செவ்வாய், 20 அக்டோபர், 2020

எதை தொடங்குவது இந்நாளில்? (21.10.2010)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அன்புக்குரிய நண்பர்களே இன்றைய வாசகத்தை வாசித்ததும் என் மனதில் வந்த ஒரு நபர்  எனக்கு தெரிந்த ஒரு வயதான நாங்கள் இருக்கக்கூடிய இடத்தை பாதுகாக்கக்கூடிய ஒரு காவல் பணியாளர்.  மிகவும் வயதானவர்.  என்னுடைய கணிப்பு சரி என்றால் என் வயதில் அவருக்கு ஒரு பேரன் இருப்பான் என்பது உண்மை.  ஆனால் எப்போது நாங்கள் வாயில் கதவுக்கு அருகே சென்றாலும் உடனே அமர்ந்திருக்கக் கூடிய அவர் எழுந்து நின்று எங்களுக்கு வணக்கம் வைப்பார்.  அவர் வணக்கம் வைப்பதை பார்க்கும்போதெல்லாம் மனதுக்குள் ஒரு விதமான நெருடல் எழும் காரணம்  என்னுடைய வயதை விட மிகவும் அதிக வயதான அவர் ஏன் எழுந்து நின்று எனக்கு வணக்கம் வைக்க வேண்டும். ஒருவேளை அவர் இங்கு காவல் பணி செய்வதால் தானோ என்ற எண்ணம் எழுந்தது. ஒருநாள் அவரை தனிமையில் சந்தித்து ஐயா உங்கள் வயதை விட நான் மிகவும் சிறியவன் இந்த வழியே நான் கடந்து செல்லும்போது நீங்கள் எனக்காக எழுந்து நின்று வணக்கம் வைக்க வேண்டாம்.  நான் உங்கள் பேரன் போன்றவன் என்று கூறினேன்.  உண்மையில் நாங்கள் நன்றாக உறங்குகிறோம் என்றால், அவர் உறங்காது எங்களை காவல் காத்துக் கொண்டிருப்பதால் தான். வயதான காலத்திலும் வருமானம் என்பதைத் தாண்டி அடுத்தவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அனுதினமும் தூங்காது விழிப்போடு இருந்து தனது பணியினை செய்து கொண்டிருக்கக் கூடிய அந்த வயதான தாத்தாவை பார்க்கும்போது நான் ஒரு நல்ல பொறுப்பான பணியாளனா? என என்னையே நான் சில நேரங்களில் கேள்விக்கு  உட்படுத்திக் கொள்வதுண்டு.
 
இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக ஒரு பணியாளன் எப்படி விழிப்போடு இருந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதனை இயேசு கிறிஸ்து நமக்கு விளக்குகிறார்.
தலைவன் எப்போது வருவான் என அறியாத வண்ணமாக ஒரு பணியாளன் தனது கடமைகளை சிறப்பாக செய்து கொண்டிருந்தால் அவன் மதிக்கக்கூடிய நல்ல பணியாளனாக இருப்பான். மாறாக தலைவன் வருகை எப்போது என அறியாது தலைவன் வரும்போது வரட்டும் என்று கூறிவிட்டு தலைவன் இல்லாத நேரத்தில் தன்னுடைய விருப்பப்படி செயல்பட கூடிய பணியாளன் அவன் நல்ல பணியாளனாக இருக்க இயலாது என்பதை இயேசு தன்னுடைய வார்த்தைகளின் மூலம் நமக்கு விளக்குகிறார்.

அதுபோலவே ஒரு பணியாளன் திருடன் எப்போது வருவான் என்பதை அறியாத வண்ணம் எப்போதும் பொறுப்புடன் செயல்பட கூடியவனாக இருந்தால் திருட விடாமல் பொருள்கள் அனைத்தையும் பாதுகாத்து தனது பணியினை சிறப்பாக செய்பவனாக இருப்பான்.  அதே அந்தப் பணியாளன் பொறுப்பற்றவனாக இருந்தால் திருடன் வரக்கூடிய நேரத்தை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் பொருள்கள் அனைத்தையும் திருடப்பட்டு விட காரணமாகவும் அமைந்து விடலாம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இடம்பெறக்கூடிய உவமையில் காணப்படும் தலைவனை நாம் மானிட மகனுக்கு இணையாக ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
மானிட மகனின் வருகை எப்போது என அறியாது இருக்கக்கூடிய  அவரின் பணியாளர்களாக நாம் இம்மண்ணுலகில் சிறப்பாக நமது பணிகளை பொறுப்போடு இச்சமூகத்தில் செய்திட அழைக்கப்படுகிறோம். இயேசு இரண்டாம் முறை வரும்பொழுது பொறுப்புள்ள பணியாளர்களாக நாம் இருக்க வேண்டும் என்ற செய்தியை இன்றைய வாசகத்தின் வழியாக நமக்கு இயேசு உணர்த்துகிறார். 

இது உவமையில் காணப்படக்கூடிய திருடன் என்ற உருவகத்தை நாம் இவ்வாறு பொருள் கொள்ளலாம்.  திருடன் எனப்படுபவன் நம்மிடம் இருக்க கூடிய பொருட்களை திருடிச் செல்ல கூடியவனாக இருக்கிறான். நாம் விழிப்போடு இல்லை என்றால் நம்மிடம் இருக்கக்கூடியவற்றை இழக்க நேரிடும். நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொருட்களை  பாதுகாக்க இயலாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டு கூடியவர்களாக மாறுவோம். நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட ஒன்றை நாம் பாதுகாக்க தவறினால் அல்லது திருடன் விடக் கூடியவர்களாக மாறினால் நாம் விழிப்போடு இருந்து நமது பொறுப்புகளை செய்யாத நேர்மையற்ற பணியாளர்களாக சித்தரிக்கப்படுகிறோம் என்ற செய்தியை இன்றைய நற்செய்தி வாசகத்தில் இருந்து நாம் பெறலாம். எனவே நம்மிடம் கடவுள் ஒப்படைத்த ஒவ்வொன்றையும் விழிப்போடு இருந்து பொறுப்பை உணர்ந்தவர்களாக பொறுப்புடன் பாதுகாக்க வேண்டியது நம் அனைவருக்கும் உரியது என்ற செய்தியை இன்றைய வாசகங்கள் நமக்கு ஆழமாக எடுத்துரைக்கின்றன.

இன்று நாம் வாழும் இந்த சமூகத்தில் நாம் காணக்கூடிய ஒவ்வொன்றும் நம்   பொறுப்போடு பாதுகாப்பதற்காக இறைவனால் நமக்குத் தரப்பட்டவைகள். அவை உயிருள்ள பொருட்களாக இருக்கலாம் அல்லது உயிரற்ற பொருட்களாகவும் இருக்கலாம். ஆனால் நாம் இன்று எவ்வாறு அவற்றை பாதுகாத்து பராமரிக்கும் என சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.
இன்று நம்மில் பலர் பாரதிதாசனின் வார்த்தைகளுக்கு ஏற்ப 
"தன் பெண்டு 
தன் பிள்ளை 
சோறு வீடு
 சம்பாத்தியம் 
இவையுண்டு தானுண்டு" என வாழக் கூடியவர்களாக மாறி வருகிறோம்.  நமது வீடு, நமது உறவுகள் என நாம் எண்ணக் கூடியவைகள் மட்டுமே நமது பொறுப்பு என்ற எண்ணம் கொண்டவர்களாக  நாம் நாளுக்குநாள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். 
 ஆனால் இன்றைய வாசகங்கள் வழியாக இயேசு இம்மண்ணுலகில் நாம் காணக்கூடிய ஒவ்வொரு நபர்களும், நம்மை சுற்றி இருப்பவர்கள் மட்டும் அல்ல, நம் கண்ணால் காணக்கூடிய ஒவ்வொருவருமே இறைவனால் நாம் பாதுகாக்க வேண்டும் என நம்மிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள். இந்த உண்மையை உணர்ந்தவர்களாக நாம் நமது பொறுப்பை உணர்ந்து கண்ணில் காணும் ஒவ்வொருவரையும் அன்போடு நேசிக்கவும் பாதுகாக்கவும் பராமரிக்கவும் நாம் அழைக்கப்படுகிறோம். அப்படி செயல்படும்போது  இயேசு கூறக்கூடிய உண்மையான நல்ல பணியாளர்களாக நாம் இருப்போம் என்பது உண்மை.

  நாம் வாழும் இந்த உலகத்தில் குப்பையில் வீசப்பட்ட குழந்தைகளை தூக்கி எடுத்து, தொழு நோயாளர்கள் என ஓரம் கட்டப்பட்டவர்களை அரவணைத்து அவர்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த அன்னை தெரசா இந்த பொறுப்பை உணர்ந்து செயல்பட்டவர். எனவேதான் நல்ல பணியாளராக இன்றும் அவர் நினைவு கூறப்படுகிறார் . இவரைப்போலவே எண்ணற்ற மனிதர்களை நாம் மேற்கோள் காட்டலாம்.  

திண்டுக்கல் மறைமாவட்டத்தில் இருக்கக்கூடிய ஜல்லிக்கட்டு பிரிவு என்ற பகுதியில் புனித வளனார் இறக்கும் தருவாயில் உள்ள முதியோர் இல்லத்தை அருள்பணியாளர் தாமஸ் என்பவர் நடத்தி வருகிறார்.  நாம் வாழக்கூடிய இந்த சமூகத்தில் கவனிப்பாரற்று வீதிகளில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரையும் தேடிச் சென்று அவர்களை தன்னுடைய இடத்துக்கு அழைத்துக்கொண்டுபோய் அவர்களுக்கு தேவையான உணவு, உடை, அடிப்படை மருத்துவ வசதிகளை செய்து கொடுத்து பராமரிக்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார். 
 
கோரோனோ தொற்றுநோய் அச்சத்தின் காரணமாக இறந்தவர்களின் சடலத்திற்கு அருகே செல்ல அஞ்சிய மக்களுக்கு மத்தியில் இஸ்லாமிய அமைப்பைச் சார்ந்த சில சகோதர அமைப்புகள் இறந்தவர்களின் உடலை தங்கள் உறவுகள்  என்ற நோக்கத்தோடு எடுத்துச் சென்று இறுதி அஞ்சலி செலுத்திய நிகழ்வை நாம் மறந்துவிட முடியாது . 

அதுபோலவே மலைவாழ் ஆதிவாசி பழங்குடியின மக்களின் நலனுக்காக 30 ஆண்டுகளாக குரல் கொடுத்த அருள்தந்தை ஸ்டேன் சுவாமி என்பவருடைய கைதை எதிர்த்து அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் இணைந்து திருச்சியில் 20.10.2020 அன்று நடத்திய ஆர்ப்பாட்டம் மனித நேயத்தின் மறு உருவம் ஆகும். 

இதுபோன்ற எத்தனையோ நல்ல பணியாளர்கள் இச்சமூகத்தின் தனக்குரிய பொறுப்புகளை உணர்ந்து செயல்பட கூடிய பணியாளர்களை நாம் மேற்கோள் காட்டலாம். ஆனால் இன்றைய நாளில் நீங்களும் நானும் நல்ல பணியாளர்கள் என சொல்லக்கூடிய அளவிற்கு நமது செயல்பாடுகள் இருக்கின்றதா? என்ற கேள்வியை நாம் எழுப்பி பார்க்க அழைக்கப்படுகிறோம்.

 நாம் அனைவரும் நல்ல பணியாளர்களாக இயேசுவைப்போல பொறுப்போடு இச்சமூகத்தில் செயல்பட இறைவன் இன்று நம்மை தனது நற்செய்தி வாசகத்தில் வழியாக அழைக்கிறார். அழைக்கக்கூடிய ஆண்டவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாக, நமது வாழ்வை மாற்றி நல்ல பணியாளர்களாக இச்சமூகத்தில் உருவாகிட, நமது செயல்கள் நல்ல பணியாளரின் செயல்களாக மாற இறைவனின் குரலுக்கு செவி கொடுத்து வாழ்வை மாற்றிக் கொள்ள, நமது பயணத்தை இனிதே தொடங்குவோம் இந்நாளிலிருந்து....

3 கருத்துகள்:

  1. இந்நாளில் இருந்து இயேசுவின் பொறுப்பான பணியாளர்களாக நமது வாழ்வை தொடங்குவோம் என்று கருத்து ஒவ்வொருவரையும் இயேசுவுக்காக வாழ அழைக்கின்றது! மிகவும் அருமை!

    பதிலளிநீக்கு
  2. இன்றைய நாளில் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கப் படங்களும் மிகவும் அருமை!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...