இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்கள் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்!
அறிவிப்பதை கேட்டால் தான் நம்பிக்கை உண்டாகும்!
இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் மீது நாம் கொண்டிருக்கக்கூடிய நம்பிக்கை பற்றி புனித பவுல் அடிகளார் உரோமையருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். ஆண்டவரை வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என உள்ளூர நம்பினால் மீட்பு பெறுவீர்கள் என கூறுகிறார். அவர் மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார் என்பது விவிலியத்தின் கூற்றாக இருப்பினும், அவரை ஏற்றுக்கொண்ட நம்மிடையே யூதர் என்றோ, கிரேக்கர் என்றோ, வேறுபாடில்லை. அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களை பொழிகின்றார். ஆண்டவரைப் பற்றி அறிக்கையிடுவதை கேட்பதால் நம்பிக்கை உண்டாகிறது என்ற செய்தியை இன்றைய முதல் வாசகம் நமக்கு தருகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர்கள் இருவரைக் கண்டு தன் பணிக்கு அழைக்கின்றார். அவர்களும் இயேசுவின் குரலை கேட்டதனால், அவர் மீது நம்பிக்கை கொண்டு அவர் பின்னே வருகிறார்கள். அதுபோலவே சற்று தூரம் நடந்து சென்ற பிறகு, மேலும் இரண்டு சகோதரர்களை சந்திக்கிறார். அவர்களையும் இயேசு அழைக்கிறார். இயேசுவின் வார்த்தைகளை கேட்டதனால் அவர் மீது நம்பிக்கை கொண்டவர்கள், தங்களிடம் இருந்த அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின் சென்றார்கள் என்று செய்தியானது, இன்றைய வாசகங்கள் வழியாக நமக்குத் தரப்படுகிறது. இந்நேரத்தில் நாம் ஆண்டவர் இயேசுவைப் பற்றி அறிவிப்பதை கேட்கின்றோமா? என்ற கேள்வியை எழுப்பிப் பார்க்க நாம் அனைவருமே அழைக்கப்படுகின்றோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்தியானது ஒவ்வொரு நாளும் திருப்பலியில் பங்கெடுக்கும் போது அறிவிக்கப்படுகிறது. ஆனால் பல நேரங்களில் திருப்பலியில் பங்கெடுக்கக்கூடிய நாம், இறைவனது வார்த்தைகளுக்கு செவிமடுக்கிறோமா? அந்த வார்த்தைகளின் படி நமது வாழ்வை அமைத்துக் கொள்கிறோமா? அந்த வார்த்தைகளின் அடிப்படையில் நமது நம்பிக்கையை ஆழப்படுத்துகிறோமா? அல்லது கடமைக்கு இறைவார்த்தை வாசிக்கப்படுகிறது, எழுந்து நிற்க வேண்டும். எனவே எழுந்து நின்று விட்டு அமர்ந்து கொள்ளக் கூடியவர்களாக இருக்கின்றோமா? நமக்குள் நாமே கேள்விகளை எழுப்பி பார்ப்போம். இறைவனது வார்த்தையானது நம்பிக்கையை உருவாக்கக்கூடியது. ஆனால் அதை நாம் கேட்டால் தான் நம்பிக்கை நமக்குள் பிறப்பெடுக்கும். இறைவனது வார்த்தைகள் அறிவிக்கப்படும் போது அதனை, கடமைக்காக, கேட்டும் கேட்காதவர்கள் போல நின்று கொண்டு இருப்போமாயின், அது எத்தகைய மாற்றத்தையும் நமக்கு தராது. வார்த்தைகள் மிகவும் வலிமையானவை என்று கூறுவார்கள். வார்த்தைகளால் ஒருவரை குணப்படுத்தவும் முடியும். வார்த்தைகளால் ஒருவரை ரணப்படுத்தவும் முடியும் எனக் கூறுவார்கள். ஆண்டவரின் வார்த்தைகள் நமக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகிறது. ஆனால் அதை நாம் உணர்ந்து கொள்கின்றோமா? என இன்றைய நாளில் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது அவருடைய வார்த்தைகள் இம்மண்ணில் வாழ்ந்த பலருக்கு ஆறுதலைத் தந்தது. பலருக்கு நம்பிக்கையை கொடுத்தது. பலரின் துன்பத்திற்கு மருந்தாக அமைந்தது. நாம் இந்த சமூகத்தில் வாழ்கிறோம். இயேசுவின் மதிப்பீடுகளின் படி வாழ வேண்டும் என்று வாழக் கூடியவர்களாக இருக்கிறோம். நமது வார்த்தைகள், யாருக்கு எத்தகைய மாற்றத்தை உருவாக்குகிறது? யாருக்கு எத்தகைய முறையில் ஆறுதலைத் தருகிறது? யாருக்கு நமது வார்த்தைகள் நம்பிக்கையைத் தருகிறது? என சந்திப்போம்.
இன்று பெற்றோர்களின் வார்த்தைகளில் பிள்ளைகளுக்கு நம்பிக்கை உருவாவதில்லை. பிள்ளைகளின் வார்த்தைகளில் பெற்றோருக்கு நம்பிக்கை ஏற்படுவதில்லை. நமது வார்த்தைகள் நம்பிக்கையின் வார்த்தைகளாக அமைய வேண்டும். நமது வார்த்தைகள் நம்பிக்கை தரக்கூடிய வார்த்தைகளாக அமைய வேண்டும். அவ்வாறு அமையும்போது, நாமும் இறைவனது வார்த்தைகளைப் போல, நம்பிக்கையை விதைக்கும் வார்த்தைகளை ஒவ்வொரு நாளும், நாம் வாழும் சமூகத்தில் உள்ள மக்களோடு பகிர்ந்து கொள்ளக் கூடியவர்களாக இருப்போம்.
இன்றைய நாளில் இறை வார்த்தைக்கு கவனத்தோடு செவிகொடுக்கவும் அவ்வார்த்தைகளின் படி வாழ்வை மாற்றிக் கொள்ளவும், அவ்வார்த்தைகளின் அடிப்படையில், நமது நம்பிக்கையை வலுப்படுத்தவும் இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்றுக் கொண்டு செயல்பட உங்களை அன்போடு அழைக்கின்றேன்.
இன்று உண்மையில் பல குடும்பங்களில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே நம்பிக்கை இல்லை! அன்பின் அடிப்படையிலேயே நம்பிக்கை உருவாகும். நமது குடும்பங்களில் நம்பிக்கையை உருவாக்க! நாம் செல்கின்ற ஒவ்வொரு இடமும் நமது குடும்பமாக மாறிட தொடர்ந்து முயற்சி செய்வோம்!
பதிலளிநீக்குஅருமையான கருத்துகளை அழகாக வழங்கிய அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்! நன்றிகள்!