வெள்ளி, 6 நவம்பர், 2020

நாம் நிறைவு செய்வோமா? (7.11.2020)

நாம் நிறைவு செய்வோமா?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாளின் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 இன்றைய வாசகங்கள் நமக்கு தரக்கூடிய மையச் செய்தி, நாம் நிறைவு செய்பவர்களாக இருக்க அழைக்கப்படுகின்றோம் என்பதாகும். நாம் நிறைவு செய்பவர்களாக இருக்க அழைக்கப்படுகின்றோமா? அப்படி என்றால் என்ன? என்ற கேள்வி உள்ளத்தில் எழலாம். 

இன்றைய முதல் வாசகத்தில் பவுல் தன்னுடைய நிலையை தெளிவாக எடுத்துரைக்கிறார். பவுல் தனது நற்செய்தி பரப்பும் பணியை செய்து கொண்டிருந்த காலத்தில் பலவிதமான இன்னல்களை சந்தித்தார். பல துன்பங்களை அனுபவித்தார். அந்த துன்பங்கள் அவருக்கு வாழ்க்கைப் பாடத்தை கற்பித்தது. பவுலுக்கு பலர் துணை செய்தார்கள்.  பவுலுக்கு பலர் துணை நின்றார்கள். குறிப்பாக தனக்குத் துணை நின்ற மக்களை அவர் பாராட்டுகிறார்.  பிலிப்பு நகர மக்கள்  பவுலின் பணிக்கு தேவையானதை தருவதற்காக,  அவருக்கு தேவையானதை பெற்றுக் கொள்ளுமாறு சிறிது தொகையை அனுப்பி வைத்திருக்கிறார்கள். அந்த தொகையை பெற்றுக்கொண்டு பவுல் நன்றி கூறுகிறார். எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு என்ற பவுலடியாரின் வார்த்தைகள் எப்படி பவுலுக்கு வலிமை கிடைத்தது என்ற கேள்வியை எழுப்பினாலும்,  வலுவூட்டுகிறவரின் துணை என்பதை கடவுளின் கொடையாக பார்க்கிறார். கடவுளின் கொடை என்பது நேரடியாக வெளிப்படுவதில்லை. நாம் கண்ணில் காண கூடிய பல மனிதர்கள் வழியாக வெளிப்படக் கூடியது.


 இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட உங்களிடம் இருப்பதை வைத்து நல்ல நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களிடமிருக்கும் செல்வத்தைக் கொண்டு நல்ல நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுங்கள் என நற்செய்தி வாசகத்தில் இயேசு நமக்கு குறிப்பிடுகிறார். பிலிப்பியர்கள் தங்களிடம் இருந்ததை பவுலோடு பகிர்ந்தார்கள். அவர்களிடமிருந்து பெற்றதை பவுல் அடுத்தவரோடு பகிர்ந்தார். பகிர்ந்து வாழ நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். பகிரும்போதுதான் அடுத்தவர் தேவையை நம்மால் நிறைவு செய்ய முடியும். 

மனம் இருப்பதால்தான் நமக்கு மனிதன் என்ற பெயர் வந்தது எனக் கூறுவார்கள். முகத்தில் வாரி போட்டுக் கொண்டு செல்லும் கண்ணீர் தான் மனிதனின் முகவரி. நீங்கள் மனிதன் என்றால் கண்ணீர் என்ற முகவரி வேண்டும் என்கிறார். பவுல் தனது பணி வாழ்வில் பலவிதமான இன்னல்களையும் துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

 இன்றைய முதல் வாசகத்தில் கூட தன்னுடைய துன்பங்களைப் பவுல் அழகாக எடுத்துரைக்கிறார். பவுலைப் போல நல்ல பணியை செய்ய முயற்சிக்கக் கூடிய பல நபர்கள் இன்று சமூகத்தில் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். பல துன்பங்களை அனுபவிக்கின்றனர்.  இறுதிவரை தாங்கள் மேற்கொள்ளும் பணி ஒரு நலமான பணி, இந்த நல்ல பணியை செய்வதால் வரக்கூடிய துன்பங்களை இன்முகத்தோடு ஏற்போம் என்ற மனநிலையோடு இன்றும் சமூகத்தில் நடக்கக்கூடிய அவலங்களை எதிர்த்து எத்தனையோ நபர்கள் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள், பவுலைப் போல. அவர்களுக்கு பிலிப்பு  நகர மக்களைப் போல நாம் துணை நிற்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன. துணை நிற்பது என்றால் அவருக்கு பொருளாதார உதவி செய்வது என்பது மட்டுமல்ல,  கருத்தியல் ரீதியாக அவரோடு உரையாடுவது மட்டுமல்ல,  மாறாக பக்கபலமாக செய்யும் செயல் நல்ல செயலாக இருக்குமாயின், ஒருவர் நல்ல காரியத்திற்காக இச்சமூகத்தில் போராடுகிறார் என்றால், அவரோடு துணை நிற்பதற்கு நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். அவரோடு துணை நிற்பதன் மூலம் அவரை நாம் நிறைவடையச் செய்ய முடியும்.  அப்போது அவர் நிறைவடைகிறார் என்பதல்ல,  அவர் எந்த ஒரு நல்ல காரியத்திற்காக முயற்சியில் ஈடுபட்டாரோ, போராட்டங்களில் ஈடுபட்டாரோ அந்த போராட்டத்திற்கான காரணம் நிறைவேறுகிறது.
 அதனால் பலருக்கும் நன்மை உருவாகிறது. எனவே போராடுபவர்களுக்கு துணை நில்லுங்கள் என்பதல்ல,  பவுலைப்போல இச்சமூகத்தில் குரல் கொடுக்கக்கூடிய மனிதர்களுக்கு துணை நிற்க நாம் அழைக்கப்படுகிறோம். நம்மால் துணைநிற்க இயலாவிட்டாலும் அவர்களைப் பற்றி தரக்குறைவாக பேசுவதை யாவது நிறுத்திக் கொள்வது மிகவும் நல்லதாகும்.

 மதம் இனம் மொழி என்ற பாகுபாடுகளை எல்லாம் கடந்து மனித நேயம் என்பதை தலைமேற்கொண்டு மனிதநேயத்தோடு, மனிதநேய செயல்களில் ஈடுபட இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். மனித நேய செயல் என்பது துன்பத்தில் இருப்பவருக்கு துணை நிற்பது. தேவையில் இருப்பவருக்கு உதவி செய்வது. சமூகத்தில் நீதிக்காக போராடுபவர்களுக்கு பக்கபலமாக துணை நிற்பது. அவர்களுக்கு ஆறுதல் தருவது என பலவற்றை கொள்ளலாம். இந்த நற்செயல்களை எல்லாம் நாம் செய்கின்றோமா? என சிந்திக்க இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். ஒருவேளை செய்யக் கூடியவர்களாக நாம் இருப்போமாயின் இறைவனுக்கு நன்றி கூறுவோம். தொடர்ந்து அந்த நற்செயல்களை செய்து கொண்டே இருப்போம். ஒருவேளை அந்தச் செயல்களை செய்வதில் நமக்கு ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருக்குமாயின் சற்று ஆழமாக யோசித்துப் பார்ப்போம். நல்ல செயல்களை நாம் முன்னெடுத்து செய்யாவிட்டாலும், யாரோ ஒருவர் முன்னெடுத்திருக்கின்றார். அவருக்கு துணை நிற்பது கூட நம்மால் முடியாத காரியமல்ல. அந்த ஒரு காரியத்தையாவது செய்து அவர்கள் நிறைவு பெறவும், அவர்கள் மூலமாக பலர் நிறைவு பெறவும், நம்முடைய சிறு செயல்கள் பலருக்கு நிறைவைத் தரக் கூடிய  சிறு செயல்களாக அமைந்திட இன்றைய நாளில் நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். இத்தகைய தேவையில் இருப்பவர்களுக்கு உதவி செய்யாமல், சமூகத்தில் நீதிக்காக போராடுபவர்களுக்கு துணை நில்லாமல், வெறுமனே மேடைகளில், நாமெல்லாம் உரிமைக்காகப் போராடுபவர்கள்! நாமெல்லாம் அநீதியை எதிர்க்கக் கூடியவர்கள்! நாமெல்லாம் அடுத்தவர் நலனில் அக்கறை கொண்டவர்கள்!என போலியான வார்த்தைகளை கூறிக் கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டு தங்களை நேர்மையாளர் எனக் காட்டிக் கொண்டிருக்கக்கூடியவர்களை அன்று இதுப் போன்ற செயலில் ஈடுபட்ட பரிசேயர்களை இயேசு சாடியது போல இன்று நாமும் சாடிட கடமைப்பட்டிருக்கிறோம். வார்த்தைகளால் மக்களை ஏமாற்றாமல் உண்மையான வார்த்தைகளை நமது செயல்களாக மாற்றி, நமது செயல்களால் பல மனங்கள் நிறைவு பெற இந்த நாளில் நாம் முயற்சியில் ஈடுபட இறைவனது அருளை வேண்டுவோம்...

1 கருத்து:

  1. பிறருக்காக வாழ்பவர்களோடு கரம் கோர்த்து நிற்போம்! நாமும் நன்மைகள் செய்வோம்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...