இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்று நம் தாய்த் திருஅவையானது இறந்துபோன ஆன்மாக்களை நினைவு கூருவதற்காக, இறந்துபோன ஆன்மாக்களுக்காக இன்றைய நாளில் சிறப்பாக ஜெபிக்க நம் அனைவரையும் அழைக்கிறது.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி என்றால் இந்த நாளை இறந்தவர்களுக்காக ஜெபிக்க கூடிய நாளாக நாம் கருதி கல்லறைக்குச் செல்வது வழக்கம். கல்லறைக்குச் சென்று கல்லறையை சுத்தம் செய்து சாம்பிராணி இட்டு, அங்கு திருப்பலி அருட்தந்தையர்களால் நிறைவேற்றப்படும். அந்தத் திருப்பலியில் பக்தியோடு பங்கெடுத்து இறந்துபோன ஆன்மாக்களை நாம் நினைவு கூறக் கூடிய ஒரு மகத்தான செயலை செய்து கொண்டிருக்கிறோம். இந்த செயல் மிகவும் நல்ல ஒரு செயலாகும். இந்த உலகத்தில் வாழக்கூடிய மனிதர்கள் இறந்து போனால் அவர்கள் நினைக்கப்படுவார்களா? என தெரியாது. ஆனால் நமது திருஅவையின் வழிகாட்டலின் படி இந்த நவம்பர் 2ஆம் தேதி கண்டிப்பாக இறந்து போனவர்களின் கல்லறைகளுக்கு மக்கள் வருவதும் இறந்தவர்களை நினைவு கூர்வதும் வழக்கமாக நடக்கக்கூடிய செயலாக அமைந்திருக்கிறது. நாளை நாம் இறப்பை சந்தித்தாலும் நமது குடும்பத்தில் உள்ளவர்கள் நம்மை மறந்தாலும் இந்த நவம்பர் இரண்டாம் தேதி அவர்கள் நம்மை கல்லறையில் வந்து நினைவு கூறுவார்கள் என்ற எண்ணமானது ஆழமாக ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.
இன்றைய நாளின் வாசகங்கள் அனைத்தும் இப்பை மையப்படுத்தி அமைகின்றன. இறப்பு வாழ்க்கையில் பலவிதமான பாடங்களை நமக்கு கற்றுக் கொடுக்கிறது. மனிதனாக இம்மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் என்றாவது ஒருநாள் இறப்பை சந்தித்தே தீர வேண்டும். எனக்கு 27 வயதாகிறது என்று நான் கூறுகிறேன் என்றால் எனது இறப்பை நோக்கிய பயணத்தில் 27 ஆண்டுகளை நான் கடந்துவிட்டேன் என்பதுதான் உண்மையாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் நாம் நமது இறப்பை எதிர்நோக்கிச் சென்று கொண்டுதான் இருக்கிறோம். நாம் இம்மண்ணில் பிறந்திருக்கிறோம். நாம் அனைவரும் கண்டிப்பாக ஒருநாள் இந்த மண்ணை விட்டு மறைந்துபோவோம். மறைவதற்குள் நாம் கண்டிப்பாக பலவிதமான நல்ல செயல்களை செய்தாகவேண்டும். இதையே இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு உணர்த்துகிறார். இறுதிநாளில் தீர்ப்பு வழங்கும் போது தாகமாய் இருந்தேன் எனக்கு தண்ணீர் கொடுத்தாய். பசியாய் இருந்தேன் உணவு கொடுத்தாய். ஆடை இன்றி இருந்தேன் நீ ஆடை கொடுத்தாய். சிறையில் இருந்தேன், என்னைப் பார்க்க வந்தாய் என்ற இயேசுவின் வார்த்தைகள் ஆறுதலைத் தர கூடியதாக அமைகிறது. இன்று நாம் இம்மண்ணில் வாழும் போது எத்தகைய நற்செயல்களை செய்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியை எழுப்பி பார்க்க உங்களை அழைக்கின்றேன். நாம் உண்மையில் தாகமாய் இருப்பவருக்கு தண்ணீர் தருகிறோமா? ஏழைகளுக்கு உணவளிக்கின்றோமா? பசியால் வாடுவோருக்கு உணவளிக்கின்றோமா? ஆடையில்லாமல் இருப்பவருக்கு உடுத்த ஆடை கொடுக்கிறோமா?
கேள்வியை எழுப்பி பார்ப்போம் நமக்குள். ஆனால் இறுதி நாளில் ஆண்டவர் நம்முடைய செயல்களை முன்னிட்டே நமக்கு தீர்ப்பு வழங்குவார் என இன்றைய நற்செய்தி வாசகங்கள் நமக்கு தெளிவாக எடுத்துரைக்கின்றன.
இறப்பு என்றால் வாழ்க்கை முடிந்து விட்டது என்பதல்ல. இறப்பு என்பது ஒரு வெற்றிடம் ஆகிறது. இங்கு இறக்கக்கூடிய ஒவ்வொரு ஆன்மாவும் விண்ணுலகில் பிறக்கிறார்கள். மண்ணுலகில் மறையக் கூடிய ஒரு ஆன்மா விண்ணகத்தில் புதிதாகப் பிறக்கிறது. இதுவே நமது திருஅவை நமக்கு கற்பிக்கக் கூடிய ஆழமான மறை உண்மையாக உள்ளது. இந்த மறை உண்மை அடிப்படையில் இறப்பை நோக்கி நகரக்கூடிய நாமும் இன்றைய நாளில் ஒரு நிமிடம் ஆழமாக அமர்ந்து யோசித்து பார்ப்போம். இறந்தவர்களை நினைவு கூறும் பழக்கம் என்பது இப்போது நேற்றோ இன்றோ அல்லது கடந்த வருடத்தில் தொடங்கி ஒன்றோ அல்ல. நெடுங்காலமாக இருந்த ஒன்று.
நம்முடைய பாரம்பரியத்தை திருப்பி பார்க்கும் பொழுது தமிழர் பாரம்பரியத்தில் இறந்து போன முன்னோர்களை நினைத்து வழிபடக்கூடிய பழக்கமானது இருந்தது. அந்த பழக்கத்தின் அடிப்படையில் உருவானதாகத்தான் இந்த கல்லறை திருநாளையும் இன்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.
இறப்பைப் பற்றி ஆழமாக சிந்திக்கும்போது நெடுங்காலமாக இந்த பண்பு இருப்பதை நாம் உணர முடிகிறது. தொடக்க காலத்தில் யாராவது ஒருவர் இறந்துபோனால் அவர்களை நாம் நினைவு கூரக்கூடிய பழக்கமானது வழிவழியாக தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இறந்தவர்களை நினைவு கூறுகிறோம். இன்று இறந்தவர்கள் எல்லாம் நமக்காக இறைவனிடத்தில் பரிந்து பேசுவார்கள் என்பது உண்மை.
நம்முடைய திரு விவிலியத்திலே ஏழை இலாசரும் செல்வந்தனும் என்ற நிகழ்வை நாம் படித்திருப்போம். அந்த நிகழ்விலே ஆடம்பரமாக வாழ்ந்த செல்வந்தன் நரகத்தில் நெருப்பில் துன்புற்று கொண்டிருக்கும்போது
இலாசரை அனுப்பி வையும். என்னுடைய சகோதரர்கள் அவனை கண்டால் தங்கள் வாழ்வை மாற்றிக் கொள்வார்கள் என இறைவனிடத்தில் வேண்டுவதை நாம் வாசிக்கிறோம். மண்ணகத்தில் வாழ்ந்து மரித்து நரகத்திற்கு போன ஒருவர் கூட தன்னுடைய குடும்பத்திலுள்ளவர்களுக்காக இறைவனிடத்தில் பரிந்து பேசுகிறார் என்றால் கண்டிப்பாக நமது குடும்பத்தில் இருந்த, நமக்கு பிடித்தமான, நம் நெஞ்சுக்கு நெருக்கமான, நம்மோடு ஒட்டி உறவாடிய நமது உடன்பிறப்புகள், நம்மை விட்டு பிரிந்து சென்றாலும், நமக்காக இறைவனிடத்தில் அனுதினமும் ஜெபித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஜெபம் நம்மை வாழவைக்கும், எனக்கு தெரிந்த , அருட்தந்தை அந்தோணி ரமேஷ் அவர்கள் அடிக்கடி என்னிடம் கூறுவார், "எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சென்று உன்னுடைய குடும்பத்து கல்லறைக்குச் சென்று செபித்து விட்டு வா என்று கூறுவார். பல நேரங்கள் என்னடா இவர், கல்லறைக்குச் சென்று ஜெபிக்க சொல்கிறாரே, என்றே எண்ணம் எனக்குள் எழும். ஆனால் கல்லறை கற்றுத்தரும் பாடம் ஏராளம். ஒரு நாள் நானும் இந்த இடத்தில் புதைக்கப்படப் போகிறேன் என்பது உண்மை. இந்த இடத்திற்கு நான் வரும்போது என்னிடம் எதுவும் இருக்காது. ஆனால் இன்று உயிரோடு இருக்கும் போது இன்று எதைஎதையோ எண்ணி, தேடிக் கொண்டிருக்கிறேன் என்ற பாடத்தை அனுதினமும் உணர்த்தக் கூடிய இடமாக இந்தக் கல்லறை அமைகிறது. இறப்பை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இறப்பு பொறுப்பை அதிகப்படுத்துகிறது. குடும்பத்தில் ஒருவராக இருந்து தேவைகளை நிறைவு செய்த ஒரு நபர் இறந்து போனால் அந்த குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு அப்பொறுப்பானது தரப்படுகிறது. இனி அந்த குடும்பத்தை தூக்கி நிறுத்தக்கூடிய பொறுப்பை இன்னொருவர் கையில் எடுக்கிறார். இறப்பு ஒவ்வொருவருக்குள்ளும் மாற்றத்தை உருவாக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாடத்தை கற்பிக்கும். கற்றுக்கொண்ட பாடங்களை வாழ்க்கையில் செயலாக்க வேண்டும்.
இன்று பரபரப்பாக இயங்க கூடிய இந்த உலகத்தில், கல்லறைகளிலோ துக்க வீட்டிலோ நேரம் செலவிட நம்மால் இயலவில்லை. ஒரு காலம் இருந்தது. ஒருவர் இறந்து போனால் இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் வரை அவரை வைத்திருந்து அவர்களது உறவினர்கள் எல்லாம் வந்த பிறகு அந்த உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்வார்கள். அப்போதெல்லாம் இந்த குளிர்சாதன பெட்டிகள் என்பதும் இல்லை. ஆனால் இன்று இந்நிலை முற்றிலுமாக மாறி இருக்கிறது. ஒருவர் இறந்தால் குறைந்தது 4 மணி நேரம் (அ) 5 மணி நேரத்திற்குள் அந்த உடலை எடுத்து விட வேண்டும் எனக் கூறுபவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். முன்பெல்லாம் வீட்டில் ஒருவர் இறந்துவிட்டால், உறவினர்கள் எல்லாம் ஒன்றிணைந்து அவருடன் இருந்து அவரைத் தேற்றி, ஆறுதல்படுத்தி, பல நாட்கள் அவருடன் இருந்து ஊக்கமூட்டுவார்கள். ஆனால் இன்று, நான்கு மணிக்கு அடக்கமா? அப்பொழுது வருகிறேன் என்று கூறக் கூடியவர்களாக மாறிவிட்டார்கள். எப்பொழுது திருப்பலி எனச் சொல்லுங்கள். அப்போது வந்து விடுகிறோம் என்று சொல்லக்கூடிய குருக்களும் இருக்கின்றார்கள்.
இன்றைய நாளில் வெறுமனே கல்லறைக்குச் சென்று விட்டு திரும்புபவர்களாக இல்லாமல், நாம் எப்படி மாறி இருக்கிறோம் என சற்று ஆழமாக யோசித்துப் பார்ப்போம். என்னுடைய கல்லூரியில் பேராசிரியர் செல்வகுமார் என்பவர் எங்களுக்கு கற்பித்த ஒரு பாடம், ஒரு மங்களகரமான நிகழ்வு என்றால் உன்னை அழைத்தால் மட்டும் செல். அதுவே ஒரு துக்க காரியம் என்றால், உன் காதுக்கு அந்தச் செய்தி எட்டினால், உடனே சென்று வா. இன்று துக்க வீட்டிற்கு செல்ல எத்தனை பேர் தயாராக இருக்கிறோம்? மகிழ்ச்சியில் பங்கெடுக்க ஆர்வத்தோடு இருக்கிறோம். துன்புற கூடிய, துக்கத்தில் இருக்கக்கூடியவர்கள் வீட்டில் அவர்களைத் தேற்றக் கூடியவர்களாக இருக்கிறோமா? அல்லது கடமைக்குச் சென்று கடமைகளை செய்து விட்டு வரக் கூடியவர்களாக மட்டும் நாம் இருக்கிறோமா? கடமைக்குச் செய்வதல்ல மாறாக எதையும் ஆழமாக பொறுப்புணர்வோடு அர்த்தத்தோடு செய்ய நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். இதோ இன்றைய நாளில் கல்லறைக்குச் செல்லக்கூடிய நாம் அனைவரும் வெறுமனே கல்லறைகளை பார்த்துவிட்டு வராமல் கல்லறைகளில் இருந்து பாடம் கற்போம். வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்வோம். இந்த வாழ்க்கை பாடத்தை வாழ்க்கையில் செயலாக்கப்படுத்துவோம். வாழ்வில் மாற்றத்தை கொண்டுவர முயலுவோம். ஒருவரின் வீட்டில் துக்க காரியம் என்றால் உடனே துணை நிற்க இன்றைய நாளில் இறையருளை வேண்டி இணைந்து ஜெபிப்போம் இறந்துபோன ஆன்மாக்களுக்காக. அவர்களும் நமக்காக இறைவனிடம் ஜெபிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு இறந்தவர்களை நினைவு கூருவோம். அவர்களுடைய நல்ல பண்புகளை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துவோம் வாருங்கள்!
அருமையான பதிவு சகோ.. 🙏😭
பதிலளிநீக்கு