செவ்வாய், 3 நவம்பர், 2020

என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்!(4.11.2020)

என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்!

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாளில் நற்செய்தி வாசகங்கள் அடிப்படையில் எனது சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 ஒரு சீடன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து இன்றைய நற்செய்தி வாசகங்கள் விளக்குகின்றன. ஒரு புத்த மடம் அந்த புத்த மடத்தில் இருந்த புத்த துறவிகளுக்குள் எப்போதுமே சண்டை இருந்துகொண்டே இருந்தது. ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டே இருந்தார்கள். அந்த புத்த மடத்தில் அதிபதியாக இருந்த தலைவருக்கு எப்படி இவர்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது என்று தெரியவில்லை. நெடுநேரம் யோசித்து பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை. எனவே தன்னை விட வயதில் மூத்த ஒரு புத்த குருவை சந்தித்து அவரிடம் ஆலோசனை பெறலாம் என்று மூத்த குருவை சந்தித்தார். அந்த புத்த குரு கூறினார்,  உங்களுடைய புத்த மடத்தில் நீங்கள் இருக்கக்கூடிய அந்த இடத்திற்குள் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். அவரை நீங்கள் கண்டுகொள்ளாமல் உங்களுக்குள் சண்டை இட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். என்று கூறி அனுப்பி வைத்தார். உடனே அந்த துறவியானவர்,  தன்னுடைய மடத்திற்கு வந்து அங்கிருந்த அனைத்து துறவிகளையும் அழைத்து  அவர்களிடத்தில் கூறினார், நம் மூத்த குருவின் ஆலோசனைக் கேட்க சென்றேன்.  மூத்த குரு கூறினார்,  புத்தரே நம்முடைய இல்லத்திற்கு வந்திருக்கிறார். அந்த புத்தர் யார்? என்று தெரியவில்லை. உங்களுள் ஒருவர் தான் அவர். அவர் யார்? என தெரியவில்லை என்று கூறினாராம். உடனே அங்கிருந்தவர்கள் எல்லாம், இவர் புத்தராக இருப்பாரோ அவர் புத்தராக இருப்பாரோ என்று கூறி தங்களுக்குள்ளாக அன்பையும் ஒற்றுமையையும் தாராள உள்ளத்தையும் பகிர்ந்து கொள்ளத் துவங்கினார்கள். அன்று முதல் அவர்களிடையே சண்டையே நடக்கவில்லை. இது ஒரு கற்பனைக் கதையாக, சித்தரிக்கப்பட்ட ஒரு கதையாக இருக்கலாம். ஆனால் உண்மையில் ஒரு சீடன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்? என்பதனை இன்றைய வாசகங்கள் வழியாக இயேசு உணர்த்துகிறார்.  

"தன்னுடைய சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்தொடர வேண்டாம் " என்கிறார் இயேசு. உங்களுடைய சுமைகளை சுமந்து கொண்டு என்னை பின்தொடருங்கள் என்கிறார். இந்த உலகில் மனிதனாக பிறந்து இருக்கக்கூடிய நம் ஒவ்வொருவருக்கும் இந்த உலகத்தில் பலவிதமான பொறுப்புக்களும் கடமைகளும் இருக்கிறது. பொறுப்புகளையும் கடமைகளையும், இது என்னுடைய பொறுப்பு என்னுடைய கடமை என உணர்ந்து செய்பவர்களை விட அவற்றை சுமைகளாக  பார்த்துக்கொண்டே நடக்கக் கூடியவர்கள் ஏராளம். சுமைகளாக கருதினாலும் அவற்றை சுமக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அந்த சுமைகளோடு இயேசுவைப் பின்தொடர்ந்து வர நம்மை அழைக்கிறார். கையில் இருப்பது சிறிதளவு பணம் தான். அந்த பணத்தை பகிர்ந்து கொடுக்கச் சொல்கிறார் இயேசு. தன்னுடைய தேவைக்கு போக மீதம் இருப்பதை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளலாமே!  இதுதான் சுமைகளை சுமந்து கொண்டே அவரைப் பின்தொடர்வது என்று நாம் பொருள் கொள்ளலாம்.  


இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் நாம்எப்படி வாழவேண்டும் என்பதை இன்றைய வாசகங்கள் வழியாக இயேசு சுட்டிக்காட்டுகிறார். உங்களுடைய மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்கிறார். நமது துன்பங்கள் துயரங்களோடு நம் ஆண்டவர் இயேசுவை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது ஆண்டவர் இயேசு நம்மை எப்போதும் அரவணைக்க கூடியவராக இருக்கிறார்.   நாம் இறைவனை நோக்கி ஒரு அடி எடுத்துவைத்தால் மீதமுள்ள 99 அடியை அவர் எடுத்து வைப்பார் என்று கூறுவார்கள்.  நமது சுமைகளோடு நாம் அடுத்தவர் சுமைகளை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.  இதுவே உண்மையான சீடத்துவம். இதையே இன்றைய வாசகங்கள் வலியுறுத்துகின்றன. உங்களிடம் இருப்பதை எல்லாம் அடுத்தவரோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அடுத்தவரின் துயரத்தை துடைக்க முயற்சி செய்யுங்கள். எதையும் முறையாக திட்டமிடுங்கள். திட்டமிட்டு செயல் படுத்துங்கள். இவ்வாறெல்லாம் செயல்படுவீர்கள் ஆனால் நீங்கள் உண்மையாகவே இயேசுவின் சீடர்களாக இருக்க முடியும். இந்தச் செய்தியைத் தான் இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்குத் தருகின்றார். நம்மிடம் இருப்பதை எல்லாம் மற்றவரோடு பகிர்ந்து நான் என்று இல்லாமல் நாம் என்று இணைந்து செயல்படும்போது உண்டாகக் கூடிய அந்த மகிழ்ச்சியை, என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என ஆண்டவர் நம்மை அழைக்கிறார். அவரோடு நமது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள, உண்மை சீடர்களாக நாம் அவரோடு மகிழ்வில் பங்கு பெற, இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்றுக்கொண்டு நமது வாழ்க்கையை நமது செயல்களால் மாற்றிட முயலுவோம்.

1 கருத்து:

  1. மற்றவரில் ஆண்டவனைக் கண்டு மகிழ்வோம்! அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது வாழ்த்துகளும்! பாராட்டுகளும்! நன்றிகளும்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...