புதன், 4 நவம்பர், 2020

தொலைந்ததை கண்டுபிடிப்போம்! (5.11.2020)

தொலைந்ததை கண்டுபிடிப்போம்! 

இறைவன் இயேசுவில் அன்பிற்குரியவர்களே! இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் இறைவனின் ஞான ஒளியைக் கண்டு பிடிக்க உங்களை அன்போடு அழைக்கின்றேன்.

ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கரங்களில் ஒரு சிறிய அளவிலான பையுடன் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது தந்தை மகனைப் பார்த்து இந்த பையை இங்கு இருப்பவைகளால் நிரப்பு என்று கூறினார். மகனும் ஆர்வத்துடன் மிகப்பெரிய கூழாங்கற்களை அந்த பையில் இட்ட பின் பை நிரம்பிவிட்டது என்று கூறினான். தந்தை மீண்டும் அவனிடம் அந்த பையில் என்னும் இடம் இருக்கிறது என்று கூறினார். உடனே மகன் அந்தக் கடற்கரையில் இருந்த சிறு சிறு கிளிஞ்சல்களை எடுத்து அந்த பையினுள் போட்டான். இப்போது பை நிரம்பிவிட்டது நிச்சயமாக என்றான். 
        மீண்டும் தந்தை அவனிடம் இந்தப் பையில் இன்னும் சற்று இடம் இருக்கிறது என்று கூறினார். அந்த இடத்தை நிரப்புவதற்கு உரிய பொருட்களும் இங்கு இருக்கிறது என்று கூறினார். 
          உடனே சற்று சிந்தித்து விட்டு சுற்றும் முற்றும் பார்த்த மகன், கடற்கரையில் இருந்த மணலை அள்ளி சிறிது சிறிதாக அந்த பையினுள் போட்டான். மேலும் தந்தை அவனிடம் இன்னும் ஒன்றை இதனுள் சேர்க்க இடம் இருக்கிறது என்று கூறினார். மீண்டும் சுற்றி பார்த்த மகன்கடல் கரையில் அவனது கால்களை வந்து சந்தித்து முத்தமிட்ட கடல் நீரை அள்ளி அந்த பையினுள் விட்டான். சற்று நேரத்தில் அந்த பையின் உள்ளாக நீரில் கலந்த மணலும் கிளிஞ்சல்களும் கற்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து மகிழ்ந்து உலவிக் கொண்டிருப்பதை கண்டு அவனும் உள்ளத்தில் மகிழ்ந்தான்!


இன்றைய முதல் வாசகத்தில் உடல் சார்ந்த காரியங்களில் பெருமை கொள்வதை விட ஆவிக்குரிய காரியங்களில் முன் நிற்பதே ஆசீர்வதிக்கப்படும் என்று புனித பவுல் கூறுகிறார். 
நமது உடல் வலிமையால் இறை அருளுக்கு தகுதியுடையவராய் நம்மை ஆக்கி கொள்வதைக் காட்டிலும் நமது ஆவிக்குரிய வல்லமையால் இறையருளுக்கு நம்மை தகுதிப் படுத்திக் கொள்வதே சிறப்பானது என்று கூறுகிறார்.
மனிதனாக இம்மண்ணில் பிறந்து இறுதியில் மண்ணுக்குள்ளே செல்லவிருக்கும் இந்த உடலால், உடல் வலிமையால், உடல் அழகினால், சிறப்பாக மற்றவரை கவரக்கூடிய பேச்சு திறமையால், நம்முடைய பாடும் திறமையால், ஆடும் திறமையால், கூர்மையான சிந்தனை திறனால், நம்மை விட சிறந்தவர் யாருமில்லை என்று நமக்கு நாமே பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால் இவை அனைத்தையும் கிறிஸ்துவின் பொருட்டு குப்பை என கருதுவதாக புனித பவுல் கூறுகிறார். 

ஆனால் நாம் பெருமையாக பிடித்துக் கொண்டிருக்கும் இத்தகைய காரியங்களால், உண்மையில் நாம் நமது நல்வாழ்வின் பொக்கிஷங்களை தொலைத்துக் கொண்டிருக்கிறோம். மேற்கூறியவற்றை நாம் உயர்த்தி பிடிக்கின்ற பொழுது பல நேரங்களில் நமது மன அமைதியை இழந்து விடுகின்றோம். உள்ளத்தின் மகிழ்வை இழந்து விடுகின்றோம். மனநிறைவை இழந்து விடுகின்றோம். 
                ஒரு மிகப்பெரிய தேரினை முன்னெடுத்துச் செல்ல மிகப்பெரிய தூக்கிகள் நமக்கு தேவைப்படுவதில்லை. மாறாக அதன் சக்கரங்களில் போடப்பட்டிருக்கும்  அச்சாணியை சுற்றி இருக்கும் மிகச்சிறிய அளவிலேயே இருக்கும் கிரீஸ் போன்ற பொருள்களே, சக்கரங்களின் சுழற்சியை, பயணத்தின் பாதையை எளிதாக்குகின்றன, வலுப்படுத்துகின்றன. அவை இல்லையென்றால் தேரின் சுற்றுப் பிரகாரம் அந்தத் தேரினை மட்டும் அல்லாது, அதனோடு இணைந்து பயணிக்கின்றவர்களையும் களைப்படையச் செய்து விடும்.
                மேற்கூறப்பட்ட உடல் சார்ந்த காரியங்கள் ஒரு தேரின் பாகங்களாக இருக்குமாயின், அதனை எச்சூழலிலும் பக்கத்திலும் இலகுவாக்கக் கூடியதாக, ஆவிக்குரிய செயல்பாடுகளில் நம்மை உட்படுத்தக் கூடியதாக நமது சின்ன சின்ன சந்தோஷங்களும் சின்ன சின்ன முயற்சிகளும் இருக்கின்றன.  
                    இன்றைய நாளில் நான் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அந்த பயணம் மிகவும் விரைவாக நடைபெற வேண்டும். என்னுடைய அடுத்த காரியத்திற்கு நான் விரைவாக செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த பொழுது அந்த  பயணம்  அதிகமாக நீண்டு விடுமோ என்ற எண்ணம் எனக்கு சில நிமிடங்களில் மனச்சோர்வை தந்தது. ஆனால் சில நொடிகள் கழித்து இந்த நீண்ட பயணத்தில் கூட நான் இறைவனை நினைப்பேன். ஜெபமாலை ஜெபிப்பேன், என்று சிந்தித்து செபிக்க தொடங்கிய பொழுது, சற்று நேரத்தில் அந்தப் பேருந்தின் பயணம் ஒரு கப்பலில் கடலில் மிதந்து செல்வது போல இருந்ததை உணர்ந்தேன். ஒவ்வொரு சிறிய மணியிலும் நான் கவனத்தோடு ஜெபிக்க ஆரம்பித்த பொழுது எனது பயணத்திலும் இறைவன் என்னை தமது கரங்களில் தாங்கி கொள்வதை உணர்ந்தேன். 
         இன்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் நாமும் கூட அந்த உலகத்தின் ஓட்டத்தோடு சென்று கொண்டிருக்கிறோம். இந்த நிமிடத்தின் நிறைவை, இந்த நிமிடத்தின் ஆற்றலை, நம்முடையதாக்க நாம் பல நேரங்களில் தவறி விடுகின்றோம். நமக்கு நிச்சயம் இல்லாத, நாம் எதிர்நோக்கி இருக்கின்ற காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம். ஆனால் இன்றைய பொழுதின் இனிமையை உணர தவறி விடுகின்றோம். 
                    இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் அந்த ஆயன் காணாமல் போன தன்னுடைய அந்த ஒரு சிறிய ஆட்டினை தேடி கண்டுபிடித்து மகிழ்ச்சியில் திளைப்பது போல,  நாணயத்தை தொலைத்த அந்தப் பெண் விளக்கை ஏற்றி வீடு முழுவதுமாக தேதி அந்த சிறிய நாணயத்தை கண்டுபிடிக்க பொழுது மகிழ்ச்சியில் தன்னை நிறைத்துக் கொள்வது போல, நம்மையும் நமது சின்னஞ்சிறு செயல்களின் மூலம் நிறைமகிழ்ச்சியை கண்டடைய இறைவன் இயேசு அழைப்பு விடுக்கின்றார். சிறு ஆட்டுக் குட்டியைப் போன்ற, சிறு நாணயத்தைப் போன்ற, இன்றைய ஒரு சிறு நிமிடத்தின் பொழுதில் நமது வாழ்வில் இறை அருளை உணர்வோம். நிறைமகிழ்வை உணர்வோம். 
                    ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு நிமிடத்திலும் இப்பிரபஞ்சம் முழுவதிலுமாக நம்மைச் சுற்றி நம்மோடு இணைந்து வாழ்கின்ற நமது சகோதர சகோதரிகளிடத்திலே நாம் இன்றைய நாளிலே அன்பின் வெளிப்பாடாக சிறு புன்னகையை மற்றவருக்கு பரிசாக வழங்குவோம். புத்துணர்வூட்டும் நமது இனிய வார்த்தைகளை, சிறிய நன்றிகளை மற்றவருக்கு உரித்தாக்கி அவற்றில் நமது மகிழ்வை கண்டடைவோம்.  
                அப்பொழுது சின்னஞ்சிறிய என் சகோதர சகோதரிகளுக்கு இவற்றை நீங்கள் செய்த போதெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்று கூறி, இறைவன் இயேசு நம்மோடு இணைந்து மகிழ்வார். 
                இன்றைய நாளில் நமது வாழ்வில் நாம் தொலைத்த சின்னஞ் சிறு புன்னகையை, அன்பான ஆறுதலான உற்சாகமூட்டும் வார்த்தைகளை சிறுசிறு நன்றிகளை, நமது கண்முன் தேவையில் இருக்கும் நமது சகோதர சகோதரிகளுக்காக நீள்கின்ற நமது சிறிய கைகளை, அனைவரின் உணர்வுகளையும், தேவைகளையும், மனித மாண்பினையும் உணர்ந்திடும் எளிய உள்ளத்தை இன்று நாம் மீட்டெடுப்போம் இயேசுவோடு இணைந்து நாமும் மகிழ்ந்திட!

1 கருத்து:

  1. சின்னஞ்சிறிய காரியங்களில் இறைவனுக்கு பிரமாணிக்கமாய் வாழ்ந்து அவரது பெருமகிழ்ச்சியை நம்முடையதாக்குவோம்! நாம் பெற்ற பெரு மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...