புதன், 25 நவம்பர், 2020

தலை நிமிர்ந்து நிற்போம்! (26.11.2020)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்!

 தலை நிமிர்ந்து நிற்போம்! 

 இன்றைய வாசகங்கள் நமக்கு வழங்கக் கூடிய மையச் செய்தி, தலைநிமிர்ந்து நிற்க கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதாகும். இன்றைய முதல் வாசகத்தில் பாபிலோன் மாநகர் வீழ்ந்தது என்ற செய்தியானது வானதூதர்களால் அறிவிக்கப்படுகிறது. பாபிலோன் மாநகர் வீழ்ந்தது என்பதை வரலாற்றுப் பார்வையில், திருவெளிப்பாட்டினை  எழுதிய யோவான் நற்செய்தியாளரின் பார்வையில் பார்க்கும் பொழுது தொடக்க காலத்தில் பாபிலோன் என்பது உரோமைப் பேரரசை குறிப்பதாக அமைந்திருக்கிறது. உரோமைப் பேரரசின் வீழ்ச்சி ஏன் பெரிதாக பேசப்பட்டது என்ற கேள்வி உள்ளத்தில் எழலாம். அக்காலத்தில் உரோமைப் பேரரசு பலவிதமான இன்னல்களை கொடுத்துக் கொண்டிருந்தது. மக்களை பல விதங்களில் அது துன்புறுத்திக் கொண்டிருந்தது.  அப்போது ஆட்சி அதிகாரம் கொண்டவர்கள் தங்கள் கடவுளாக வழிபடுமாறு மக்களை  தூண்டினார்கள். சுயமாக  மக்கள் தங்களுடைய கடவுளை வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அரசனையே கடவுளாக ஏற்றுக்கொண்டு அரசனுக்கு சிலைகள் நிறுவி, அரசனுக்கு கோயில்கள் கட்டி, அரசனை வணங்கக் கூடியவர்களாக மட்டுமே மக்கள் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இத்தகைய சூழ்நிலைகளால் இயேசுவை கடவுளாக ஏற்றுக் கொண்டவர்கள் எல்லாம் பலவிதமான இன்னல்களைச் சந்தித்தார்கள். எனவே தான் இவ்வாறு மக்களின் மீது கொடுங்கோல் ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த உரோமை பேரரசினை இறைவன் வீழ்த்துவதாக யோவான் காட்சி காண்கின்றார். அக்காட்சியின் அடிப்படையில் அவர் எழுதுகின்றார். உரோமைப் பேரரசு வீழ்ந்தது என வானதூதர்கள் அறிக்கையிட அதனை கேட்டு விண்ணில் இருந்த  உரோமை பேரரசினால் துன்புறுத்தப்பட்டு உயிர்விட்ட ஆன்மாக்கள் அனைத்தும் இணைந்து புகழ்ந்து பாடி கடவுளைப் போற்றும் வண்ணமாக இன்றைய முதல் வாசகம் அமைகிறது. 
இன்றைய நற்செய்தி வாசகத்தைப் பொருத்தவரை நாம் அனைவரும் தலைநிமிர்ந்து நிற்க அழைக்கப்படுகிறோம். ஏனென்றால் பலவிதமான இயற்கை சீற்றங்களால் நாம் அனைவரும் பாதிக்கப்பட இருக்கிறோம் என்ற செய்தியினை நற்செய்தி வாசகத்தின் வழியாக நாம் உணரலாம். அத்தகைய சூழலின் போது நாம் தலைநிமிர்ந்து நிற்க வாசகத்தின் வழியாக இறைவன் நம்மை அழைக்கின்றார். இப்போது நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் கூட, நிவர் புயலின் தாக்கத்தின் காரணமாக பல விதமான முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். நமது அரசும் பல வழிகளில் அதற்காக முயற்சிக்கிறது. மக்களும் தங்களின் வாழ்வாதாரத்தையும் தங்களுடைய உயிரையும் காத்துக் கொள்ள வேண்டும் என்று சூழ்நிலையின் காரணமாக பல விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே. இயற்கை மாற்றங்கள் எப்போதுமே  மனிதனுக்கு பலவிதமான பாடங்களை உணர்த்துகிறது. மனிதனுக்குள் புதைந்திருக்கக் கூடிய மனித நேயத்தை வெளிப்படுத்துகிறது. இயற்கைக்கு எதிராக மனிதன் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலையும் சுட்டிக்காட்டுகிறது. உரோமைப் பேரரசு எப்படி மக்களை தங்களுக்கு கீழாக பலரை அடக்கி ஆண்டதோ, அதுபோல இயற்கை நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்ற மமதையோடு பல நேரங்களில் நமது சுயநலத்திற்காக இயற்கையினை பாழ்படுத்திய நேரங்களை நினைவு கூற வைக்கிறது, நடக்கக்கூடிய ஒவ்வொரு இயற்கை பேரிடர்களும்.
 இன்று நிலவக்கூடிய இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட நாம், இன்றைய வாசகங்களின் அடிப்படையில் சிந்திக்கும்போது, இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூறப்படுவது போல அந்நாட்களில் கருவுற்று இருப்போர், பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம் என்ற  என்ற வார்த்தைகள் இன்று நிலவக் கூடிய சூழலை நமக்கு கண் முன்பாக படம்பிடித்துக் காட்டுகிறது.   இயற்கைக்கு எதிரான நம்முடைய செயல்களினால் நாம் இவ்வாறான பலவிதமான துன்பங்களை சந்திக்க வேண்டிய சூழலில் இருக்கின்றோம்.

இச்சூழ்நிலைகளை எல்லாம் சரி செய்துகொண்டு, இயற்கை மாற்றத்தின் போது, இயற்கையின் பேரிடர்கள் நிகழும்போது, நாம் தலைநிமிர்ந்து நின்று மனிதத்தை காக்கவும், மற்ற உயிர்களை காட்டவும் இயற்கையை காக்கவும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற பாடத்தினை இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு உணர்த்துகின்றார். இன்று நாம் வாழக்கூடிய இந்த  உலகத்தை சற்று திருப்பி பார்ப்போமாயின், ஒரு காலத்தில் நேர்மை தவறாமல் வாழ்ந்தவர்களை பார்த்தோம். ஆனால் இப்போதெல்லாம் நேரத்திற்கு தகுந்தாற்போல் வாழ்பவர்களை மட்டுமே அதிகம் பார்க்கின்றோம்.  நம்மைச் சுற்றி இயற்கை பேரிடர் நிகழும் போது மட்டும் நம்மிடம் இருக்கக்கூடிய மனிதநேயத்தை வெளிப்படுத்தக்கூடிய மனிதர்களும் இச்சூழலில் உண்டு.   நம்மைச் சுற்றி ஒரு இயற்கை பேரிடர் வரும் பொழுது மட்டுமே இயற்கையை பற்றி எண்ணிப் பார்க்கக் கூடிய மனிதர்களும் உண்டு.  ஆனால் நாம் எப்போதும் இயற்கையை எண்ணி பார்க்க வேண்டும். எப்போதும் நம்மிடம் இருக்கக்கூடிய மனிதநேயத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற செய்தியினை, இன்றைய வாசகங்கள் வழியாக நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
இன்றைய முதல் வாசகத்தில் மக்களை அடிமைப்படுத்தி தங்களின் கையில் ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்ற  மமதையின் காரணமாக மக்களை அடிமைப்படுத்திய உரோமைப் பேரரசு ஒருநாள் வீழ்ந்தது என்ற செய்தியை வாசிக்கிறோம்.  நாமும் நமக்கு உட்பட்டது, நம்முடைய அதிகாரத்திற்கு கீழ் உள்ளது இந்த இயற்கை. எனவே நாம் இதனை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலையோடு இருப்போமாயின், நம்முடைய செயல்களை சரிசெய்துகொள்ள இன்றைய வாசகங்கள் வழியாக நமக்கு இறைவன் அழைக்கின்றார். நம்மைச் சுற்றியுள்ள இவ்வுலகத்தில் உள்ள ஒவ்வொன்றும் இறைவன் நமக்கு கொடுத்ததன் நோக்கம்,  நாம் அவைகளோடு இணைந்து, அவைகளை வளர்க்கவும், பேணி பாதுகாக்கவும் தான். அவைகள் இன்றி நாமில்லை! இயற்கை இன்றி நாம் இல்லை! எனவே இந்த மகத்துவத்தையும் உணர்ந்தவர்களாக இறைவனின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்கக் கூடியவர்களாக நாம் அனைவரும்,  நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் இயற்கை பேரிடர்களை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இயற்கையை நேசிக்கவும்,  இயற்கையை அன்பு செய்யவும், இயற்கையை பராமரிக்கவும், பாதுகாக்கவும், அவைகளோடு இணைந்து அவைகளையும் மதித்து வாழ அழைக்கப்படுகிறோம். இயேசுவின் இந்த அழைப்பை உணர்ந்தவர்களாக, நம்மைச் சுற்றியுள்ள இயற்கையை காக்கக் கூடியவர்களாக, இயற்கையை காக்க கூடிய மனநிலை கொண்டவர்களாக, தலை நிமிர்ந்து நிற்போம், இறைவனின் உண்மை சீடர்களாக!

1 கருத்து:

  1. இயற்கையை தலைநிமிரச் செய்த இறைவனின் அன்பு பிள்ளைகளாய் தலைநிமிர்ந்து வாழ்வோம்!
    அருட் சகோதரர் சகாயராஜ் அவர்களின் அருமையான கருத்துக்களுக்கு அன்பான நன்றிகள்! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...