ஞாயிறு, 8 நவம்பர், 2020

நமது அடித்தளம் எது? (9.11.2020)

நமது அடித்தளம் எது?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 

இன்றைய வாசகங்களின் அடிப்படையில் எனது சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். "நீரின்றி அமையாது உலகு" என்ற வள்ளுவனின் வாக்கிற்கு இணங்க இன்றைய முதல் வாசகத்தில் நீரினை உவமையாகக் கொண்டு வாழ்க்கை பாடத்தை நாம் உணர்ந்துகொள்ள அழைக்கப்படுகிறோம்.நீர் நமது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கக் கூடிய ஒன்று. மூன்றாம் உலகப் போர் ஒன்று நடக்குமாயின் அது தண்ணீருக்கான போராகத்தான் இருக்கும் என பலர் கூறுவதை நாம் கேட்டிருக்கலாம். தண்ணீர் எப்போதும் நலமான பணியை செய்யக்கூடியதாக இருக்கிறது. தண்ணீர் வழியாகவே பல உயிர்கள் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பது மறுக்கவியலாத உண்மை. கடவுள் உலகை அன்பு செய்கிறார் என்பதன் வெளிப்பாடே மழைநீர் என்று கூறுவார்கள். நீர் தான் இருக்க கூடிய இடங்களில் இருக்கக்கூடிய உயிர்கள் எல்லாம் தன்னிடம் இருந்து சக்தியை பெற்று தங்கள் வாழ்வை செழுமையாக அமைத்துக்கொள்ள வழிவகுக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு நம்மை சிறந்த கட்டடக் கலைஞர்களாக இருக்கவேண்டும் என்று உவமை வாயிலாக அழைக்கிறார். கட்டடக் கலைஞன் ஆக இருப்பதற்கும் நீருக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழலாம். கட்டடக் கலைஞன் விரும்பியபடி தனது விருப்பத்திற்கு ஏற்ப அழகுற ஒரு கட்டடத்தை கட்டி எழுப்புகிறான்.
 நீரானது எப்படி, தான் செல்லக்கூடிய இடங்களில் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு எல்லாம் வாழ்வை அளித்துக் கொண்டு வருகிறதோ அதுபோல கட்டடக் கலைஞர்களாக இருக்கக் கூடிய நாமும், நாம் அனைவரும் கடவுளால் கட்டமைக்கப்பட்டவர்கள். நாம் கட்டக்கூடிய  ஒவ்வொரு கட்டிடமும் பல உயிர்கள் தங்கி வாழ்வதற்கு ஏதுவான கட்டிடங்களாக அமைய வேண்டும் என்பதை உணர்த்துகிறார். இங்கு கட்டிடம் என்பதை வெறுமனே செங்கலாலும் மணலாலும் கட்டுப்படக்கூடிய செங்கல் மணல் சிமெண்ட் பயன்படுத்திக் கட்டப்படக் கூடிய கட்டிடம் என பொருள் கொள்ளாமல் "இந்த கட்டிடம்" என்பதை நாம் இச்சமூகத்தில் விதைக்கக் கூடிய நல்ல பண்புகளாகவும் நல்ல இறையாட்சியின் விழுமியங்களாகவும் பொருள் கொள்ள அழைக்கப்படுகிறோம். நாம் இந்த மண்ணில் ஒவ்வொரு நாளும் பல விதமான மனிதர்களை சந்திக்கிறோம். சந்திக்கக்கூடிய மனிதர்கள் நம்மிடமிருந்து எத்தகைய பாடத்தை கற்றுக் கொள்கிறார்கள் என சிந்தித்துப் பார்ப்போம். நாமும் பல நேரங்களில் பல மனிதர்களை சந்திக்கிறோம். காணும் நபர்களிடமிருந்து எத்தகைய பண்பினை எத்தகைய பாடத்தை நாம் உள்வாங்கிக் கொண்டு இருக்கிறோம்?  ஒருவரை பார்த்து அவரிடம் இருந்து நல்லவிதமான பண்பை நாம் கற்றுக் கொள்கிறோம் என்றால் அவர் நல்ல கட்டிடத்தை தனக்குள் கட்டிக் கொண்டிருக்கிறார் என்பது உண்மை. நாம் எப்படிப்பட்ட கட்டிடத்தை கட்டிக் கொண்டிருக்கிறோம்? நாம்  ஒவ்வொருவரும் கட்டக்கூடிய நமது கட்டிட முறை என்பது நம்மை பொறுத்துதான் அமைகிறது. 

இவ்வுலகில் பிறந்திருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் கடவுள்  உரிமையை கொடுத்திருக்கிறார். அந்த உரிமையின் அடிப்படையில் நல்லதையும் தீதையும் செய்வதற்கு சுதந்திரம் நம் கையில் இருக்கிறது. நாம் நம்மிடம் இருக்கக்கூடிய சுதந்திரத்தை பயன்படுத்தி எதைச் செய்யப் போகிறோம்? யாருக்கு வாழ்வு தரப்போகிறோம்? என சிந்திக்க இன்றைய நாள் வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.   ஓடும் நதி நீரை பயன்படுத்தி பல உயிர்கள் தழைத்தோங்குவது போல நம்முடைய வாழ்க்கையில் ஓடிக் கொண்டிருக்கக் கூடிய நமது வாழ்க்கையை பார்க்கக்கூடிய பலர் நம்மிடமிருந்து பல நல்ல பாடங்களை கற்றுக் கொள்ளவும், நாமும் பலரிடமிருந்து நல்ல பாடங்களைக் கற்றுக் கொள்ளவும், நமது வாழ்வை மாற்றிக் கொண்டவர்களாக, நமது வாழ்வை சீர் மிக்க, அழகு மிக்க கட்டிடமாக, அதுவும் இயேசுவை அடித்தளமாக கொண்ட கட்டிடமாக மாற்றிக்கொள்ள இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். நமது அடித்தளம் இயேசு என நான் கூறினாலும் நீங்கள் இன்று வரை உங்கள் அடித்தளமாக எதை வைத்து இருக்கிறீர்கள்? என்ற கேள்வியை உங்களுக்குள் எழுப்புங்கள். எதை அடித்தளமாகக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என சிந்தித்துப் பாருங்கள். ஒரு வேளை உங்கள் அடித்தளம் வலுவற்றதாக இருக்குமாயின் இந்த நாளில் உங்கள் அடித்தளத்தை சரிசெய்துகொள்ள அழைக்கப்படுகிறீர்கள். அடித்தளத்தை சரி செய்தல் என்பது வெறுமனே வீட்டில் அடிப்பரப்பை சரி செய்வது அல்ல,  மாறாக உங்கள் வாழ்க்கை என்னும் கட்டிடத்தில் நீங்கள் கட்டிக்கொண்டிருக்கும் வாழ்க்கை என்ற பயணத்தில் நீங்கள் உங்களுக்குள்ளே கட்டிக்கொண்டிருக்கக்கூடிய நற்பண்புகள் என்ற கட்டிடத்தை எந்த அடிப்படையில் அமைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என சிந்தியுங்கள். உங்கள் அடித்தளம் நல்லதை மையப்படுத்தியும்  நலமான காரியங்களை மையப்படுத்தியும் அமையும் போது உங்களால் பல உயிர்கள் வாழ்வு பெறும்.
உங்களை காண்போர் பலர் உங்களிடம் இருந்து பாடம் கற்பார்கள். காணக்கூடிய மற்ற மனிதர்களுக்கு முன்மாதிரியான, நல்ல மனிதர்களாக இம்மண்ணில் வாழ்ந்து இயேசுவின் இறையாட்சி விழுமியங்களை நாம் பறைசாற்றக் கூடியவர்களாக வாழ இந்த நாளில் உறுதி ஏற்றவர்களாய் முன்னோக்கிச் செல்வோம் இயேசுவின் பாதையில்!

1 கருத்து:

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...