வெள்ளி, 27 நவம்பர், 2020

ஏன் விழிப்பாய் இருக்க வேண்டும்? (28.11.2020)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாளின் வாசகங்கள் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை  உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
 இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் நான் விரைவில் வருகிறேன் எனக் கூறுகிறார். ஆண்டவரின் வருகை எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத ஒன்று. ஆனால் இந்த ஆண்டவரின் வருகையை ஆவலோடு அனைவருமே எதிர்பார்க்கிறார்கள். தொடக்க காலத்தில் இந்த ஆண்டவரின் வருகை விரைவாக வரப்போகிறது என்ற எண்ணத்தின் அடிப்படையில் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம் என்றெல்லாம் பலர் இருந்தார்கள். காலப்போக்கில் ஆண்டவரின் வருகை என்பது யாரும் அறியாத வண்ணம் திடீரென வரும் என்று உணர்ந்து கொண்டதன் அடிப்படையில்,  ஆண்டவரின் வருகைக்கு ஏற்ற வகையில் தங்கள் வாழ்க்கையை தயாரித்துக்கொள்ள கூடியவர்களாக மாறிப்போனார்கள். இன்றுவரை அந்த ஆண்டவரின் வருகையை எதிர்நோக்கி தான் பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஆண்டவரின் வருகைக்கு நாம் விழிப்போடு இருக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட மண்ணுலகில் எங்கும் குடியிருக்கும் எல்லார் மீதும் அந்நாள் வந்தே தீரும். அந்நாள் என இங்கு குறிப்பிடப்படுவது ஆண்டவரின் வருகைக்கான நேரத்தை  என பொருள் கொள்ளலாம்.  ஆண்டவரின் வருகையின்போது நீதிமான்கள் நிலைத்திருப்பார்கள். மக்களை அடிமைப்படுத்தியோர்,  அடுத்தவர் உழைப்பை சுரண்டியோர், என அனைவரும் கடவுளின் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகுவார்கள் என்ற செய்தியானது இன்றைய வாசகங்கள் வழியாக நமக்கு ஆழமாக தரப்படுகின்றன. 
  ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் விழிப்பாய் இருக்க இறைவன் நம்மை அழைக்கின்றார். ஏன் விழிப்பாய் இருக்க வேண்டும்? எதற்காக விழிப்புடன் செயல்பட வேண்டும்? என்று கேள்விகளை எழுப்பினால், நாம் ஆண்டவரின் வருகைக்காக நம்மை நாம் தயாரித்துக் கொண்டிருக்கிறோம். யாரும் அறியாத வண்ணம் இறைவன் இவ்வுலகத்திற்கு வருவார். அப்படியே வரும்போது அவர் நம்மை கண்டு பெருமை கொள்ளக் கூடியவராகவும் நம்மை அவர் தன்னுடைய உரிமைச் சீடன் என்று சொல்லக்கூடியவர்களாகவும் இருக்கக் கூடிய வகையில் நமது செயல்கள் அமைய வேண்டும். எனவே ஆண்டவரின் வருகை எப்போது வரும் என்று தெரியாது. எனவே இம்மண்ணில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நிமிடமும் விழிப்பாய் இருந்து ஒருவர் மற்றவரின் நலனில் அக்கறை காட்டக் கூடிய,  ஒருவர் மற்றவருக்கு உதவி செய்யக்கூடிய வகையில் வாழ்வதற்கு இறைவன் நம்மை அழைக்கின்றார். நாம் விழிப்பாக இருப்பது நமக்கு மட்டுமல்ல அனைவருக்கும் நல்லது. ஆண்டவரின் வருகைக்காக என்று மட்டுமல்ல நாம்  விழிப்பாக இருப்பது என்பது எப்போதுமே நல்லது. விழிப்பாய் இருக்கும்போது பல நேரங்களில் நாம் சரியானவைகளை சரியான நேரங்களில் செய்கின்றோம். ஆண்டவர் கூறக்கூடிய விழிப்பாய் இருங்கள்  என்ற செய்தியானது, ஒவ்வொருவருக்குமான வாழ்க்கை பாடமாகும். நாம் வாழக்கூடிய இந்த பரபரப்பான உலகத்தில் அடுத்தவர் நம்மை பார்க்கிறார்கள் என்ற விழிப்போடு இருக்காமல், அடுத்தவர்கள் நம்மை புகழ வேண்டும் என்ற எண்ணத்தோடு, மற்றவர்கள் நம்மை கவனிக்கிறார்கள் என்ற கவனத்தோடு செயல்பட்டு, நல்லவர்கள் போல பிறரிடம் நம்மைக் காட்டிக் கொள்வதை இறைவன் இங்கு குறிப்பிடவில்லை. மாறாக எப்போதும் எந்த நேரத்திலும் மற்றவர்கள் பார்க்கிறார்கள் பார்க்க வேண்டும் என்பதை எல்லாம் பொருட்படுத்தாது, எப்போதும் நன்மை செய்வதிலும், நல்லதை பேசுவதிலும், நாம் இருக்க வேண்டும் என்ற செய்தியை தான் இறைவன் நமக்கு இன்றைய நாளில் உணர்த்துகிறார். விழிப்பாக இருப்போம்! அடுத்தவருக்காக அல்ல, ஆண்டவர் இயேசுவுக்காக!  நாம் விழிப்பாயிருந்து ஆண்டவர் இயேசுவின் உண்மை சீடர்களாகிட உறுதி ஏற்றவர்களாய் தொடர்ந்து பயணிப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...