இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்று நாம் அனைவரும் திருவருகைக் காலத்தினை துவங்குகிறோம். இன்றைய நாளின் வாசகங்கள் அனைத்தும் நம்மை விழிப்பாய் இருப்பதற்கு அழைக்கின்றன. விழிப்பாய் இருங்கள் என்ற வார்த்தையை கேட்ட போது உடனடியாக மனதிற்குள் வந்த ஒரு செய்தி, " தனித்திரு! விழித்திரு!" என்ற அரசின் செய்திதான் மனதிற்குள் வந்தது. தனித்திரு! விழித்திரு! என அரசு என்று கூறிக் கொண்டிருக்கிறது. அத்தகையை கூற்றுக்கான காரணம் என்ன என்று ஆராயும் பொழுது, ஒரு கொடிய நோய்த் தொற்றானது, மக்களிடையே பரவி வருகிறது. இந்த நோய் தொற்றிலிருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டுமாயின் தனித்திருக்க வேண்டும். அதே சமயம் விழிப்போடு இருக்கவேண்டும் என்ற செய்தியினை அரசு அறிவுறுத்துகிறது. ஆனால் இத்தகைய சூழலில் கூட விழிப்போடு இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணி செய்யக்கூடிய மருத்துவர்களையும், துப்புரவு பணியாளர்கள் என பலரையும் நாம் இந்நேரத்தில் நன்றியோடு நினைவு கூற கடமைப்பட்டு இருக்கிறோம். ஆனால் இன்றைய நற்செய்தி வாசகங்கள், இன்றைய முதல் வாசகம், இவைகள் அனைத்தும் நமக்கு தரக்கூடிய செய்தி விழிப்பாயிருங்கள். இத்தகைய விழிப்பு என்பதை எவ்வாறு எடுத்துக் கொள்வது என சிந்திக்கும் பொழுது, முதல் வாசகம் தெளிவாக கூறுகிறது, ஆண்டவர் இயேசு கிறிஸ்து எதிர்பாராத நேரத்தில் நம்மை தேடி வருவார் என்ற செய்தியானது வழங்கப்படுகிறது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூட கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக்கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன் என புனித பவுல் கூறுகிறார். நாம் அனைவரும் திருவருகைக் காலத்தைத் துவங்குகிறோம். திருவருகைக் காலம் என்பது இயேசுவின் பிறப்பை நினைவூட்டுகிறது. இயேசுவின் பிறப்புக்கு நம்மை தயாரிக்க அழைக்கின்ற காலமாகும். முதல் வாசகம் ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகையை குறிப்பிடுகிறது. ஆனால் இன்று திரு அவையானது, இயேசுவின் வருகைக்கு நம்மை நாம் தயாரித்துக் கொள்ள அழைப்பு விடுக்கும் விதமாக கிறிஸ்து பிறப்பு செய்தியை கிறிஸ்து பிறப்பு நாளை கொண்டாடுவதற்கு நம்மை தகுதியான முறையில் தகுதிப்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கிறது. ஆனால் இன்றைய வாசகங்கள் கொடுக்கக்கூடிய விழிப்பாய் இருங்கள் என்ற செய்தியானது, நாம் அனைவரும் நம்முடைய செயல்களில் விழிப்பாய் இருப்பதற்கு அழைப்பு தரக்கூடிய வகையில் அமைகிறது. அதாவது இன்று நாம் வாழக்கூடிய இந்த பரபரப்பான உலகில் ஆண்டவரின் இரண்டாம் வருகையை ஆவலோடு எதிர்பார்க்க கூடிய நாம், இயேசுவின் பிறப்பு விழாவிற்கு நம்மையே நாம் தயாரித்துக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கக்கூடிய நாம் அனைவரும், நம்முடைய செயல்களில் எப்போதும் விழிப்பாய் இருக்க அழைக்கப்படுகிறோம். ஆம். நோய்த்தொற்று காரணமாக தனித்திரு! என அரசு கூறினாலும், தனித்து இருப்பது அவசியம்தான், அதேசமயம் விழிப்போடு இருந்து பாதிக்கப்பட்டவருக்கு நம்மாலான உதவிகளை செய்வதும் கட்டாயமாகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து எதிர்பாராத நேரத்தில் நம்மிடையே வருவார் என்ற செய்தி வழங்கப்படுகிறது. எப்போது வருவார் என தெரியாது. ஆனால் அவர் வரும்பொழுது அவர் நம்மை தேடி வரக் கூடியவராக இருக்கவேண்டும். இயேசுவின் பிறப்பு செய்தி நிகழ்ச்சி நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். பிறக்கப்போவது உலகின் மீட்பர். ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்ற செய்தி அங்கு இருப்பவர்கள் அனைவரும் அறிந்திருந்தால் இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்திருக்க மாட்டார் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே. நாம் எதிர்பாராத நேரத்தில் இறைவன் நம்மை தேடி வருகிறார். அவர் தேடி வரும் போது நம்முடன் நாம் அவரை ஏற்க கூடியவர்களாக இருக்க வேண்டும்.அதற்கு நம்முடைய செயல்கள் எப்போதும் தெளிவாக இருக்க வேண்டும். நமது செயல்கள் எப்போதும் நலமானதாகவும் நல்ல செயல்களாகவும் அமைந்திட வேண்டும். நமது செயல்கள் எப்போதுமே பிறருக்கு நலம் தரக்கூடிய செயல்களாக அமைய வேண்டும். அவ்வாறு இருக்கும்போது நாம் இயேசுவை விழிப்போடு இருந்து ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருப்போம்.
ஒரு ஊரிலே ஒரு பணக்காரன் இருந்தான். அவன் கனவில் இறைவன் தோன்றி, நாளை உன் வீட்டிற்கு நான் உணவருந்த வருகிறேன் எனக்கூறினார். ஆண்டவரின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்த அந்த பணக்காரன், ஆண்டவருக்காக பல வகையான உணவுகளை ஏற்பாடு செய்தான். பல வகையான ஆடைகளை எல்லாம் வாங்கி வைத்திருந்தான். பரிசு பொருட்களோடு ஆண்டவரின் வருகையை ஆவலோடு எதிர்நோக்கியிருந்தான். ஆனால் விடியற்காலை ஒரு பிச்சைக்காரன் வீட்டிற்கு வந்து உணவு கேட்டான். அந்த பிச்சைகாரனை அவர் அனுப்பி விட்டு, நான் ஆண்டவரின் வருகைக்காக காத்திருக்கிறேன். தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதே எனக் கூறி பிச்சைக்காரனை அனுப்பி வைத்தார். மீண்டும் சில மணி நேரம் கழித்து ஒரு ஏழை நபர் வந்தார். கிழிந்த உடையுடன் வந்து உடை கேட்டார். அவருக்கு உடை தரவும் இவன் விரும்பவில்லை. ஏனென்றால் அவன் ஆண்டவருக்காக உடைகளை வாங்கி இருந்தான். இன்னும் சிறிது நேரம் கழித்து ஒருவர் வந்தார். அவர், தன்னுடைய நண்பன் பசியால் வாடுகிறான். ஏதாவது உதவி செய்! என்று கேட்டார். ஆனால் அவனுக்கு உதவி செய்வதற்கும் இவன் இரங்கவில்லை. காரணம், வாங்கி வைத்த அனைத்தும் ஆண்டவருக்கானது. அவற்றை ஆண்டவருக்குத் தான் தருவேன் என்ற மனப்பான்மையோடு காத்திருந்தான். காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்தவன், கோபமடைந்த வண்ணம் படுக்கைக்கு சென்றான். உறங்கினான். மீண்டும் கனவு வந்தது. அந்தக் கனவில் ஆண்டவர் வந்தார். மூன்று முறை உன்னை தேடி வந்தேன். நீ என்னை கவனித்துக் கொள்ளவில்லை. உணவு கேட்டு வந்தேன் உன் வீட்டிற்கு. ஆனால் நீ எனக்கு உணவு தரவில்லை. சரி பரவாயில்லை. ஆடை கேட்டு செல்வோம் என ஆடை கேட்டு வந்தேன். அப்போது நீ எனக்கு ஆடை தரவில்லை. சரி பரவாயில்லை. எனக்குதான் தரவில்லை, மற்றவருக்காவது தருவாயா? என்ற எண்ணத்தோடு இன்னொருவருக்கு உதவி வேண்டுமென உன் வீட்டை நாடி வந்தேன். அப்போதும், நீ என்னை ஏற்கவில்லை. எனக்கு எதையும் நீ தரவில்லை என்று கூறினாராம். இந்த செல்வந்தனைப் போலத்தான் நாம் அனைவரும் நாம் இருக்கக் கூடிய இடங்களில், பல நேரங்களில், கடவுளை நாம் இப்படி இருப்பார், அப்படி இருப்பார் என்ற எண்ணத்தோடு நினைத்துக்கொண்டு, கண்ணுக்கு முன்பாக இருக்கக்கூடிய, தேவையில் இருக்கக்கூடியவர்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றோம். இத்தகைய நிலையிலிருந்து மாற்றம் பெறவும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளவும் அவருக்கு உண்மையான சீடர்களாக மாறிடவும், விழிப்போடு இருந்து எந்நேரத்திலும் இறைவனை ஏற்க கூடியவர்களாக நாம் உருவாகிட உருமாறிட விழிப்பாய் இருந்திட இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். எனவே நமது செயல்கள் மூலமாக விழிப்பாய் இருந்து இறைவனை கண்டு கொள்ள இந்நேரம் முதல் விழிப்படைய உங்களை அன்புடன் வேண்டுகிறேன். விழித்துக் கொண்டவர்களாக ஆண்டவர் இயேசுவின் வருகைக்கு நம்மை நாம் தயாரித்துக் கொள்ள இந்த திருவருகைக் காலத்தில் அறச்செயல்களை நமது செயல்களாக மாற்றிக் கொண்டு தொடர்ந்து பயணிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன். அனைவருக்கும் நன்றி!
ஆண்டவர் எப்போது வருவார் என தெரியாது. ஆனால் அவர் நம் ஒவ்வொருவரையும் தேடி வருகிறார். அவரை வரவேற்க நான் தயாராக இருக்க வேண்டும், என ஆண்டவரின் வருகைக்கு நம்மை தயாரிக்கும் நம் அன்பு சகோதரர் சகாய ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களும்! பாராட்டுக்களும்!
பதிலளிநீக்கு