திங்கள், 23 நவம்பர், 2020

வாழ்க்கைக் கல்வியை கற்பிப்போம்... (23.11.2020)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாளின் வாசகங்கள் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

இன்றைய முதல் வாசகமானது திருவெளிப்பாடு நூலிலிருந்து எடுக்கப்பட்டது. யோவான் தான் கண்ட காட்சியை குறித்து எழுதி வைக்கிறார். அவர் கண்ட காட்சி இறைவன் இறுதி நாளின்போது நல்லவர்கள் தீயவர்கள் வாழக்கூடிய இவ்வுலகின் மீது ஆட்சி செலுத்துவார். அப்போது நாம் பயிர் அறுவடை செய்வது போல அவரும் நல்லவர்கள் தீயவர்களை பிரித்து அறுவடை செய்து சேர்த்து வைப்பார் என்ற ஒரு கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமைகிறது. அறுவடை என்றாலே பொதுவாக பெரும்பாலும் அதில் மகிழ்ச்சியானது புலப்படும். ஆனால் இந்த அறுவடையில் துன்பமும் அழிவும் இருப்பதைக் காண முடிகிறது. 

மனிதனாக மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தெரியும் ஒருநாள் மரணிப்போம் என்பது. அது தெரிந்திருந்தும் இருக்கக்கூடிய நாட்களில் நல்ல விதமான காரியங்களை செய்வதை விடுத்து விட்டு எப்போதும் அடுத்தவரோடு இணைந்து, அடுத்தவர் நலனில் அக்கறை கொள்ளாமல் தங்களுடைய விருப்பப்படி தங்களுடைய எண்ணத்தின் படி மட்டும், தான் என்ற மனப்பான்மை கொண்டவர்களாக வாழ்ந்து வரக்கூடிய இச்சூழ்நிலையில்,  இறைவனுடைய இத்தகைய வார்த்தைகள் நம்முடைய வாழ்வை மீண்டும் ஒருமுறை அலசிப் பார்த்து சரிசெய்து கொண்டு, இறுதி நாள் என்பது எவ்வாறு இருக்கும் என்பது எவருக்கும் தெரியாத வண்ணம் இருக்க, இறுதி நாளை நோக்கி பயணிக்க கூடிய நாம், அதாவது இறப்பை நோக்கி பயணிக்க கூடிய நாம், நமது வாழ்க்கையில் நலமான செயல்களைச் செய்யவும், நல்ல பணிகளை தெரிந்து கொள்ளவும், இது போன்ற வாசகங்கள் வழியாக இறைவன் நம்மிடையே உரையாடுகிறார்.

அதிகாலை நேரம்..
ஆலமரத்தில்..
ஆலவிழுதுகள் அசைய..
அனைவரையும் அழைத்தது..
அந்த குயில்களின்..
குதூகலப் பாட்டு..
ரசிப்பவர்க்கு இதமளிக்கும்..
இதமான பாட்டு!!

 அன்று இந்த பாடல்களை எல்லாம் கேட்டவர்கள் பலர். இன்று குயில்களின் ஓசையில்லாமல் எப்போதும் வாகனங்களின் இரைச்சல் சூழ்ந்து இருக்கக்கூடிய இந்த உலகத்தில் நாம் எதை நிலையானது நல்லது என நாடிச் செல்கிறோம் என சிந்திப்போம்.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட கோவிலை பற்றி சிலர் பேசிக் கொண்டிருப்பதை இறைவன் கேட்கின்றார். கவின்மிகு கற்களாலும் நேர்த்தியான பொருட்களாலும் கோவில் அழகுபடுத்தபட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள். இயேசு, இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா! ஒரு காலம் வரும். அப்போது கற்கள் ஒன்றின் மீது ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும் என்கிறார். நாம் இன்று உலகத்தில் நிலையானது உறுதியானது, இது நமக்கு நல்லது, இது நம்மிடம் மட்டுமே இருக்கவேண்டும் என எண்ணிக் கொண்டு நாம் சேர்த்து வைக்கக் கூடிய அனைத்தும் கண்டிப்பாக ஒரு நாள் அழிந்து போகும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. நாம் சேர்த்து வைக்கக் கூடிய சொத்துக்கள் அனைத்தும் இன்று நம்முடையதாக இருக்கலாம். நாம் மரணிக்கும் போது அது நம்மைச் சார்ந்தவர்கள் உடையதாக மாறிப்போகிறது. நாம் நிலையானது என பற்றிக் கொண்டிருக்கும் எதுவும் நிலையானதல்ல. உங்களுக்கெல்லாம் நினைவில் இருக்கும் என எண்ணுகிறேன். 

காலா என்ற ஒரு திரைப்படம் வந்தது. அந்த திரைப்படத்தில் வில்லனாக வரக்கூடிய நபர் ஒரு கருத்தை கூறுவார். எதை கொண்டு வந்தோம் எடுத்துச் செல்ல! இங்கிருந்து இவ்வுலகத்தை விட்டு பிரிந்து செல்லும் பொழுது எதையும் கொண்டு போக முடியாது என்பது எனக்கு தெரியும்! ஆனால் இருக்கும் வரை ஒரு பிடி நிலமாக இருந்தாலும் அது என்னுடையதாக இருக்க வேண்டும் என்று கூறுவார்.

 இன்று இத்தகைய மன நிலையோடு தான் பல நேரங்களில் நாம் பலவிதமான செல்வங்களை நமக்கு நமக்கு என சேர்த்துக் கொள்ள விரும்புகிறோம். அதிகமான செல்வங்களை சேர்த்துக் கொண்டே செல்வதால், நமது மகிழ்ச்சி கூடும், நிம்மதி கூடும், நம் சந்ததியினர் நலமாக இருப்பார்கள் என நாம் எண்ணுகிறோம். ஆனால் உண்மையில் நலன் என்பது பொருட்களை சேர்த்து வைப்பது அல்ல. இருப்பதை மற்றவரோடு பகிர்ந்து வாழ்வதில்தான் இன்பமானது அமைகிறது. பொதுவாகவே குடும்பங்களில் காணப்படக்கூடிய ஒரு உன்னதமான செயல், தங்களுடைய குழந்தைகளின் நலனுக்காக பெற்றோர்கள் அனைத்தையும் சேர்த்து வைப்பார்கள். குழந்தைகளின் நலனுக்காக அனைத்தையும் சேர்த்து வைப்பதில் எந்தவித தவறும் இல்லை. ஆனால், குழந்தைகள் தங்களுக்கு வேண்டியதை அவர்களாக,  சுயமாக சம்பாதித்து கொள்வதற்கான பயிற்சியை தான் நாம் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அதை கொடுக்க மறந்து போய்  இன்று அவர்களுக்காக என்று கூறிக்கொண்டு நாம் நம் நிலத்தையும் பொன்னையும் பொருளையும் சேர்த்துக்கொண்டே செல்கிறோம். ஆனால் இவற்றை அவர்களாக சேமிப்பதற்கு, அவர்களாக தேடிப் பெற்றுக் கொள்வதற்கு பயிற்சிகளை நாம் கொடுக்க மறுக்கின்றோம். நம் குழந்தைகள் எப்போதும் நலமாக இருக்கவேண்டும் என எண்ணுவதில் தவறில்லை. நாம் இல்லாத போதும், நாம் இருக்கும் போதும், அவர்கள் சுயமாக அவர்களின் தேவைகளை அவர்களே நிவர்த்தி செய்யக் கூடியவர்களாக இச்சமூகத்தில் உருவாக வேண்டும். அத்தகைய பயிற்சியை நாம் நமது குழந்தைகளுக்கு கொடுக்கவே இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.  

நாம் வாழும் இந்த உலகத்தில் நிலையானது என பலவற்றை எண்ணி, ஏமாந்து விடாமல் இருக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன. நாம் நமது குழந்தைகளின் நலனுக்கு எனக்கூறி சேர்த்து வைக்கக் கூடிய செல்வங்களால் அவர்கள் ஏமாந்து போகாமல் அவர்களை பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகளின் வாழ்க்கை நம்மிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் தங்களுடைய வளர்ச்சி நிலையில் 60 சதவீதமான அறிவினை தனது குடும்பத்தில் இருந்துதான் கற்றுக் கொள்கிறது என கூறுவார்கள். நாம் நமது குழந்தைகளுக்கு எத்தகைய கல்வியை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என சிந்திப்போம். நமது குழந்தைகளை எத்தகைய மனப்பான்மையோடு இவ்வுலகத்தில் உருவாக்குகிறோம் என்ற சிந்திப்போம். குழந்தைகளை நல்ல சிந்தனைகளோடு வளர்க்கவே பெற்றோர்களாகிய நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம். அதுபோல உறவுகளும் சுற்று இருக்கக்கூடிய உறவுகள் அனைத்தும் தாங்களாக தங்களுக்கு வேண்டியதை பெற்றுக் கொள்ளவும், அதனை மற்றவரோடு பகிர்ந்து வாழவும் கற்றுக் கொடுக்க முன்வர வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். நமது சுயநலத்தின் காரணமாக நாம் செய்யக்கூடிய சின்னஞ்சிறு தவறுகள் பெரிய விளைவுகளை சமூகத்தில் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அதை இயற்கையை பாழ்படுத்துகிறது. உறவுகளை சிதைக்கிறது. உறவுகள் சிதைந்து போய் இன்று மனிதர்கள், அருகாமையில் இருப்பவர் யார் என அறியாத வண்ணம் வீட்டிற்குள்ளேயே கதவை அடைத்துக்கொண்டு இருக்கக்கூடிய சூழலானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாம் இவ்வுலகில் வாழும்போது ஒருவர் மற்றவரோடு உறவுகொண்டு வாழவே அழைக்கப்பட்டிருக்கிறோம். உறவில் வாழவும், உறவில் மகிழவும், இன்றைய நாளில் உறுதி ஏற்போம். 

 நாம் நமது வாழ்க்கையை சரிசெய்துகொண்டு நிலையானது என்பது செல்வங்களை சேர்ப்பதில் அல்ல. இருப்பதை மற்றவரோடு பகிர்வதில் என்ற பாடத்தை நமது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கவும், இறுதி நாளை நோக்கி பயணிக்க கூடிய நாம், அதாவது நமது இறப்பினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கக் கூடிய நாம், வாழ்க்கையின் தத்துவங்களை உணர்ந்து இருந்தாலும், அதனை மேலோட்டமாக எண்ணி விட்டு மீண்டும் மீண்டும் அழிவுக்கான செல்வங்களை சேர்த்துக் கொண்டே இருப்பதை விட, நமது குழந்தைகளுக்கு அழியாச் செல்வமாகிய வாழ்க்கைக் கல்வியை கற்றுக் கொடுக்கக் கூடிய நல்ல மனிதர்களாக உருவாகிட இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நம்மை அழைக்கின்றார். அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய், வாழ்க்கையில் நல்லவிதமான மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ள,  இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்றவர்களாய் தொடர்ந்து பயணிப்போம்.

1 கருத்து:

  1. நலமான பணிகளை மகிழ்வோடு செய்வோம்!
    நமது குழந்தைகளையும் உண்மை வாழ்வை நோக்கி வழிநடத்திச் செல்வோம்! என்று வாழ்க்கையை அர்த்தமுள்ள விதத்தில் வாழ அழைக்கும் அருட்சகோதரர் சகாய ராஜ் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...