிறது. இன்றைய நாட்களில் அனுதின வேலைகளுக்கும், அலுவலக வேலைகளுக்கும் அடுத்தவரை எதிர்பார்த்தே வாழ்ந்த மனிதர்கள் இன்று இணையம் வழியாக இணையத் துவங்கியுள்ளனர்.
இளைஞர் வளர்ச்சியில் இணையம்:
மனித வாழ்வின் முக்கியமான பருவம் இளமைப் பருவம். இப்பருவம் அளப்பரிய ஆற்றலை தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வாற்றல் பிறப்பிலேயே கொடுக்கப்படுகின்ற ஒர் இலவச கொடை. அறிவியல் பூர்வமாக திட்டமிட்டு சரியாக தனது நேரத்தையும், உழைப்பையும் பயன்படுத்துகின்ற இளைஞர்கள் வாழ்விலும், சமூகத்திலும் வெற்றி காண்பார்கள். இத்தகைய இளைஞர்களுக்கு தங்களின் திறமைகளை உடனடியாக வெளிக்காட்ட உதவும் உடனடி சாதனமாக இணையம் இளையோர் வாழ்வில் இன்று இணைந்துள்ளது.
கிங்ஸ் ஆஃ கிங் (Kings of King) என்ற ஆங்கிலப்படம் சில வருடங்களுக்கு முன்பு வெளியாயிற்று. அதில் இடம் பெற்ற ஒரு காட்சி: நடக்க இயலாத ஒருவரை இயேசு நடக்கச் சொல்கிறார். அவர் தயங்குகிறார், எழுந்து நிற்க தடுமாறுகிறார், நடக்கத் துணிவில்லை, என்னால் நடக்க முடியுமா? என்ற அவநம்பிக்கை அவருக்குள் வேரூன்றி இருந்தது. இதை பார்த்த இயேசு அவருக்கு சொன்ன வார்த்தை, தம்பி உன்னுடைய நம்பிக்கை, உன் கால்களை விட பலவீனமாக இருக்கிறது. எனவே, உன்னை நீ நம்பு. உன்னால் எழுந்து நடக்க முடியும். இவ்வார்த்தைகளால் அவரது உள்ளம் உந்தப்பட்டது. அவ்வளவு தான்! உடனே அவர் துணிந்து எழுந்து நடக்க ஆரம்பித்தார். என்னால் நிற்க முடிகிறது என்ற உணர்வு அவருக்கு நடக்க துணிவு தந்தது. முதலில் சற்றுத் தடுமாறினாலும், பின்னர் சீராக நடக்க ஆரம்பிக்கின்றார். இயேசுவின் செயல்படத் தூண்டுகின்ற வார்த்தைகள் அவரை ஊக்குவித்ததுதான் அவரை நடக்க வைத்தது. இன்று நாம் வாழும் உலகில் சிலரை கொள்கைகள் ஊக்குவிக்கும், சிலரை செய்கைகள் ஊக்குவிக்கும், சிலரை ஆற்றல் நிறைந்த வார்த்தைகள் ஊக்குவிக்கும். அதுப்போலவே இன்று நிலவும் சூழல் குழந்தைகள் முதல் முதியோரகள் வரை அனைவரையும் இணையத்தால் இணைய ஊக்குவிப்பதாக உள்ளது. இன்று பல இளைஞர்கள் நாடுகள் கடந்து இணையத்தால் இணைந்துள்ளனர் என்பது மறுக்கவியலாத உண்மை.
இணையத்தின் இயக்கத்தில் துளிர்விடும் நம்பிக்கை:
இளைஞர்களைப் போல் நம்மால் இணைய வழியில் அனைத்தையும் செய்து விட முடியுமா? என்ற கேள்வி இச்சமூகத்தின் மூத்த குடிமக்களின் உள்ளத்தில் ஆழமாக எழும்பியிருந்த தருணத்திலிருந்து இன்று மாற்றம் பெற்றுள்ளோம். இணையத்தால் 70 வயது என்ன 90 வயதிலும் எட்டிப் பிடிக்கலாம் சிகரத்தை என்பதை இன்று பல மூத்தோர்கள் தங்கள் வாழ்வால் உலகிற்கு வெளிகாட்டுகின்றனர். டிஜிட்டல் இந்தியா, இ-சேவை, எல்லாம் இணையத்தில் என்ற வார்த்தைகள் விளம்பரமாக நமது காதுகளின் அருகே வந்தபோது, இதுவெல்லாம் சாத்தியமா? என்று நகைத்த பலரும், இதுவெல்லாம் நமக்கு ஒத்துவராது என ஒதுங்கிய பலரும், இன்று இணையத்தால் இணைந்திட ஆர்வம் காட்டுகிறார்கள்.
மூத்தவருக்கும், இளைஞர்களுக்கும் இடையே எப்போதும் பல முரண்பாடுகள் காணப்படும். இணையத்தில் மூழ்கி கிடக்கும் இளைஞரை தவறாக பார்த்த சூழல் மாறி, இளையோர் இணையத்தால் இன்று இன்றியமையாத பல சாதனைகளை நிகழ்த்துவதை அனைவரும் அறிந்து கொள்ளக் கூடிய சூழல் உருவாகி உள்ளது. ஆனால் இன்று இணையம் இருவரையும் இணைக்கும் இணைப்பு பாலமாகியுள்ளது. எப்போதும் அலைபேசியில் இருக்கிறான். அதில் என்னதான் உள்ளதோ? என்று பல சந்தேகங்களை எழுப்பிய பல மூத்தோர், இன்று அலைபேசியை ஆராய்ந்து அறிந்துகொள்ள முயலுகின்றனர். வீட்டிலிருந்து கொண்டே அனைத்தையும் இணையத்தின் வழியாக செய்துகொண்டிருப்பதை கண்டு காலமாற்றத்தை தங்களின் வாழ்வோடு ஒப்பிட்டு இரசிக்கக்கூடிய தாத்தா பாட்டிகளின் எண்ணிக்கை இன்று ஏராளம். இன்றைய சூழலில் மூத்தோரின் உள்ளத்தில் இணையத்தால் இதயங்களை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை துளிர்விட தொடங்கியுள்ளது என்பதை பல வீடுகளில் என்று காண முடிகிறது.
கல்விகற்க இணையக்கல்வி:
பள்ளிக்கு சென்று பாடம் படித்த நிலையிலிருந்து வீட்டிலிருந்தே கற்கலாம் என்ற நிலை உருவாகி உள்ளது. பிள்ளைகளை பள்ளியில் விட்டு விட்டு பெருமளவில் பணம் சம்பாதிக்க நினைத்த பெற்றோர், இன்று பணத்தைவிட பிள்ளையின் பாதுகாப்பே சிறந்தது என உணர்ந்து பிள்ளைகளோடு நேரம் செலவிட தொடங்கியுள்ளனர். வாழ்க்கை கல்வி இணைய வழி கல்வியாக மாறியது போலவே, இறையியல் இணையத்தில் சாத்தியமா? என்ற நிலை மாறி இணையவழியில் இறையியலை கற்பது இன்றியமையாத ஒன்றாகி உள்ளது.
மனிதர்கள் எப்போதும் ஒருவரோடு ஒருவர் தொடர்பிலேயே இருப்பதற்கு ஆசைப்படுகிறார்கள். ஆனால் அந்த தொடர்பு மறுக்கப்படும் போது அல்லது தூண்டிக்கப்படும் பொது அதனை எதிர்க்கிறார்கள். இன்று நிலவும் இச்சூழலில் தொடர்புகளை துண்டிக்க வலியுறுத்தினாலும், தொடர்புகளை இணைக்கும் இணைப்பு பாலமாக இணையம் உள்ளது என்பதில் துளியளவும் ஐயமில்லை. இன்று நிலவும் இச்சூழ்நிலை உலகத்தின் வேகத்தை உணர்த்துகிறது என்பதை நாம் மறுக்க இயலாது. இச்சூழலில் உலகத்தின் வேகத்திற்கு ஏற்ப நம்மை நாம் வேகப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. வளமான கழனியை விவசாயியின் கையில் கொடுத்தால் நலமான வாழ்வு தரும் நல்லன பல பயிரிட்டு, வாழ்வை மேம்படுத்த வேண்டுவன செய்வார். அதுபோலவே இதுவரை வகுப்பறை கரும்பலகையை பின்பற்றி பாடம் கற்பித்த ஆசிரியர்கள், இன்று பாடம் கற்பிக்க இணையதளத்தை கையில் கொண்டுள்ளனர். நம் ஆசிரியர்கள் கண்டிப்பாக இதை கொண்டு வளமான நல்ல தலைவர்களை உருவாக்குவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. சூழலுக்கு ஏற்ற இறையியல் என்னும் அடிப்படையில், நிலவும் சூழலில் சிரமம் பாராமல் இணைய வழியில் இறைபணி செய்திட சரியான திட்டத்தை தரும் அவையும், திருஅவையின் உறுப்பினர்களும் முன்னெடுப்பது இறையாட்சியின் வளர்ச்சிக்கான பாதை என்பதில் மாற்றுக் கருத்தில்லை .
இணையத்திலும் கவனம்:
ஒரு சமூகத்தின் அல்லது ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது பெரும்பாலும் அந்நாட்டு இளைஞர்களின் தரத்தையும், திறத்தையும் பொருத்தே அமைகிறது. இந்த உண்மையை உணராத இன்றைய இளைஞர்கள் தம்மையே தங்களுக்குள் தொலைத்துவிட்டு வாழ்க்கையில் ஒரு பிடிமானம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு சாதிக்கும் திறமை இருந்தும் அதை சோதிக்கும் முயற்சி துளிகூட இல்லை. இவர்கள் வந்த இடம் தெரியாமல், புரியாமல் வெறுமையாக முகவரி இல்லாத கடிதங்களாக முடங்கிக் கிடக்கிறார்கள். அதுபோலவே பலவிதமான வழிகாட்டலின் உச்சமாக திகழக்கூடிய முதியவரும் முகவரியற்ற கடிதங்களாக இன்று முடங்கி போன சூழலில் இருந்து, இன்று இணைய வழியில் பல இதயங்களோடு இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதை மூத்தோரின் கண்களில் ஒளிரும் மகிழ்ச்சியில் காணமுடிகிறது.
இயன்றதை இணைய வழியில் கற்பிக்கவும், கற்கவும் முயற்சி எடுக்க வேண்டும். இணையத்தில் எப்போதும் இணைந்திருப்பது இயல்பாகவே உடல் நலனை பாதிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே மூத்தோரின் பரிந்துரைகளின்படி நாம் இணையத்தை இடைவிடாது பயன்படுத்தாமல் உடல் நலன் கருதி தேவைக்கு மட்டும் பயன்படுத்த நாம் பழகிக்கொள்ள வேண்டும்.
இணையத்தில் நடக்கும் அனைத்தும் பலரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பதை அறிந்தவர்களாக முன்மதியோடு இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டும். இன்று தங்களின் பல்வேறு வேலைகளுக்கு மத்தியிலும் குடும்பத்தின் மீது அக்கறை செலுத்தி குழந்தைகளை பேணி வளர்த்த மூத்தோர் இன்று இணையத்தில் மூழ்கி இருக்கும் இளையோரை இணையத்தில் இணைந்து இருப்பதை விடவும், வீட்டில் உள்ள நபர்களோடு அதிக நேரம் இணைந்து இருக்க ஊக்கப்படுத்த வேண்டியதும், அதை இளைய தலைமுறைக்கு சொல்லித் தரவேண்டிய பொறுப்பும் மூத்தோருக்கு உரியது.
சான்றோர் எனப்படுபவர்கள் தங்கள் கற்றதை அடுத்தவருக்கு கற்றுத் தருபவர்கள். இளைஞர்களும் சான்றோர்களாகத் திகழ இன்றைய சூழல் உதவுகிறது. இக்கால பெரியவர்கள் பலருக்கு இணையம் பற்றிய அறிதலோ புரிதலோ அதிகம் இல்லாத சூழலில் அவர்களுக்கு தாம் கற்றதை கற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இளைஞர்களுக்கு இருக்கிறது.
இளைஞர்கள் தாம் அறிந்த இணைய வழி கல்வியை அடுத்தவருக்கு முழுமையாக எளிமையாக கற்பிக்கவும், கற்றதை பகிரவும் இணையவழி கல்வி உதவிசெய்யும். இணைய வழியில் இயேசுவின் சீடர்களை உருவாக்கிட நாம் நல்ல சீடர்களாக இருந்து அனைவருக்கும் பாதை காட்ட முயல வேண்டும்.
நிறைவாக...
உளி படாத எந்த கல்லும் சிலை ஆவதில்லை. உழைப்பில்லாத எந்த கனவும் நனவாகுவதில்லை. நம்மால் இணையத்தை கற்றுக்கொள்ள இயலாது என்று மூத்தோர் எண்ணிக் கொண்டிருந்தால் அவர்களால் இணையத்தில் இணையும் கனவில் வெற்றி பெற முடியாது. 80 வயதிலும் இணையத்தை கற்றுக்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையோடு அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அம்முயற்சிகளுக்கு தம்மைத்தாமே தயார்படுத்திக்கொள்ள வேண்டும். ஆண்டவரே நீர் எங்கே இருக்கின்றீர்? என்று யோவானின் சீடர்கள் கேட்டபோது வந்து பாருங்கள் என்று இயேசு கூறினார். இயேசுவைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பிய எம்மாவூஸ் சீடர்களும் "எங்களோடு தங்கும் இயேசுவே" என்று வேண்டினார்கள். இயேசுவுடன் பயணித்த போதும், இயேசுவுடன் தங்கிய போதும் தான்;; சீடர்கள் இயேசுவை புரிந்து கொண்டார்கள். இளைஞர்கள் மூழ்கி இருக்கக்கூடிய இணையத்தில் இணையும் போதுதான் மூத்தோர்கள் அதில் இருக்கக்கூடிய நிறை குறைகளை கண்டுகொள்ள முடியும். இணையத்தை கற்றுக் கொள்வதோடு இளைஞர்களுக்கு வழிகாட்டவும் முடியும். இது சிரமமான காரியம்தான், இருந்தாலும் இதனை நாம் செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பாகவும், பணியாகவும் கருதி இணையத்தை மூத்தோர் கற்றுக் கொண்டு அதில் இருக்கக்கூடிய நிறை குறைகளை உணர்ந்தவர்களாக வருகின்ற தலைமுறையினருக்கு வழிகாட்ட வேண்டும்.
திருத்தந்தை பிரான்சிஸ் 2020 மார்ச் 30ஆம் தேதி தன் சொந்த நாடான அர்ஜென்டினாவில் வாழும் நீதியரசர் முனைவர். ரொபெர்த்தோ ஆந்தரஸ் கலார்தோ அவர்களுக்கு தன் கைப்பட எழுதிய கடிதத்தில் இனி நாம் செய்ய வேண்டிய பணிகளை குறித்து சிந்திப்பதும் தயாரிப்பதும் மிக முக்கியம் என குறிப்பிட்டுள்ளார் என்பதை அருட்தந்தை முனைவர். மைக்கில் ராஜ் அவர்கள் தனது அன்பிரக்கம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில், நாம் வருங்காலத்திற்கான வளமான பணிகளைச் செய்யவும், சிந்திக்கவும் முயல வேண்டும். மழலை வயதிலும், தள்ளாடும் வயதிலும் இணையத்தின் வேகத்தை எட்டிப் பிடிக்க முடியும் என்ற எண்ணத்தோடு நாம் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு இணையவழியில் இதயங்களோடு இணைந்திடுவோம். நாம் துணிந்து விட்டால் இமயமும் நமக்கு வழி கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு இணையத்தால் இவ்வுலகம் முழுவதையும் இணைத்திட தொடர் முயற்சியை தொடர்ந்திடுவோம்!
அன்புடன்
சகோ. ஜே. சகாய ராஜ்
மழலை குழந்தைகளையும் அனுபவம் மிக்க பெரியோரையும் இணைக்கின்ற இணையம் ஒரு மிகப்பெரிய கடல். இக் கடலில் மூழ்கி அறிவுக் களஞ்சியங்களையும் அன்பான உறவுகளையும் ஆர்வத்தோடு வளர்த்தெடுப்போம்! இவ்வுலகம் முழுவதையும் இணையத்தால் இணைத்திடுவோம்!
பதிலளிநீக்குஇணையத்தையும் இவ்வுலக வாழ்க்கையையும் பற்றி பல்வேறு புதிய கருத்துக்களை அரிய கருத்துகளை வழங்கிய அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள்!🙏🙏🙏🙏🙏👌👌👌👌👏👏👏👏
பதிலளிநீக்கு