இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாளின் வாசகங்கள் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
நானறிந்த நிகழ்வு ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அந்தக் குடும்பத்தில் இப்படி ஒரு பழக்கம் இருந்தது. அந்தக் குடும்பத்தில் பிறக்கும் ஆண் குழந்தைக்கு 20 வயது வந்தவுடன் குழந்தையின் பெற்றோர் அவன் விரும்பிய கார் ஒன்றை அவனுக்கு பிறந்தநாள் பரிசாக வாங்கித் தர வேண்டும். சிறுவன் ராஜா அந்த குடும்பத்தில் பிறந்தவன். அவனுக்கு 20 ஆவது பிறந்த நாளைக் கொண்டாட இன்னும் ஒரு மாதம் இருந்தது. அப்போது ஒருநாள் அவனுடைய தந்தை அவனைஅழைத்துச் சென்று அவனுக்கு பிடித்தமான காரினை காண்பிக்கச் சொன்னார். அவன் காண்பித்த பின் அந்த நிறுவனத்தின் உரிமையாளரிடம் சென்று அந்த காரினை பற்றி பேசிவிட்டு சிலவற்றை குறித்து கொண்டும் வந்தார். ராஜாவின் இருபதாவது பிறந்த நாள் ஒரு மாதம் கழித்து வந்தது. அன்றைய நாளில் தந்தை அவனிடம் ஒரு பரிசுப் பொருள் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தார். அதை வாங்கிய ராஜாவுக்கு ஒரே மனக்குழப்பம். எப்போதும் காரினை பரிசாகத் தரும் பொழுது அந்த கார் சாவியை ஒரு சிறிய பெட்டியில் வைத்து அல்லவா தருவார்கள்! ஆனால் தந்தை தற்பொழுது இந்த கனமான பரிசுப் பொருளைக் கொடுத்து இருக்கிறாரே, என்று சிந்தித்தவாறே அந்தப் பரிசுப்பொருளை திறந்து பார்த்தான். அங்கே ஒரு திருவிவிலியம் இருந்தது. அதைக்கண்டு கோபம் அடைந்த ராஜா அதை அப்படியே வைத்துவிட்டுதன்னுடைய உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றான். அங்கேயே தங்கி வேலையும் பார்க்கத் துவங்கினான். சில காலங்களுக்குப் பின் தந்தை நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தார் என்று கேள்விப்பட்டான். மீண்டும் சில நாட்களில் ஒருநாள் காலையில் அவன் தந்தை இறந்து விட்டதாக செய்தி வந்தது. உடனே எழுந்து தந்தையின் முகத்தை காண்பதற்காக ஓடினான். தந்தையை பார்த்து கதறி அழுதான். அவன் சற்று நிமிர்ந்து பார்த்த பொழுது அவன் தந்தை அவனுக்கு பிறந்த நாள் பரிசாக கொடுத்த அந்த பரிசுப் பொருள் அங்கு இருந்ததை பார்த்தான். உடனே சென்று அந்த பரிசுப் பொருளை கையில் எடுத்துப் பார்த்தான். அந்த விவிலியத்தின் உள்ளே அவன் தந்தை அவனுக்கு அன்போடு எழுதிய ஒரு வாழ்த்துக்கடிதத்தையும் அங்கே விவிலியத்தோடு வைக்கப்பட்டிருந்த கார் சாவியையும் கண்டான். தந்தையின் அன்பை எத்தனை நாள் புரிந்து கொள்ளாமல் அவரை நம்பாமல் எனது வாழ்க்கையில் எங்கோ சென்று விட்டேனே என்று கதறி அழுதான்.
அன்பிற்குரியவர்களே இன்றைய முதல் வாசகத்தில் புனித யோவான் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு செய்த உதவியின் மூலம் நாம் இறைவனின் நம்பிக்கைக்குரியவர்களாக உருவாகிறோம் என்று கூறுகிறார்.
இன்றைய நற்செய்தி வாசகத்திலும் இயேசு, நேர்மையற்ற அந்த நடுவரை பற்றி குறிப்பிடும் பொழுது, அவரிடத்தில் நீதிக்காக வந்து நின்ற அந்த ஏழைக் கைம்பெண்ணுக்கு அவளது தொடர்ந்த வேண்டுதலால் , அவளது இடைவிடாத கெஞ்சும் வார்த்தைகளைக் கேட்ட அந்த நடுவர் அவளுக்கு நீதி வழங்க முன் வருகின்றார்.
அங்க ஒரு கைம்பெண் அவருக்கு அறிமுகமில்லாத அன்னிய நபராக இருந்தாலும் அந்தப் பெண்ணின் தொடர் முயற்சியினால், அந்தப் பெண்ணுக்கு நீதி வழங்க முன்வருகின்றார்.
இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்திலும் பல்வேறு தேவைகள் இருக்கும் நபர்களை நாம் சந்திக்கின்றோம். நமக்குத் தெரிந்தவர்களாக இருந்தாலும், அல்லது தெரியாதவர்களாக இருந்தாலும், பிறரின் தேவை உண்மை என அறியும் போது, நாம் அவர்களுக்கு உதவி செய்வதால் நாம் இறைவனின் நம்பிக்கைக்குரிய பிள்ளைகளாகிறோம் என்பதை உணர்ந்து கொள்வோம்.
நாம் சந்திக்கும் தேவையில் இருக்கும் நபர்களுக்கு நம்மாலான உதவிகள் செய்து ஆண்டவருக்கு சேவைகள் புரிவோம். ஆண்டவரின் நம்பிக்கைக்குரிய பிள்ளைகளாக, நாமும் நம்பிக்கையுடன் வாழ்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக