உங்கள் பதில் என்ன?
தொலைக்காட்சி ஒன்றில் பார்த்த ஒரு விளம்பரம். சிறுமி ஒருத்தி கடற்கரையில் மணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருக்கிறாள். சிறுவன் ஒருவன் அங்கே வந்து அந்த மணல் வீட்டை காலால் எட்டி உதைத்து சிதைக்கிறான். சிறுமி அழுகிறாள். அடுத்த காட்சி. காரில் ஒரு ஜோடி பயணம் செய்கிறது. மனைவி கணவனின் தோளில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள். ஓர் இடம் வந்ததும் கார் நிற்கிறது. அவன் அவளை எழுப்பி கீழே இறங்க சொல்கிறான். அவள் இறங்கி வருகிறாள். அவன் அவளை கண்ணை மூடச் சொல்கிறான். அவள் கண்ணை மூடினாள். அவன் அவளுடைய கையில் ஒரு சாவியை கொடுக்கிறான். அவன் கண்ணைத் திறக்கச் சொல்கிறான். அவள் தன் கையில் இருந்த சாவியை பார்த்து வியப்போடு அவனை நோக்கி புருவம் உயர்த்துகிறாள். அவன் கண்ணாலயே எதிரில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் அழகான வீட்டைக் காட்டுகிறான். அவள் அளவிடமுடியாத மகிழ்ச்சி அடைகிறாள். தொலைக்காட்சியில் நான் மிகவும் இரசித்த விளம்பரங்களில் இதுவும் ஒன்று. கடற்கரையில் மணலில் வீடு கட்டிய சிறுமி தான் அந்த மனைவி. அந்த மணல் வீட்டை உதைத்த சிதைத்தவன் தான் அந்த கணவன். விளம்பரத்தில் இது நுட்பமாக உணர்த்தப்படுகிறது. விளையாட்டுப் பருவத்தில் சண்டை போட்டுக் கொண்டவர்கள் தான் இப்போது காதல் தம்பதிகளாக ஆகியிருக்கிறார்கள். சிறுவனாக இருந்தபோது அவள் மணல் வீட்டை சிதைத்தவன்தான் இப்போது அவளுக்கு ஒரு புதிய வீட்டை கட்டி பரிசாக கொடுக்கிறான். இந்த விளம்பரத்தை பார்த்த போது எனக்குள் எழுந்த உணர்வுகள் தான் இன்றைய நற்செய்தி வாசகத்தை வாசிக்கும்போதும் எழுந்தது.
சிறுவயதில் அந்த சிறுமியின் மணல் வீட்டை எட்டி உதைத்து, மணல் வீட்டை கலைத்தவன் இப்போது அவளுக்கு ஒரு வீட்டைக் கட்டிக் கொடுக்கிறான். இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட விருந்துக்கு அரசர் ஒருவர் அழைக்கிறார். ஆனால் அழைக்கப்பட்டவர்கள் காரணம் சொல்கிறார்கள். ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி விட்டு இடத்தை விட்டு அகன்று கொள்கிறார்கள். ஆனால் இறுதியில் அரசர் சற்று ஆழமாக யோசித்து, வீதிக்கு சென்று காண்போர் அனைவரையும் அழைத்து வந்து வீட்டை நிரப்புங்கள். அழைக்கப்பட்டவர்கள் எல்லாம் இந்த விருந்தில் பங்கேற்க போவதில்லை என்று கூறுகிறார். அப்போது பணியாளர்கள் சென்று வீதிகளில் பார்த்தவர்களை அழைத்து வந்து அந்த வீட்டை நிரப்புவதாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம். அழைக்கப்பட்டவர்கள் பலர். அழைக்கப்பட்டவர்கள் எல்லாரும் காரணம் சொல்கிறார்கள். எல்லாரும் நமக்கு மிகவும் தெரிந்தவர்கள் என்பதனால்தான் பல நேரங்களில் நாம் பலரை உதாசீனப் படுத்திவிட்டு செல்லக்கூடியவர்களாக இருக்கிறோம். ஆனால் அவர்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பது அவர்களின் அழைப்பினை பொறுத்து அமைகிறது. நம் மீது கொண்ட அதீத அன்பின் காரணமாக நாம் ஒவ்வொருவருமே அழைக்கப்படுகிறோம். ஆனால் அதை உணர்ந்து கொள்ளாமல்
சமாளித்துக் கொள்ளலாம் சாக்குப்போக்குச் சொல்லி கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு கடந்து செல்லக்கூடிய மனிதர்கள் இன்று இந்த உலகத்தில் ஏராளம். எப்படி அந்த சிறுமியின் மணல் வீட்டை அந்த சிறுவனிடம் காண்பித்தபோது சிறுவன் எட்டி உதைத்தான் என்று நான் கூறினேனோ அது போலத்தான் பல நேரங்களில் நாம் மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அழைக்கும் பொழுது அவர்கள் அதை உதாசீனப்படுத்துகிறார்கள். உதாசீனப்படுத்தும் பொழுது அங்கு உறவு சிக்கலானது ஏற்படுகிறது. உறவு முறிகிறது. கோபம் அதிகமாகிறது. எனவே உறவில் பெரிய சிக்கல் எழுகிறது. இந்த சிக்கல்களை எல்லாம் சரி செய்து கொண்டு வாழ்க்கையில் நகர்ந்து செல்ல நாம் அழைக்கப்படுகிறோம். பல நேரங்களில் நாம் மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க அழைக்கிறோம். ஆனால் அவர்கள் அந்த அழைப்பை உதாசீனப்படுத்துகிறார்கள். அவர்கள் நமது விருப்பத்திற்கு செவி கொடுக்கவில்லை என்பதால் நாம் மனமுடைந்து போகத் தேவையில்லை. இந்த சிக்கல்களை எல்லாம் சரி செய்து கொண்டு வாழ்க்கையில் நமக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய, மற்றவர்களை அழைத்துக்கொண்டு இன்புற்று வாழ அழைக்கப்படுகிறோம்.
இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது யூதர்கள் சட்டத்தின் பெயரால் மக்களை அடிமைப்படுத்திய போது அது தவறு என்பதை சுட்டிக் காட்டிக் கொண்டே சென்றார். எங்கும் இயேசு பயந்து நின்றுவிடவில்லை. தொடர்ந்து தன் பயணத்தைத் தொடர்ந்தார். அந்த ஒரு தொடர் தேடுதல் அந்த ஒரு தொடர் முயற்சி இன்றைய நாளில் இருக்க வேண்டும் இதையே இன்றைய வாசகங்கள் மூலம் நாம் அனைவரும் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். முதல் வாசகத்தில் கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும் என பவுல் கூறுகிறார். இயேசு கொண்டிருந்த மனநிலையை நாமும் கொண்டிருப்போம்.
செல்லும் இடங்களுக்கெல்லாம் நன்மையே செய்வோம்.
நாம் செய்யக்கூடிய செயல்களை ஏற்றுக் கொள்பவர்கள் நம்மோடு வரட்டும். நம்முடைய அழைப்பை ஏற்று கொண்டவர்கள் நம்மை பின்பற்றட்டும்.
மற்றவர்களை மாற்றுகிறேன் என்று நாம் ஒரே இடத்தில் நின்று நம்முடைய செயல்பாடுகளை மாற்றிக் கொண்டு நாம் காயப்பட வேண்டிய அவசியமில்லை.
விருந்துக்கு அரசன் அழைத்தபோது காரணம் சொன்னார்கள்.காரணம் சொன்னவர்கள் எல்லாம் வந்தே தீரவேண்டும் என்று அந்த அரசன் நின்று விடவில்லை. அதைக் கடந்து அடுத்த நிலைக்குச் சென்றார்.
வீதியில் வருவோர் போவோரையும் அழைத்து வந்து ஏற்பாடு செய்கின்றார்.
இயேசுவும் இம்மண்ணில் வாழ்ந்த போது, நல்ல செயல்களைச் செய்துகொண்டே சென்றார் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும்.
தன்னைக் கொல்ல ஒரு கூட்டம் தேடிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்திருந்தும், தன் பணியை தொடர்ந்தார்.
இன்றைய நாளில் நாமும் பணிசெய்ய அழைக்கப்படுகிறோம். எந்த ஒரு சின்ன சிக்கலையும் கண்டு, எந்த ஒரு துன்பத்தையும் கண்டு, மனம் தளர்ந்து ஒரே இடத்தில் நின்று விடாமல், தொடர்ந்து பயணம் செய்ய இன்றைய நாளில் உங்களையும் என்னையும் இறைவன் அழைக்கின்றார். இன்று நம்மை அழைக்க கூடிய அந்த இறைவனின் குரலுக்கு
செவி கொடுத்து வரக் கூடியவர்களாக நாம் இருக்கப் போகிறோமா? அல்லது நாமும் காரணம் சொல்லி விட்டு ஒதுங்கி செல்லப் போகிறோமா?
கேள்வியை உங்கள் முன் எழுப்புகிறேன். நீங்களே விடையை உங்கள் உள்ளத்தில் எழுதிக் கொள்ளுங்கள் , இதயத்தை ஆண்டவர் முன் திறந்தவர்களாக!!!!.
🙏👍👏
பதிலளிநீக்குSuper,
பதிலளிநீக்கு