இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
சிறுமை கண்டு பொங்குவாய்!
என்ற பாரதியாரின் வாய்மொழிக்கு ஏற்ப இன்றைய நாளில் இன்றைய வாசகங்கள் நம்மை சுய ஆய்வு செய்து பார்க்க அழைக்கின்றன.
இன்றைய முதல் வாசகம் திருவெளிப்பாடு நூலிலிருந்து எடுக்ப்பட்டதாகும். இதில் ஏழு முத்திரைகள் பொறிக்கப்பெற்று மூடியிருந்த ஏட்டை எடுத்துப் பிரித்து, படிக்க தகுதியானவர்கள் யாரும் இல்லை என்ற செய்தியானது திருவெளிப்பாட்டு நூலிலிருந்து வழங்கப்படுகிறது. சுருளேட்டைப் பிரித்துப் படிக்க தகுதி பெற்றவர் எவரையும் காணவில்லை என யோவான் தேம்பி அழுததாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் இறுதியில் ஆட்டுக்குட்டியாகிய மெசியா அந்த சுருளேட்டை எடுத்துப் படித்தார், என்றவாறு இன்றைய முதல் வாசகம் அமைகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட எருசலேம் ஆலயத்தை இறைவன் சாடுகிறார். உன்னை தேடி வந்த காலத்தை நீ அதை அறிந்து கொள்ளவில்லை என எருசலேம் ஆலயத்தை சாடுவது போன்ற இறைவார்த்தைப் பகுதியானது இன்றைய நாளில் நம்முடைய சிந்தனைக்கு தரப்பட்டிருக்கிறது.
இன்றைய வாசகங்கள் மையப்படுத்த கூடிய செய்தி பாரதியாரின் வார்த்தைகளான சிறுமையை கண்டு பொங்கு என்பதாக உணர்கிறேன்.
ஒரு மகான் ஒருவரை பார்ப்பதற்காக ஒரு இளைஞன் வந்தான். வருகிற வழியில் யாரோ ஒருவருடன் அவனுக்கு தகராறு ஏற்பட்டது. கோபத்தின் உச்சத்துக்கு சென்றான். வந்த வேகத்தில் காலில் இருந்த செருப்பை கழட்டி கோபமாக ஒரு மூலையில் எறிந்தான். கதவை வேகமாக சாத்தினான். பிறகு உள்ளே வந்து பெரியவரான அந்த மகானுக்கு வணக்கம் சொன்னான். அப்போது அந்த மகான் சொன்னார், தம்பி உன் வணக்கத்தை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. முதலில் செருப்பிடமும், கதவிடமும் மன்னிப்புக் கேட்டு விட்டு வா என்றார். உடனே அந்த இளைஞன், உயிரிழந்த பொருட்களிடத்தில் எப்படி மன்னிப்புக் கேட்பது? என்றான். உடனே மகான் கூறினார், அதெப்படி! அந்த செருப்புக்கும் கதவுக்கும் உயிர் இருப்பதாக நினைத்து தானே உன் கோபத்தை அவற்றிடம் காட்டினாய். மன்னிப்பு கேட்பதற்கு மட்டும் உயிர் அற்றதாகிவிடுமா? என்றார். மகானின் வார்த்தைகளைக் கேட்டு திகைத்துப் போன அவன், மகான் கண்டிப்பாக இதைச் செய்தாக வேண்டும் எனக் கூறியதால், கதவிடமும், செருப்பிடமும் மன்னிப்புக் கேட்டான். அப்போது அவனுக்குள் இருந்த கோபம் சற்று அடங்கியது. நம்முடைய கோபத்திற்கான முதல் காரணம் நாமாகத்தான் இருக்கிறோம்! நம்முடைய கோபத்திற்கு முக்கிய பங்கு நம்மிடம்தான் உள்ளது. இதை உணர்ந்தாலே கோபம் அடங்கும், என்று மகான் அவனுக்கு விளக்கினார்.
ஆனால் கோபத்தை எல்லா தருணங்களிலும் அடக்குவது சாபமாகும்.
பொய்மையை காணும் போது கோபம் வேண்டும்.
தீமை எதிர்ப்படும்போது கோபம் வேண்டும்.
அநீதி அரசாளும் போது கோபம் வேண்டும்.
எருசலேம் ஆலயமானது கள்வர் குகை ஆனபோது,
இயேசுவுக்கு கோபம் வந்தது. கைக்கு சாட்டை வந்தது.
அதனால் ஊழலுக்கு முடிவுக்கு வந்தது அன்று.
எனவே தான் பாரதியாரும் கூறுகிறார், சிறுமை கண்டு பொங்குவாய் என்று.
இன்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை தேடி இவ்வுலகத்திற்கு வருகிறார் என்றால், நாம் எத்தகைய தன்மை கொண்டவர்களாக இருக்க போகிறோம்? சமூகத்தில் நடக்கக்கூடிய அநீதிகளை கண்டும் காணாதவர்கள் போல செல்லப் போகிறோமா? அல்லது நம்மைத் தீண்டாதவரை எதுவும் தவறில்லை என்ற எண்ணத்தோடு அடுத்தவரின் துன்பத்தை கண்டும் காணாதவர்களாக பயணிக்கப் போகிறோமா? என்ற கேள்வியை இன்றைய நாளில் நமக்குள் எழுப்பி பார்ப்போம்.
இன்றைய முதல் வாசகத்தில் கூட சுருளேட்டை எடுத்து படிக்க தகுதி பெற்ற ஒருவரையும் காணவில்லை என யோவான் அழுதார் என கூறப்படுவது போல இன்றைய நாளில் இறைவன் இச்சமூகத்தில் நம்மிடையே வலம் வருகிறார் என்றால் நம்முடைய செயல்கள் சுருளேட்டை எடுத்து படிக்க கூடிய தகுதி பெற்ற நிலையில் இருக்கிறதா? அதாவது சமூகத்தின் அவலங்களைைைக்க கண்டு அதனை எதிர்த்து கேள்வி கேட்கக் கூடியவர்களாகவும் அந்த அவல நிலையை மாற்றக் கூடியவர்களாகவும் நாம் இருப்போமா? என்று கேள்வி எழுப்பிப் பார்ப்போம். எருசலேம் தேவாலயத்தை தேடிச் சென்ற போது எருசலேம் தேவாலயத்தில் பலவிதமான வேலைகள் நடந்துகொண்டிருந்தன. எருசலேம் தேவாலயத்தில் கூட மக்கள் ஒடுக்கப்படுகின்றன சூழல் இருந்தது. இச்சூழலை எல்லாம் கண்டு தான் இறைவன், உன்னை கற்கள் ஒன்றின் மீது ஒன்று இராதபடி செய்வேன் என்று கூறுகிறார். ஏனெனில் கடவுள் உன்னை தேடி வந்த காலத்தில் அதனை நீ அறிந்து கொள்ளவில்லை என்ற வார்த்தைகளின் வழியாக இயேசு கூறுகிறார். இன்று இந்த சமூகத்தில் நம்மிடையே இருக்கக்கூடிய மக்கள் துன்புறுகிறார்கள் என்றால், அவர்களின் துன்பத்தைத் துடைப்பவர்களாக நாம் இருக்க வேண்டும். இந்த சமூகத்தில் அநீதி தழைத்தோங்கி விளங்குகிறது என்றால், அந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கக் கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். அவ்வாறு இருப்போமாயின் இறைவன் நம்மைத் தேடி வரும் பொழுது நம்மை கண்டு மகிழுவார். மாறாக நாம் அநீதிகளை கண்டு ஒதுங்கிச் செல்பவர்களாகவும் அடுத்தவரின் துயரம் கண்டு பரிதாபப்பட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு நகரக் கூடியவர்களாகவும் இருப்போம் என்றால் கண்டிப்பாக இறைவன் எருசலேம் ஆலயத்தை பார்த்து கூறியது போல நம்மை பார்த்து கூறுவார், உன்னை தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை என்று. ஆண்டவர் ஒவ்வொரு நாளும் நம்மோடு பயணிக்கிறார். அவரை உணர்ந்து கொள்வோம். அவர் நம்மோடு இருக்கிறார் என்ற துணிவோடு துணிச்சலோடு சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் அநீதிகளையும் எதிர்த்து குரல் கொடுப்போம். நம்மிடையே வாழும் சக மனிதர்களின் துன்பத்தைக் கண்டு பரிதாபப்படுவதைவிட அத்துன்பத்தை அவர்கள் வாழ்விலிருந்து நீக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம். இன்று இதுவே இறைவன் விரும்பக் கூடியதாகும். இத்தகைய பணியினைச் செய்ய நாம் இயேசுவின் சீடர்கள் என்ற உணர்வோடு இன்றைய நாளில், நம்முடைய வாழ்க்கைப் பயணத்தை, மகிழ்வோடும் நேர்மறையான எண்ணத்தோடும் சிறப்பான நல்ல செயல்களை நாம் செய்ய வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடும் வாழ்க்கையைத் தொடர்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக