செவ்வாய், 10 நவம்பர், 2020

போகிற போக்கில்....

வெகு நாட்களுக்கு பிறகு பேருந்தில் ஒரு பயணத்தை மேற்கொண்டேன் ஒரு திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக ...

பேருந்து பயணத்தின் போது சந்தித்த ஒரு நபரைப் பற்றியும் அவரோடு சிலவற்றை உரையாடினேன் அவற்றைப் பற்றியும் உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்

திண்டுக்கலில் இருந்து மதுரை  நோக்கி பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். எனது அருகில் வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி அணிந்தவராய் நெற்றியில் திருநீறு இட்ட ஒரு வயதான தாத்தா என் அருகே வந்து அமர்ந்தார். மதுரைக்கு செல்லும் வழியில் இடையில் முருகத்தூரான்பட்டி என்ற ஊரில்  நான் இறங்க வேண்டி இருந்தது. எனவே அந்த தாத்தாவிடம் அந்த ஊருக்கு உங்களுக்கு வழி தெரியுமா? என்று கேட்டேன். அவர் உடனே என்னிடம் பேச ஆரம்பித்தார். அவர் பேச தொடங்கும்போது முதல் வார்த்தை என்னிடம் கூறியது. "இப்போ உள்ள பிள்ளைங்க எல்லாருமே பஸ்ஸில் வந்து உட்கார்ந்த உடனே கையில இருக்கக்கூடிய அலைபேசி எடுத்துக்கொண்டு அதோடு தான் பேசிக் கொண்டே செல்கிறார்கள் அருகில் உள்ளவர்களோடு பேசுவதில்லை நீயாவது என்னிடம் பேசுகிறாயே" என்று கூறிவிட்டு நீ செல்லக்கூடிய இடத்திற்கான வழி எனக்கு தெரியும் வரும்போது நான் உனக்கு அதை காட்டுகிறேன் என கூறினார்.
பிறகு தன்னுடைய கடந்த கால நினைவுகள் அவர்களது காலம் எப்படி இருந்தது? என்பதை மிகவும் அற்புதமாகவும் அழகாகவும் கூறிக்கொண்டே வந்தார். பேசிக்கொண்டே வந்தோம் விரைவில் நான் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி விட்டேன். அப்போது அந்த தாத்தாவுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்
மேலே உள்ள படத்தில் நீங்கள் பார்க்கக் கூடிய அந்த தாத்தா தான் அவர். தாத்தாவிடம் சில மணி நேரங்கள் தான் பேசி இருப்பேன் ஆனால் அவர் சொன்னதில் நூற்றுக்கணக்கான உண்மைகள் இருந்தது. இன்றைய இளம் தலைமுறையினர் எப்போதும் அலைபேசி வாயிலாகவே உரையாடிக் கொண்டு இருக்கிறார்கள். அருகில் உள்ளவர்களோடு அல்ல என்று தாத்தா கூறினார். அந்த வார்த்தைகளில் அதிக அர்த்தம் இருப்பதாக நான் உணர்ந்தேன். இன்று அருகாமையிலுள்ள உறவுகளை விட்டு விட்டு எங்கெங்கோ இருக்கக்கூடிய உறவுகளோடு பல மணி நேரம் அலைபேசியில் பேசுவதில் தான் நாம் மகிழ்ச்சி கொள்பவர்களாக இருக்கிறோம். ஆனால் அருகே இருப்பவர்களும் நம் அன்புக்காக ஏங்க கூடியவர்கள் நம்மோடு உரையாட, உறவாட காத்திருப்பவர்கள் என்ற பாடத்தை போகிற போக்கில் சொல்லிவிட்டு போனார் அந்த தாத்தா. 
அன்று  ஒரு ஊருக்குள் ஒரு வீட்டில் ஒரு போன் இருக்கும் அந்த அலைபேசி ஒலித்தவுடன் அனைவரும் அங்கு ஓடி வருவார்கள். யாருக்கோ போன் வந்திருக்கிறதாம் என்று கூறி அனைவரும் அடுத்தவர்களோடு அவர்கள் பேசுவதைக் கேட்டு மகிழ கூடியவர்களாக இருந்தோம்.அன்று தொலைபேசி ஒலித்தால் அனைவரும் ஒன்றிணைந்தார்கள் ஆனால் இன்று தொலைபேசி ஒழித்தால் வீட்டுக்குள் இருப்பவர்கள் அலைபேசியை எடுத்து கொண்டு தனியே செல்ல விரும்புகிறோம். அன்று வீட்டுக்கு ஒரு தொலைபேசி இருந்தது, இன்று வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு தொலைபேசி என்ற நிலை உருவாகியுள்ளது. தொடர்பு கொள்ள தொலைபேசி அவசியம் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் நாம் தொடர்பில் இருக்க வேண்டியது தொலைபேசியில் உள்ளவர்களோடு மட்டுமல்ல மாறாக நம் அருகில் உள்ளவர்களோடும் என்பதை மறந்திட வேண்டாம். நம் அருகில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க முயலுவோம் என்ற பாடத்தை போகிறபோக்கில் எனக்குச் சொல்லித் தந்துவிட்டு சென்றார் அந்த தாத்தா.
தாத்தாவின் வார்த்தைகள் நல்லதாக இருந்தது அதை வாழ்வாக்க வேண்டுமென எனக்குள் எண்ணம் எழுந்தது. இது உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்குமாயின் நீங்களும் பின்பற்றுங்கள்.

  நன்றி

வாழ்க்கைப் பாடம் கற்பித்த தாத்தாவுக்கு நன்றி ...

5 கருத்துகள்:

  1. தங்களின் கருத்துக்கள் இன்று அனைவரையும் ஒரு நிமிடம் நின்று யோசிக்க வைக்கும் !வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வைக்கும்! அலைபேசியோடு அலைந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு, தங்கள் அருகில் இருக்கும் உறவுகளை கண்திறந்து பார்க்க செய்த அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்! தொடரட்டும் உங்கள் பணி சிறப்பாக!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...