விழிப்பாய் இருந்து ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளுங்கள்!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாளின் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகம் ஞானத்தைப் பற்றி நமக்கு எடுத்துரைக்கிறது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் இறந்தோரைப் பற்றிய நமது எண்ணங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதைப் பற்றி சிந்திக்க அழைப்பு தருகின்றன. மேலும், இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார். அவரை போல இருந்த ஒவ்வொருவரும் உயிர்த்தெழுவோம் என்ற செய்தியை ஆழமாக என்ற இரண்டாம் வாசகம் நம்மிடையே விதைக்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் பத்து தோழியர் உவமையானது குறிப்பிடப்படுகிறது. முன்மதியோடு செயல்படக்கூடிய தோழியர்கள் மணமகனை கண்டு கொண்டார்கள் என்ற செய்தியானது தரப்படுகிறது. இந்த வாசகங்கள் அடிப்படையில் இன்றைய நாளில் நாம் நமது வாழ்வை சீர் தூக்கிப் பார்க்க அழைக்கப்படுகிறோம்.
நவம்பர் மாதம் என்றாலே இறந்தவர்களை நினைவு கூறுவதற்காக என திருஅவை நமக்கு வலியுறுத்துகிறது. இறந்தவர்களைப் பற்றிய நினைவு நமக்கு பலவிதமானவற்றை உருவாக்குகிறது. நமது குடும்பத்தில் நம்மோடு இருந்து நம்மோடு ஒருவராக இருந்தவர்கள் இன்று நம்மோடு இல்லை என்ற நிலை. அவர்கள் இழப்பை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியாது. இன்னமும் இறந்தவர்களை நினைத்து வரக்கூடிய நிலை தொடர்கிறது. இது இன்று மட்டும் அல்ல என்றும் தொடரக் கூடிய ஒன்றுதான். இந்த உலகத்திலேயே மிகவும் பழைமையான ஒன்று இருக்கிறது என்றால் அது பிறப்பும் இறப்பும் தான். இதுதான் இந்த உலகத்திற்கு பழமையானதும் புதுமையானதும். இது ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கொண்டே இருக்கக்கூடிய ஒன்று. மனிதனாக பிறந்த ஒருவன் கண்டிப்பாக ஒருநாள் இறந்தே தீரவேண்டும் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. ஆனால் இறப்பை நோக்கி பயணிக்க கூடிய நாம் மற்றவர்களின் இழப்பை பார்க்க முடியுமே தவிர இறப்பை உணர முடியாது. இறப்பை நாம் அனுபவித்து இப்படித்தான் இருக்கும் என கூற இயலாது. மாறாக நம்மால் அடுத்தவரின் இறப்பை பார்க்க முடியும். அடுத்தவரின் இறப்பு நமக்கு பாடத்தைக் கற்பிக்கிறது. அதுவே ஞானம் ஆகிறது. ஒரு இழப்பு நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுத்தருகிறது. இதுவரை இம்மண்ணில் வாழ்ந்த மனிதன் எதுவுமில்லாமல் இவ்வுலகை விட்டு பிரிந்து செல்கிறான். பிறந்தபோது எப்படி வந்தானோ, அதேபோல் இறந்தபோதும் அவன் செல்கிறான். இந்த பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் மனிதன் நிலையானது, முக்கியமானது, தனக்குரியது, தனக்கு மட்டுமே, தன்னை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டியது, எனப் பலவற்றை எண்ணிக்கொண்டு பலவற்றின் பின்னால் ஓடுகிறான், தேடுகிறான். பலவற்றை நாடித்திரிகிறான். ஆனால் அப்படி நாடித் திரிவதனால் எந்தவித பயனும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள நாம் ஞானம் பெற்றவர்களாக இருக்க இன்றைய முதல் வாசகம் நமக்கு அழைப்பு வருகிறது.
இறப்பைப் பற்றி சிந்திக்கும் பொழுது ஞானம் என்பது உதயமாகும் என்பார்கள். இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு கூறக்கூடிய கருத்தும் அதுதான். நாம் முன்மதியுள்ளவர்களாக செயல்பட வேண்டும். முன்மதியோடு செயல்பட்ட தோழியர்கள் இயேசுவை கண்டு கொண்டார்கள், மணமகனை கண்டுகொண்டார்கள். நாம் நமது வாழ்க்கையில் முன்மதியோடு செல்கின்றோமா? என்ற கேள்வியை இன்று நமக்குள் எழுப்பி பார்ப்போம். முன்மதியோடு செல்லுதல் என்றால் என்ன? என்ற கேள்வி உங்களுக்குள் எழுமாயின், இந்த உலகத்தில் இருக்கக்கூடிய நாம் ஒரு நாள் இந்த உலகத்தை விட்டுச் செல்லக் கூடிய சூழல் கண்டிப்பாக உருவாகும். அது எப்போது என்பது யாருக்கும் தெரியாது. எந்தவிதமான நல்ல செயல்கள் செய்வதாலோ, தர்ம காரியங்கள் செய்வதாலோ, உதவிகள் செய்வதாலோ, நாம் இறப்பில் இருந்து தப்பித்து விடலாம் என்று எண்ணுவோமாயின், நம்மை விட அறிவிலிகள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். நாம் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் கண்டிப்பாக ஒருநாள் இறப்பை சந்தித்தே தீர வேண்டும். இறப்பு என்பது இவ்வுலக வாழ்வை, நிறைவு செய்வதாகும். இவ்வுலக வாழ்வை நிறைவு செய்தே ஆகவேண்டும். இவ்வுலக வாழ்வை நிறைவு செய்யும்போது நாம் விண்ணில் பிறக்கிறோம். விண்ணில் நாம் பிறக்கும் பொழுது கடவுளுக்கு உகந்தவர்களாக கடவுள் விரும்பக்கூடிய ஒரு நல்ல மனிதனாக நாம் இந்த மண்ணில் வாழ்ந்தோமா? நம்மில் பலர், நம்மால் பலர், இவ்வுலகில் வாழ்ந்தார்களா? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடையாக நமது விண்ணக வாழ்வானது அமைகிறது. விண்ணக வாழ்வை அடைய வேண்டும் என்ற முன்மதியோடு இந்த மண்ணக வாழ்வில் நம்மாலான சிறு சிறு நல்ல செயல்களை செய்து ஒருவர் மற்றவரை ஊக்கப்படுத்தவும், ஒருவர் மற்றவரை தேற்றிக்கொள்ளவும், இன்றைய நாளில் நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். எனவே விழிப்போடு இருந்து நாம் ஒருவர் மற்றவரைத் தேற்றிக்கொண்டு இவ்வுலக வாழ்க்கையில் இன்பத்தோடு நாம் வாழவும், நம்மால் மற்றவர்கள் இன்புற்று வாழவும், இவ்வுலகை அழகானதாகவும், மகிழ்வான உலகமாகவும் மாற்றிட நாம் உள்ளத்தில் உறுதி ஏற்றவர்களாய் இயேசுவின் பின்னால் பயணம் செய்வோம்.
விழிப்போடு இருப்போம்.. 🙏
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு