"சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள்!"
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வுலகில் நடக்கக்கூடிய அனைத்தும் கடவுளின் திட்டத்தின்படி செயல்பட்டு வருகின்றன எனக் கூறுகிறார். கடவுள் அனைத்தையும் முன் குறித்து வைத்திருக்கிறார்! அவர் முன் குறித்து வைத்ததன் அடிப்படையில் அவரது திருவுள திட்டத்தின்படியே உலகில் நடக்கக்கூடிய அனைத்தும் நடக்கிறது என கூறுகிறார். அப்படியாயின் நம் வாழ்வில் நடக்கக்கூடிய அனைத்தையும் இறைவன் அனுமதிக்கின்றாரா? என்ற கேள்வியை உள்ளத்தில் எழுப்பி பார்க்கலாம்.
அவ்வாறு எழுப்பும் போது ஒரு உதாரணத்தின் மூலம் இக்கேள்விகளுக்கு விடை கொடுக்கலாம் என்று எண்ணுகிறேன்.
ஒரு அழகான மெழுகுதிரி எரிந்து ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. அதை பார்த்து, அதைத்தொட வேண்டும் என்ற ஆவலோடு ஒரு குழந்தை அதை நோக்கி ஓடுகிறது. அப்போது தாயானவள் அதை தொட்டால் உனக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி தடுக்கிறார்.
அது போலவே ஒரு குழந்தை உடல் நலமற்று இருக்கிறது. அந்த குழந்தை மருந்து அருந்துவதற்கு விருப்பம் கொள்ளவில்லை எனவே மருந்து வேண்டாம் என அடம்பிடிக்கிறது. ஆனால் தாயானவள் கட்டாயப்படுத்தி மருந்தை கொடுக்கிறாள்.
அதுபோல்தான் தாயைப் போல கடவுளும் இவ்வுலகத்தில் பல நேரங்களில் நல்லதை நாம் செய்ய முன்வரும் போது நாம் விரும்பியதை செய்ய முன்வரும் போது அது நமக்கு நல்லதாக இருக்காது என்பதை கூறி தடுக்கிறார். பல நேரங்களில் இது நமக்கு நல்லதாக இருக்கும் என்ற அடிப்படையில் கட்டாயப்படுத்தி சிலவற்றை நமக்கு தர வேண்டும் என விரும்புகிறார். இதன் அடிப்படையிலேயே நமது வாழ்வில் பல காரியங்கள் நிகழ்கின்றன என எண்ணலாம். ஆனால் நாம் எதை தேடிச் செல்கிறோம்? எதை வெறுக்கிறோம்? என்பது இன்றைய நாளில் நமக்குள் நாம் எழுப்பி பார்க்க வேண்டிய கேள்வியாக அமைகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட கடவுள் "எச்சரிக்கையாக இருங்கள். வெளிப்படாமல் மூடி இருப்பது ஒன்றும் இல்லை. அறியப்படாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை எனக் கூறுகிறார். நீங்கள் இருளில் பேசியதை ஒளியில் கேட்பீர்கள். காதோடு காதாக பேசியதை வீட்டின் மேல் தளத்தில் இருந்து அறிவிக்கப்படும் என கூறுகிறார். அப்படியாயின் கடவுளின் பார்வையில் மறைந்திருப்பது எதுவும் இல்லை. இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் நாம் செய்யக்கூடிய பலவற்றை கடவுள் அறியமாட்டார். கடவுளுக்குத் தெரியாது என எண்ணிக் கொண்டு செய்கிறோம். ஆனால் கடவுள் அனைத்தையும் அறிந்தவராக இருக்கிறார்.
விவிலியத்தில் இதற்கு சிறந்த ஒரு உதாரணத்தை குறிப்பிடலாம். யோசேப்பின் வாழ்வை நாம் கேள்விப்பட்டிருப்போம்.
யாக்கோபின் 12 புதல்வர்களில் ஒருவர் இந்த யோசேப்பு.
இவர் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக இவரது சகோதரர்கள் இவரை அடிமையாக விற்ற போது இவர் மீது நாட்டம் கொண்ட அரசனின் மனைவி இவரை அடைவதற்காக பல முயற்சிகளில் ஈடுபடுகிறார். யாருமே இல்லாத ஒரு நேரத்தில், "இங்கு யாருமில்லை"என்னோடு என் ஆசைக்கு இணங்கு என யோசிப்பை அழைக்கும்போது யோசேப்பு கூறினார் இந்த இடத்தில் யாரும் இல்லை யாரும் நம்மை பார்க்க மாட்டார்கள். ஆனால் கடவுள் நம்மைப் பார்த்துக் கொண்டிருப்பார் அவரின் பார்வையில் நான் தீயவனாக வாழ விரும்பவில்லை எனக் கூறினார்.
இந்த உலகத்தில் யாருக்கும் தெரியாது நாம் எண்ணிக் கொண்டு செய்யக்கூடிய பல தவறான காரியங்களும் கடவுளின் பார்வையில் இருந்து தப்புவது இல்லை. கடவுள் அனைத்தையும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார். சில நேரங்களில் தவறு என்பதை நமக்குச் சுட்டிக் காட்டுகிறார். சில நேரங்களில் நாம் அவரின் குரலை கேட்காமல் தவறுகளில் ஈடுபடும் போது நாம் அந்த சிக்கல்களில் உளலும் போது நம்மை மீட்டெடுப்பதற்கான முயற்சியிலும் அவர் ஈடுபடுகிறார். இன்றைய நாளில் நாம் எவ்வாறு இருக்கிறோம் என சிந்திக்க அழைக்கப்படுகிறோம். நமது செயல்கள் அனைத்தும் கடவுளுக்கு தெரியாது என எண்ணிக் கொண்டு நாம் செய்யக்கூடிய செயல்களை சிந்தித்துப் பார்ப்போம். அந்த தீய செயல்களிலிருந்து மாற்றம் பெற்றவர்களாக கடவுளின் கண்களிலிருந்து எதுவும் தப்ப இயலாது என்பதை உணர்ந்து கொண்டவர்களாக நாம் வாழ இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.
ஒரு பண்ணை வீட்டில் ஒரு முதலாளி இருந்தார். தற்செயலாக தோட்டக்காரனின் மனைவியை பார்த்தார். அந்த மனைவியின் மீது அவருக்கு ஒரு விதமான ஆசை இருந்தது. அந்த ஆசையின் அடிப்படையில் அந்த தோட்டக்காரனுக்கு ஒரு பணியை கொடுத்து அவ்விடத்தை விட்டு அகற்றினான். பிறகு தோட்டக்காரனின் வீட்டுக்குள் நுழைந்து இப்போது எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு வா என்றார். அப்பெண்ணும் எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு அவரிடம் சொன்னாள், அனைத்து கதவுகளையும் மூடிவிட்டேன், ஒரு கதவை தவிர என்றாள். என்ன
என்ன கதவு அது? எங்கே இருக்கிறது? என்று கேட்டார் அந்த முதலாளி. அந்த கதவு நமக்கும் இறைவனுக்கும் இடையே இருக்கக்கூடிய கதவு அந்த கதவை என்னால் மூட முடியாது என்றாள். அவள் சொன்னதைக் கேட்டதும் அந்த முதலாளி வியர்த்து விறுவிறுத்து போனார். அவளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு தலை குனிந்தபடியே வெளியேறினார்.
இதுதான் உண்மையான பக்தியாக சித்தரிக்கப்படுகிறது. நாம் எந்த இடத்தில் இருக்கிறோம்? என்ன செய்கிறோம்? என்பதை சிந்தித்துப் பார்ப்போம். இறைவன் எல்லா இடத்திலும் இருக்கிறார். அவர் எப்போதும் நம்மை கண்காணித்தபடி தான் இருக்கிறார் என்று தத்துவம் பேசிக் கொண்டிருப்பது மட்டுமே வாழ்க்கைக்கு உகந்ததல்ல. அவ்வாறு தத்துவம் பேசுவதை விட அதை உணர்ந்தவர்களாக தவறுகள் செய்வதில் இருந்து விடுபட்டு நல்லதை மட்டும் செய்து இறைவனின் உண்மை சீடர்களாக வாழ வேண்டும் என்பதே இறைவனின் ஆசை. அந்த ஆசையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மனிதர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அந்த இறைவனது ஆசையை நிறைவேற்றக் கூடியவர்களாக இறைவன் விரும்பக்கூடிய நல்ல மனிதர்களாக நாம் மாறிட இன்றைய நாளில் இறைவனது அருளை வேண்டி இணைந்து தொடர்ந்து ஜெபிப்போம்.
இறுதியாக உங்களுக்கு இன்று ஒரு கேள்வியை எழுப்புகிறேன். சரியான விடை கூற கூடியவர்களுக்கு கண்டிப்பாக பரிசு தரப்படும்.
யாக்கோபின் குழந்தைகள் எத்தனை பேர்?
13
பதிலளிநீக்குஇறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார் என்று வாய் சொல்லால் சொல்வதோடு இருந்துவிடாமல், எங்கும் நிறைந்த இறைவனை அனுபவித்தது தீய செயல்கள் செய்வதிலிருந்து விழிப்பாயிருப்போம்...என்ற சிந்தனை அருமையாக உள்ளது.....மேலும் சிறக்க வாழ்த்துகள்...
பதிலளிநீக்கு"சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள்." மறக்கமுடியாத இறைவார்த்தை.
பதிலளிநீக்குநன்றி சகோ. 🙏 அருமையான பதிவு. 👍