இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இன்றைய வாசகங்கள் நாம் எப்படி வாழவேண்டும் என்ற செய்தியை வலியுறுத்துகின்றன. கடந்த சில நாட்களாக வரக்கூடிய வாசகங்கள் அனைத்துமே நாம் நமது வாழ்வை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நற்பண்புகளை இறைவன் தன்னுடைய வார்த்தைகளின் வழியாக நம்மிடம் கூறிக் கொண்டிருக்கிறார்.
அதன் அடிப்படையில் இன்றைய முதல் வாசகம் நாம் பணிவோடு நடந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை ஆழமாக வலியுறுத்துகிறது.
அதேசமயம் இன்றைய நற்செய்தி வாசகம் என்று பார்க்கும்பொழுது இன்றைய நற்செய்தி வாசகத்தில் நோயினால் பாதிக்கப்பட்ட பத்து பேர் இயேசுவிடம் வந்து எங்களுடைய நோய்களை நீக்கியருளும் என்று கேட்டனர். உடனே இயேசுவும் அவர்களுடைய நோய் நீங்கும் எனக் கூறி அனுப்புகிறார். அவர்கள் செல்லும் போதே அவர்களுடைய நோய் நீங்கிப் போனது. உடனே பத்து நபர்களில் ஒருவர் தன் உடல் நலம் பெற்றிருப்பதை உணர்ந்தவராய் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே இயேசுவிடம் மீண்டும் வந்து, "என்னுடைய நோய்கள் நீங்கி விட்டன" என்று இயேசுவிடம் நன்றி கூறுகிறார். இயேசு அவரைப் பார்த்து கேட்கிறார், மீதமுள்ள ஒன்பது பேர் எங்கே? என்று கேட்கிறார். கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரையும் காணவில்லையே? என்று கூறினார். இந்த இறைவார்த்தை பகுதியினை நாம் சற்று ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. துன்பத்தில் இருக்கும்போது நாம் அனைவரும் ஒன்றாகவே இருக்கிறோம். உதாரணமாக நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த போது நோயினால் அகப்பட்டிருந்த போது பத்து நபர்களும் ஒன்றாக இருந்தார்கள். ஆனால் அவர்களிடையே நலம் பெற்ற நிகழ்வு நிகழ்ந்த போது அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக பிரிந்து போகக்கூடிய சூழலைப் பார்க்கிறோம். சமூகத்தில் ஒருவன் மிகவும் பின்தங்கிய நிலையில், அடுத்தவரின் உதவியை நாடி இருக்கும் பொழுது அவனுக்கு பணமோ பதவியோ, பட்டமோ, சாதிய ரீதியாகவும் மதத்தின் ரீதியாகவும் உயர்வு தாழ்வு என்பதை பார்க்காதவனாக இருக்கிறான். அதே அவனிடம் செல்வாக்கு பெருகும் போது நல்ல ஆரோக்கியமான உடல் நலத்தோடு இருக்கும் பொழுது, அவன் மற்றவரை தனக்குக் கீழாகப் பார்க்கக்கூடிய பார்வையானது இருந்து வருகிறது. இந்த ஒரு செய்தியினை இந்த பத்து நோயாளிகளிடத்தில் நாம் காணமுடியும். இந்த பத்து நோயாளிகளும் நோயுற்று இருந்த போது ஒன்றாக இருந்தார்கள். ஒன்றாக ஆண்டவர் இயேசுவைத் தேடி வந்தார்கள். ஆனால் அவர்கள் நலம் பெற்ற போது மீண்டும் அவர்கள் தங்களுடைய இயல்புக்கு ஏற்றது போல அவரவர் பிரிந்து சென்றார்கள். ஒருவர் மட்டுமே இயேசுவிடம் திரும்பி வருகிறார். இந்த தன்மையை இயேசு சுட்டிக் காட்ட விரும்புகிறார். நாமும் பல நேரங்களில் தேவையில் இருக்கும் பொழுது, நமக்கு தேவை ஏற்படும்போது மட்டுமே இறைவனை தேடக்கூடியவர்களாக இருக்கிறோம். நமது தேவை நிறைவேறிய பிறகு இறைவனைக் கண்டுகொள்வதில்லை.
ஒரு இளைஞன் வேலை வேண்டும் எனத் தேடிக் கொண்டே இருக்கிறான். பலவிதமான முயற்சிகளில் ஈடுபடுகிறான். வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆலயங்களுக்குச் சென்று பலவிதமான நல்ல காரியங்களை செய்வதற்கு முன் வருகிறான். அதே இளைஞன், வேலை கிடைத்த பிறகு அவன் எப்படி இருக்கிறான் என்று யோசித்துப் பார்க்கும்போது அவனுடைய வாழ்க்கை மாறுபட்டு இருப்பதை உணரமுடிகிறது. வாழ்க்கையில் அனைத்து விதமான செல்வங்களும் ஒருவனுக்கு இருக்கும்போது அவன் கடவுளையோ, மற்றவர்களையோ நாடுவது இல்லை. எப்போது அவனிடம் ஒரு தொய்வு ஏற்படுகிறதோ, எப்போது அடுத்தவரைச் சார்ந்திருக்க வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறதோ, அப்போது அடுத்தவர் மீதான நன்மதிப்பையும் கடவுளைத் தேடக்கூடிய ஒரு செயலையும் அடுத்தவரை நாடி இருக்கக்கூடிய ஒரு செயலையும், நாம் இயல்பாக நமது வாழ்க்கை அனுபவத்திலிருந்தே உணர்ந்து கொள்ள முடியும்.
நலமானது நம்மிடம் இருக்கும் பொழுது எல்லாம் நாம் இறைவனை மறந்து போகிறோம். நம்மிடம் குறைவு ஏற்படும் போது மட்டுமே இறைவனைத் தேடுகிறோம். நமக்கு தேவை ஏற்படும்போது மட்டும் குரல் கொடுப்பவரல்ல இறைவன். இறைவன் நம்மை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் பார்த்துக் கொண்டிருக்கக்கூடியவர். கவனித்துக் கொள்ளக் கூடியவர். அந்த இறைவன், தேவைக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு கருவியாக மட்டுமே கடவுளை நாம் பயன்படுத்துவதை விரும்பாதவர். நாம் உள்ளார்ந்த அன்போடும் மனிதநேயத்தோடும் ஒருவர் மற்றவரை மதிக்கவும், ஒருவர் மற்றவரோடு எப்போதும் எல்லா நிலையிலும் இணைந்து இருக்கவும் அழைக்கப்படுகிறோம். இதையே இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு உணர்த்துகிறார். பத்து நோயாளிகளுள் ஒருவர் விரும்பி, திரும்பி வந்து ஆண்டவரிடம் தான் நலம் பெற்றதற்கு நன்றி கூறிச் சென்றார். நாம் நமது வாழ்க்கையில் பல நேரங்களில் துன்பத்தில் உழன்ற போது எத்தனையோ நபர்கள் நமக்கு கைகொடுத்திருப்பார்கள். எத்தனையோ நபர்கள் நமக்கு வார்த்தைகளால் ஆறுதல் தந்திருப்பார்கள். எத்தனையோ நபர்கள் நம் தோள் மீது கைபோட்டு நம்மை தட்டி கொடுத்து ஊக்கப்படுத்தி இருப்பார்கள். அவர்களை எல்லாம் நாம் நினைத்துப் பார்ப்போம். ஒருவேளை நாம் அவர்களுக்கு நன்றி சொன்னவர்களாகக்கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் செய்த உதவியை என்றும் மறத்தலாகாது. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு, என்ற திருவள்ளுவரின் வார்த்தைகளுக்கு ஏற்ப, இந்த நாளில் நமக்கு உதவி செய்த நல்ல நபர்களை நினைத்துப் பார்ப்போம். நமக்கு உதவி செய்த நபர்களுக்கு நாம் நன்றி கூற மறந்த தருணங்களை நினைத்துப் பார்ப்போம். இந்த நாளில் தமது வாழ்வை மாற்றிக் கொண்டு ஆண்டவர் இயேசுவிடம் திரும்பி வந்த அந்த ஒரு குணம்பெற்றவனைப் போல, நாமும் இந்த நாளில் நமக்கு உதவிய, நமக்கு நல்லது செய்த, நம்முடைய துன்பத்தில் பங்கெடுத்த, நல்லவர்களை எல்லாம் நினைத்துப் பார்க்கவும், அவர்களுக்காக ஜெபிக்கவும், அவர்களோடு உரையாடவும், உறவை வளர்த்துக் கொள்ளவும், இந்த நாளில் ஆண்டவர் இயேசுவோடு இணைவோம்! உறவை வளர்ப்போம்! மனிதத்தைக் காக்க முயலுவோம்!
நன்றி நிறைந்த உள்ளத்தோடு ஆண்டவரை அணுகிச் செல்வோம்!
பதிலளிநீக்கு