சனி, 31 அக்டோபர், 2020

அனைத்து புனிதர்கள் திருநாள் (01.11.2020)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாளில் திரு அவையானது அனைத்து புனிதர்கள் தினத்தை கொண்டாடுகிறது. 
அனைத்து புனிதர்கள் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் என்ன என்பது இன்று நாம் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டிய ஒன்றாகும். திருஅவை என்பது புனிதர்களின் இரத்தத்தால் உருவானது என்று கூறுவார்கள். எத்தனையோ நபர்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது அதீத நம்பிக்கை கொண்டு அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக அந்த நம்பிக்கையில் இறுதிவரை நிலைத்திருந்தது தங்கள் இன்னுயிரை இழந்தார்கள். இப்படி இழந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம் ஏராளம். இயேசுவுக்காக உயிர்த்தியாகம் செய்த பலரையும் நினைவு கூற வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அந்த அடிப்படையில் ஒவ்வொருவரையும் நினைவு கூறவேண்டும் என்றால் நாட்கள் போதாது. எனவே அனைத்து புனிதர்களையும் நினைவு கூறும் விதமாக தான் இந்த நாள் சித்தரிக்கப்படுகிறது.


 ஏன் இந்த நாள் நவம்பர் 1 என தீர்மானிக்கப்பட்டது? என்பதை நாம் உணர்ந்து அறிந்து கொள்ள இன்றைய நாளில் கடமைப்பட்டிருக்கிறோம். அதனடிப்படையில், 
நவம்பர் 1 நடப்பு தேதி போப் கிரிகோரி III (731-741), உரோமில் செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிலுள்ள அனைத்து புனிதர்களுக்கும் ஒரு தேவாலயத்தை பிரதிபலித்தபோது நிறுவப்பட்டது. கிரிகோரி ஆண்டுதோறும் அனைத்து புனிதர்களின் பண்டிகை கொண்டாட தனது குருக்களுக்கு உத்தரவிட்டார். இந்த கொண்டாட்டம் முதலில் உரோம் மறைமாவட்டத்திற்குள் மட்டும் இருந்தது, ஆனால் போப் கிரிகோரி IV (827-844) முழு திருஅவையுடன் நவம்பர் 1 அன்று கொண்டாடப்படும்படி உத்தரவிட்டார்.


இன்றைய நாளின் நற்செய்தி வாசகங்கள் அனைத்தும் நாம் புனிதர்களை போல வாழ அழைக்கப்படக் கூடிய வகையில் அமைந்திருக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பேறு பெற்றவர்கள் என குறிப்பிடுகிறார். யாரெல்லாம் பேறு பெற்றவர்கள் என பார்க்கும்பொழுது துன்பத்தில் இருப்போர், அழுதுகொண்டு இருப்போர், பசியால் வாடுவோர் என பலரை குறிப்பிடுகிறார். இப்படி அவர் குறிப்பிடக்கூடிய நபர்கள் அனைவருமே ஏழைகளாகவும் சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட வர்களாகவும் கைவிடப்பட்டவர்களாகவும் தான் இருக்கிறார்கள். இத்தகைய மனிதர்களை தேடிச் செல்ல வேண்டும். இத்தகைய மனிதர்களுக்கு பணிபுரிபவர்களாக நாம் இருக்க வேண்டும். இதையே இயேசு இன்றைய செய்தி வாசகத்தின் வழியாக நமக்கு உணர்த்துகிறார். இத்தகைய பணியை செய்வது மிகவும் எளிதான காரியம் அல்ல. ஆனால் பேசுவது மிகவும் எளிது. இன்று மேடைக்கு மேடை நின்று,  "ஏழைகளுக்கு உதவுங்கள்". "எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்" என பேசுபவர்கள் ஏராளம். ஆனால் பேசுபவர்கள் கூட இன்று உதவி செய்யவில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை. ஒருவேளை பேசுபவர்கள் எல்லாம் இணைந்து உதவ முன் வந்திருந்தால் இன்று ஓரளவிற்கு  மனிதனை மனிதனே தனக்கு கீழானவன் என எண்ணக் கூடிய, மனிதனை மனிதன், மதத்தின் வாயிலாகவும், இனத்தின் வாயிலாகவும், மொழியின் வாயிலாகவும், சாதியத்தின் வாயிலாகவும், பிரித்தாளக் கூடிய தன்மையானது என்றோ ஒளிந்திருக்கும். இன்றும் அது தொடர்கிறது என்பதன் அடிப்படை இதை பெரும்பாலும் மனிதர்கள் பேசும் பொருளாக வைத்து இருக்கிறார்கள் என்பதுதான்.

 தந்தை பெரியார் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். தந்தை பெரியார் எதை பேசினாரோ அதை இந்த சமூகத்தில் செயலாக்கம் செய்து காண்பித்தார். சாதிகள் இல்லை என்று கூறினார். அதை வெறும் வாய்ச் சொல்லாக வைத்து விடாமல் அதை செயலில் காட்டினார். தன்னோடு பழகுபவர்கள் தன்னோடு உணவருந்துபவர்கள் யாரென்று அறியாது அனைவரும் எப்போதும் இணைந்து செயல்பட்டார் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் இத்தகைய ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தேவையில் இருக்கக்கூடிய மக்களுக்காக பணி செய்யக் கூடியவர்களாக  நாம் இருக்க வேண்டும் என்பதை இயேசு அறிவுறுத்துகிறார். இத்தகைய பணியை செய்யும் போது நாம் சந்திக்கும் சவால்கள் ஏராளம். நாம் சந்திக்கக் கூடிய இடர்பாடுகள் ஏராளம். அன்று யூதச்சமூகத்தில் யூதர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள், மற்றவர்கள் எல்லாம் தங்களுக்கு கீழானவர்கள் என்ற எண்ணம் நிலவியது. வழிபாடு என்பது வேறு வாழ்க்கை என்பது வேறு என்ற நிலை இருந்தது. என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் மக்களை எப்படி வேண்டுமானாலும் தங்களுக்கு கீழ் அடிமைப் படுத்திக் கொள்ளலாம் என்ற சூழல் நிலவி கொண்டிருந்த வேளையில் அதை தவறு என இயேசு முன்னுரைத்து  அவர்களுக்கு எடுத்துக் காட்டினார். தனது சொல்லாலும் செயலாலும் ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட ஓரம் தள்ளப்பட்ட மக்களின் சார்பாக நின்றார் இயேசு. அவரை பின்தொடர்ந்த சீடர்களும் இயேசுவைப் போலவே தங்கள் வாழ்வை அமைத்து கொண்டார்கள். அதன் விளைவாகவே பலவிதமான இன்னல்களை இயேசுவைப் போலவே பலவிதமான இன்னல்களை சந்தித்தார்கள். இன்னல்களை சந்திக்கும் போது இயேசு மனம் தளரவில்லை. அதே அன்பை தான் இயேசுவோடு இருந்த சீடர்களும் இயேசுவைக் கண்டு நம்பியவர்களும் கொண்டிருந்தார்கள்.  அதன் விளைவாக பலர் தங்களுடைய இன்னுயிரை இழந்தார்கள். இன்னுயிரை இழந்த அனைவருமே இன்று கடவுளின் மக்கள் என முத்திரை பெற்றவர்களாக இருக்கிறார்கள். முதல் வாசகத்தில் கடவுளின் மக்கள் என்ற முத்திரையை பெற்றவர்கள் இவர்கள் எனக் குறிப்பிடுகிறது. அந்த கடவுளின் முத்திரையைப் பெற்றவர்களைத் தான் இன்று புனிதர்களாக  திருஅவை நினைவு கூறுகிறது.  இந்த உலகத்தில் நாம் என்ன செய்யப் போகிறோம் என சிந்திக்க இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகிறோம். நமது வாழ்வு எப்படி அமைகிறது?
 வெறும் வெற்று பேச்சு மட்டுமே நமது வாழ்க்கையாக இருக்கிறதா? அல்லது நமது வார்த்தைகள் அனைத்தும் செயல் வடிவம் பெற்று உண்மையான இயேசுவின் சீடர்களாக நாம் இருக்கின்றோமா? என்ற கேள்வியை இன்றைய நாளில் நீங்களும் நானும் எழுப்பி பார்க்கக் கடமைப் பட்டிருக்கிறோம். இயேசுவை நம்பி இயேசுவுக்காக பணி செய்ய முன்வந்து ஏழை எளிய மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த எத்தனையோ நபர்கள் துன்பங்களின் காரணமாக தங்கள் இன்னுயிரை இழந்தார்கள். இழந்த போதும் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையையும் அவர்கள் கொண்டிருந்த இயேசுவின் மீதான ஆழமான பற்றையும் அவர்கள் விட்டு விடவில்லை. இன்று நாம் எப்படி இருக்கிறோம்?  என சிந்தித்துப் பார்ப்போம். நமது நம்பிக்கை என்பது எதிலிருக்கிறது?  நமது செயல்களில் எதில் இருக்கிறது? நமது பேச்சுக்கள் எதில் இருக்கிறது? நமது பேச்சுக்களை எந்த அளவிற்கு செயலாக்கம் செய்கிறோம் என சிந்தித்துப் பார்ப்போம்.
இந்தக் கேள்விகளுக்கு, "இன்று நான் சரியாகத்தான் இருக்கிறேன்" என பதில் கூற முடியுமா? என்று யோசித்துப் பார்ப்போம். ஒருவேளை நீங்கள் பேசுவதை தான் செயலாக்கம் செய்கிறீர்கள் என்றால்  கடவுளுக்கு நன்றி செலுத்துவோம். ஆனால் நமது பேச்சு பல நேரங்களில் வெறும் பேச்சாக மட்டுமே இருந்து, அது செயல் வடிவமாகவில்லை என்ற எண்ணம் உங்களுக்குள் எழுமாயின் இன்றைய நாளில்
உங்கள் வாழ்வை மாற்றிக்கொள்ள ஆண்டவர் இயேசு நம்மை இந்நாளில் அழைக்கிறார். நம் கண்களுக்கு முன்பாக எத்தனையோ புனிதர்கள் இருக்கிறார்கள்.
அவர்களையெல்லாம் மனதில்கொண்டு இவர்களைப் போல
வாழ வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவோம். வெறும் வார்த்தைகளால் இவரைப் போல் வாழவேண்டும் என சொல்வதை விட அதை செயலாக்கிட இன்றைய நாளில் நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். நாம் நமது வாழ்வை எடுத்துக்காட்டான முன்மாதிரியான விசுவாசமான வாழ்வாக மாற்றிக்கொள்ள இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம். வேண்டுவதோடு மட்டுமல்லாமல், வேண்டல் நிறைவேற வேண்டுமாயின் நமது செயல்கள் அதற்கேற்ற வகையில் அமைய வேண்டும். எனவே செயல்களால் வாழ்க்கை மாற்றத்தை நம்மில் உருவாக்கிட இணைந்து செபிப்போம்.


1 கருத்து:

  1. மற்றவர்களுக்காக நமது வாழ்வை அர்ப்பணித்து உண்மையான இயேசுவின் சீடர்களாய் வாழ்வோம்!
    இன்றைய நாளில் கருத்துகள் மிகவும் அருமை!
    தம்பி சகாயராஜ் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களும்! பாராட்டுக்களும்! நன்றிகளும்!
    👏👏👏👍👍👍🙏🙏🙏🙇🙇🙇

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...