இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! உங்கள் அனைவரிடமும் இன்றைய நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் எனது சிந்தனைகளை பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஒருவர் இயேசுவை சோதிக்கும் நோக்குடன் நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு இயேசு, நீர் திருச்சட்ட நூலில் என்ன வாசிக்கிறீர்? நிலை வாழ்வுக்கு வழி காட்டுவதாக திருச்சட்டநூல் கூறுவது எதை? எனக் கேட்க, அவர், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனதோடும் உன் கடவுளாகிய ஆண்டவரை அன்புகூருவாயாக. உன்மீது அன்பு கூறுவது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக என திருச்சட்ட நூலில் எழுதியுள்ளதாக கூறுகிறார். அதை செய். நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள முடியும் என்று இயேசு கூறுகிறார். உடனே அவர், அடுத்து இருப்பவரை அன்பு செய்யுங்கள் என்று கூறுகிறீரே! யார் எனக்கு அடுத்திருப்பவர்? என்ற கேள்வியை எழுப்புகிறார். அவருக்கு நல்ல சமாரியன் உவமையை இயேசு கூறுகிறார். கூறிவிட்டு அவரிடம், கயவர்களால் அடிபட்டு காயம் பட்டுக் கிடந்த அவருக்கு அடுத்து இருப்பவர் யார்? என கேட்க, அவருக்கு உதவி செய்த நல்ல சமாரியரே என்று திருச்சட்ட அறிஞர் கூறுகிறார். நீயும் போய் அவரைப் போல் அடுத்தவருக்கு இரக்கம் காட்டு என இயேசு கூறுவதாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்க கேட்கிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தை நாம் நமது வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்க அழைக்கப்படுகிறோம். நாம் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் நம் கடவுளாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகிறோமோ? அன்பு செய்கிறோமா? நம்மையே நாம் கேள்விக்குட்படுத்தி பார்ப்போம்!
உன்னை நீ அன்பு செய்வது போல உனக்கு அடுத்திருப்பவர் அன்பு செய் என்ற இறை வார்த்தையை உங்கள் வாழ்க்கையில் ஒப்பிட்டுப் பாருங்கள். உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு அடுத்திருப்பவர் யார்? கணவனுக்கு மனைவியும், மனைவிக்குக் கணவனும், கணவன் மனைவிக்கு தங்கள் வீட்டில் இருக்கக் கூடிய மூத்தவர்கள், முதியவர்கள், உறவினர்கள், அண்டை வீட்டார் என ஒவ்வொருவரையும் நாம் நமக்கு அடுத்து இருப்பவர்களாக எண்ணலாம். இவர்களை முழுமனதோடு நாம் அன்பு செய்கின்றோமா? நம்மை நாம் அன்பு செய்வது போல, அவர்களை அன்பு செய்கின்றோமா? என்ற கேள்வியை நாம் அனைவரும் நமக்குள் எழுப்பி பார்ப்போம். இன்றும் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளாத நிலை பல குடும்பங்களில் நிலவுகிறது. கணவனுக்கு என்று ஒரு அறை. மனைவிக்கு என்று ஒரு அறை. அம்மா அப்பா என்று வீட்டில் இருக்கக் கூடிய முதியவர்களுக்கு ஒரு அறை என்று வைத்துக் கட்டி அறை வீடுகள் இன்று அதிகமாகிவிட்டன. அனைவரும் இணைந்து வாழ்ந்த காலம் என்பது மறைந்து போய்த் தனித்து வாழ்வதே இன்பம் என்ற சூழல் இன்று உருவாகியுள்ளது. இப்போது நிலவும் நோய்த்தொற்று கூட தனித்திருப்பது மட்டுமே வாழ்வதற்கான வழி எனக் கூறுகிறது. ஆனால் தனித்து இருந்தால் எப்படி நாம் ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்ட முடியும்? நமது உயிர், நமது உடல் எவ்வளவு முக்கியமானது? எவ்வளவு அன்புக்குரியது? என்று நாம் எண்ணுகிறோமோ... அது போலவே அடுத்தவர்களின் உடலும், உயிரும் மிகவும் முக்கியமானது. இன்று தனிமையில் பேசுவதற்கு ஆளில்லாமல் ஏங்கக்கூடிய எத்தனையோ முதியவர்கள் வீட்டில் இருக்கிறார்கள்.
தாய் தந்தையர் சரியாக தங்களிடம் உரையாடுவது இல்லை என்பதனால் நண்பர்கள் மத்தியிலேயே வாழ்க்கை முழுவதையும் செலவிட்டு பல நேரங்களில் தவறான வழிகளுக்கு செல்லக்கூடிய பல குழந்தைகள் நாம் வாழும் இச்சமூகத்தில் உள்ளனர்.
இதற்கெல்லாம் யார் காரணம்? நம் மீது நாம் அன்பு கொள்வது போல ஏன் அடுத்தவரை அன்பு செய்ய மறந்தோம்? என்று சிந்திப்போம். அடிபட்டு கிடந்தவனுக்கு நல்ல சமாரியன் இரக்கம் காட்டியது போல நாம் அனைவரும் ஒருவர் மற்றவர் மீது இரக்கம் காட்டவும், அன்பு செய்யவும், கடமைப்பட்டுள்ளோம். நமக்கு ஒரு இன்னல் நேரும்பொழுது யாரேனும் ஒருவர் வந்து நமக்காக பரிந்து பேச மாட்டாரா? நம் இன்னலை துடைக்க மாட்டாரா? என ஏங்குகிறோம். அதுபோலத்தான் இந்த உலகத்தில் நாம் அடுத்தவர்களின் இன்னல்களை துடைக்க முன்செல்கின்றோமா? என்ற கேள்வியை எழுப்பி பார்க்க வேண்டும்! நம்மை நாம் நேசிப்பது போல அடுத்தவரை நேசிக்கவேண்டும். அடுத்தவர் என்பவர் எங்கோ இருப்பவர் அல்ல. நம் அருகில் இருப்பவர்களே! நம் குடும்பத்தில் இருப்பவர்களே! கணவனுக்கு மனைவியே மனைவிக்குக் கணவனே பெற்றோருக்குப் பிள்ளைகளே என அருகாமையில் இருக்கக்கூடியவர்களை, அருகாமையில் உள்ள அடுத்தவர்களை அன்பு செய்யவும், கண்டுகொள்ளவும் அவர்களுடைய நலனில் அக்கறை காட்ட கூடியவர்களாக நாம் வாழ இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.
இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய கடிதத்தில் கூறுகிறார், அருள்கூர்ந்து உங்களை அழைத்த அவரை விட்டுவிட்டு இவ்வளவு குறுகிய காலத்தில் வேறு ஒரு நற்செய்தியை ஏற்றுக் கொண்டு விட்டீர்களே? எனக்கு வியப்பாய் இருக்கிறது என்றார். ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள் என்பதுதான் ஆண்டவர் இயேசுவின் கட்டளையாக இருந்தது. ஆனால் மிகவும் குறுகிய காலத்தில் இன்று அடுத்தவரை தொடுவதே நமக்கு நோய் வந்துவிடும், நம் உயிருக்கு ஆபத்தாகி விடும் என்ற சூழலில் வீட்டில் உள்ளவர்களைக் கூட தொடவும், அவர்களோடு உறவாடவும், நாம் மறுத்து மனிதநேயமற்ற முறையில் வாழக் கூடியவர்களாக நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். தொழுநோயாளர்களை இயேசு தொட்டு குணமாக்கினார். அன்னை தெரசா வீதியில் வீசப்பட்டவர்களை அள்ளி எடுத்தார். தொழுநோயாளிகளின் புண்களை துடைத்தார். புனித தமியானை பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். தொழுநோயாளர்களுக்காக பணி செய்து தானும் தொழுநோயால் ஆட்கொள்ளப்பட்டு இறந்து போனார். இன்றும் தொழுநோயாளிகளின் பாதுகாவலராக அவரை திருஅவை நினைவு கூறுகிறது.
துன்பத்தில் வாடுபவனின் துயர் துடைக்க முன்வரும் போது நாமும் அத்துன்பத்தினால் இறக்க நேரிடுமாயின் இதை விட இன்பம் வேறென்ன இருக்கும்! அடுத்தவருக்காக நம்மையே இழப்பது தான் வாழ்வு. கணவன் மனைவிக்காகவும், மனைவி கணவனுக்காகவும், பெற்றோர் பிள்ளைகளுக்காகவும், பிள்ளைகள் பெற்றோருக்காகவும் ஒருவர் மற்றவருக்காக தியாகம் செய்து அன்பின் அடிப்படையில் தங்களை தாங்கள் அன்பு செய்வது போல அடுத்தவரை செய்ய வேண்டும். இந்த கட்டளையை எப்படி குறுகிய காலத்தில் நீங்கள் மறந்துவிட்டீர்கள்? என புனித பவுலடியார் கலாத்தியர் மக்களைப் பார்த்து எழுப்பிய அதே கேள்வியை இன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மைப் பார்த்து எழுப்புகிறார். இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்லவிருக்கிறோம்? இனி எங்கள் வாழ்வைத் திருத்திக் கொள்கிறோம் என்பதா பதில்? அல்லது இனியும் நாங்கள் இப்படி தான் இருப்போம் என்பதா உங்கள் பதில்? கேள்வியை இறைவன் எழுதிவிட்டார். பதில் கூறக் கூடிய இடத்தில் இருப்பவர்கள் நீங்கள். இந்த மறையுரைைைை சிந்தனையை எத்தனை பேர் வாசிக்கிறீர்கள் என்று தெரியாது. ஆனால் வாசிக்கும் உங்களிடத்தில் இந்த கேள்விக்கு உங்கள் பதில் என்ன? நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று சிந்தியுங்கள்.
உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ள வகையில் அடுத்தவருக்கானதாக அமைய இன்றைய நாளில் இறைவனது அருளை வேண்டி நமக்காக இன்னுயிரை அளித்த ஆண்டவர் இயேசுவைப் போல நாமும் அடுத்தவர் நலனை கருத்தில் கொண்டு, இந்த வாழ்வை அடுத்தவருக்கு உரித்தான வாழ்வாக மாற்றிட, இயேசுவின் பாதையில் முயல்வோம். வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை என்பார்கள். அதை சற்று மாற்றி, "வாழ்வது ஒரு முறை, வாழவைப்போம் பல தலைமுறைகளை" என்று வாழவும், வாழ்வால் பிறருக்கு பாடம் கற்பிக்கவும், அடுத்தவருக்காக இன்னுயிரை இழக்க முன்வந்து இயேசுவின் சீடர்கள் நாம் என்பதை செயலால் காட்டிட உங்களை இன்றைய நாளில் அன்போடு அழைக்கிறேன். இறைவார்த்தை வழியாக இயேசு இன்று நம்மை அழைக்கிறார். அவரின் குரலுக்கு உங்கள் பதில் என்ன? சிந்தனைக்கு உங்களிடமே விட்டுச் செல்கிறேன். இறைவனுக்கு நன்றி! இறைவன் தொடர்ந்து நம்மை வழிநடத்த உங்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் செபிக்கின்றேன்!
Great! Well done! May God bless you abundantly throughout your mission!
பதிலளிநீக்குநல்லதொரு சிந்தனை.. 👌
பதிலளிநீக்கு